Monday, June 7, 2010

EXCLUSIVE...ஜெகத் கஸ்பர்: ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு

by எல்லாளன்
Source: http://tamilthesiyam.blogspot.com/2010/06/exclusive.html

ஜெகத் கஸ்பர் ராஜ் என்னும் பாதிரி இந்திய, இலங்கை அரசுகளின் உளவாளியாகப் பயன்பட்டுள்ளார் என்று ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தி வினவிலும் புதிய கலாச்சாரத்திலும் சில கட்டுரைகள் வந்துள்ளன. புலிகள் இருந்த போது புலிகளை வைத்து கல்லாக் கட்டியவர் புலிகளுக்குப் பின்னர் புலத்து தமிழர்களை குறி வைத்தார். வினவு அம்பலப்படுத்தியதும் பல ஈழ ஆதரவாளர்கள் இந்த உளவாளியை விட்டு ஒதுங்கினார். புலத்து மக்களின் பாக்கெட்டுகளை குறி வைத்த ஜெகத் கஸ்பருக்கு எதிர்பார்த்த ஆதரவு இல்லாமல் போக இப்போது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த பேரினவாத ராஜபக்சேவிடமே மீள் கட்டுமான ப்ராஜெக்டைப் போட ரெடியாகிவிட்டார்….. உளவாளிகள் எப்போதும் தங்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதில்லை. என்றாலும் சூழலும் காலமும் கனியும் போது உண்மை முகத்தை விரும்பியே வெளிப்படுத்துவார்கள். ஜெகத் இப்போது வெளிப்படுத்தியிருக்கிறார்.

சென்ற வருடம் கொடூரமான இன அழிப்புப் போர் ஈழத் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட போது இந்தப் பாதிரியால் ” இனப்படுகொலைக்கு எதிரான இந்தியர்கள் ” என்ற ஸ்லோகனோடு கார்த்திக் சிதம்பரம், ஜெகத் கஸ்பர் ராஜ் ஆகியோரால் துவங்கப்பட்டதுதான் “நாம்” என்னும் அமைப்பு. ஒரு தன்னார்வ நிறுவனமாக பதியப்பட்டுள்ள இந்த நிறுவனம், எழுபதாயிரம் மக்களைக் கொன்றொழித்த கொலைகார ராஜபட்சேவுக்கும் கொலைக்குத் துணைபோன போர் வெறி இந்தியாவுக்கும் ஒரு கோரிக்கை வைத்துள்ளது . நாம் அமைப்பின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிகை இதுதான்,

“இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டு கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் புனர்வாழ்வு (Rehabitation) பொருண்மிய மேம்பாடு (Economic Development) அரசியற் தீர்வு (Political Settlement) நீதியிலமைந்த இணக்கப்பாடு (Justice based Reconciliation) நான்கையும் ‘ நாம்’ அமைப்பு வலியுறுத்துகிறது.உடனடித் தேவை புனர்வாழ்வு என வரையறுக்கிறோம். அதே வேளை இந்திய மக்கள்- குறிப்பாக நல்லுள்ளம் கொண்ட தமிழக மக்கள் புனர்வாழ்வு முயற்சிகளில் தங்களை இணைத்துக் கொள்ள கட்டமைப்பு செய்யப்பட்ட நிறுவன ஒழுங்கு (Stuctural Mechanism) இல்லாதிருப்பது பெரும் குறையாயுள்ளது. இக்குறையை நிவர்த்தி செய்ய ‘தமிழர் புனர்வாழ்வு மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கான இந்திய -இலங்கை கூட்டமைப்பு (தமிழில் இருப்பதற்கும் ஆங்கிலத்தில் இருப்பதற்குமான வார்த்தை வித்தியாசத்தையும் கவனியுங்கள்)’ ( Indo-Lanka joint mechanism for Rehabilitation & Reconstruction) என்ற உயர்நிலை அமைப்பினை பரிந்துரைக்கிறோம்.”

“இருநாடுகளின் முக்கிய அமைச்சர்கள், அதிகாரிகள், தமிழக முதல்வர், பாராளுமன்ற உறுப்பினர்கள், பல்சமயத் தலைவர்கள், ரோட்டரி-லயன்ஸ் போன்ற சமூக அமைப்புகள் மற்றும் தொழில் -வர்த்தக அமைப்புக்களின் பிரதிநிதிகளை கொண்டதாக இந்த அமைப்பு உருவாக்கப்படலாம். எதிர்வரும் ஜுன் 08 ம் திகதி இலங்கை அதிபர் திரு. மகிந்த ராஜபக்சே புது டில்லி வருவதாய் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தருணம மேற் சொன்ன பரிந்துரையை இந்தியப் பிரதமர் முன்வைத்து செயல்வடிவம் பெறச் செய்திட வேண்டுகிறோம். உடனடி புனர்வாழ்வு தேவைகள் என்னவென்பதை பல்வேறு தன்னார்வ அமைப்புக்கள் அடையாளப்படுத்தியுள்ளன. அவற்றினடிப்படையில் உடனடிப் பணிகள் தொடங்கப்பட்டு பின்னர் பொருண்மிய மேம்பாட்டு திட்டங்களாக விரிவு செய்யப்படலாம். இதற்கென மத்திய மாநில அரசுகள் ஆதார நிதியொன்றை அறிவிப்பதையும் தமிழுலகம் காலம் கருதிய நற்செயலாய் வரவேற்கும் புனர் வாழ்வு- பொருண்மிய மேம்பாட்டு திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அதே வேளை நீதியான அரசியற் தீர்வு தான் நிரந்தர அமைதிக்கு வழி என்பதையும் வலியுறுத்துகிறோம்.”

“தமிழர் புனர்வாழ்வு மற்றும் பொருண்மிய மேம்பாட்டுக்கான இந்திய -இலங்கை கூட்டமைப்பு” (Indo-Lanka joint mechanism for Rehabilitation & Reconstruction) என்பதுதான் ஃபாதர் போட்டிருக்கும் மெகா ப்ராஜெக்ட்… இதில் விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், ஏசியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் சசிகுமார், டெக்கான் குரோனிக்கல் பத்திரிகையின் சென்னைப் பொறுப்பாளர் பகவான் சிங் என பெரிய ப்ராஜெக்டுக்காக பெரிய மனிதர்கள் கைகோர்த்திருக்கிறார்கள். ஆக இந்த பெரிய மனிதர்கள் யார் என்பதையும் பார்த்து விடுவோம்.


அதற்கு முன்னால் இது தொடர்பாக சென்னையில் நாம் அமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசிய முன்னாள் பேராசிரியரும், புலி ஆதரவாளரும், இந்நாளில் கருணாநிதி ஆதரவாளருமான சுப.வீரபாண்டியன் பேசும் போது “இத்திட்டம் வெற்றி பெற வேண்டும் என்றால் உள்ளூர் அரசியலை பேசக் கூடாது” என்றார். அதாவது புலிகளை காட்டிக் கொடுத்து கழுத்தறுத்த சந்தர்ப்பவாதிகளைப் பற்றி பேசினால் எல்லாமே குழம்பி விடும் என்கிறார். மேலதிகமாக இதில் கருணாநிதி பெயர் கெட்டு விடக் கூடாது என்கிற கவலை பேராசிரியருக்கு உண்டு… ஆனால் உள்ளூர் அரசியலைப் பேசாமல் உலக அரசியலைப் பேச முடியாது என்பதாலும் மிக ஆபத்தான ஒரு ஒப்பந்தத்தை ஜெகத் துவக்கி வைப்பதாலும் மக்களிடம் இதை அம்பலப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாலும் தொடர்ந்து சுட்டிக்காட்டி எழுதுகிறோம்.

இனி ப்ராஜெட் கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ள பெரிய மனிதர்களைப் பார்ப்போம்.

ஜெகத் கஸ்பர் ராஜ் ( பச்சைத் தமிழன்)

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து வருமானம் ஈட்டும் பாதிரித் தொழிலுக்கு வந்தவர். பங்குப் பாதிரியாராய் இருந்த இடத்தில் இந்து, கிறிஸ்தவர் மோதல் வெடிக்க அங்கிருந்து செழிப்பான சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்திற்கு அனுப்பப்பட்டார். அந்தத் தொடர்புகள் மூலம் பிலிப்பைன்சில் இருக்கிற வெரித்தாஸ் வானொலிக்குச் (சி.ஐ.ஏ கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம்) சென்றவர் அந்த தொடர்புகள் மூலம் புலிகள் அமைபிற்குள் தந்திரமாக நுழைந்தார். போருக்குப் பின்னர் நடேசன் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்டதில் தனது பங்கை இவரே உளறி வைத்து வினவு அதை அம்பலப்படுத்திய போது அருட்தந்தை இருட் தந்தையானார்.

ஆனாலும் விட்ட பாடில்லை, போராளிகளின் வீரமரணங்களை நினவு கூறும் நவம்பர் 27 மாவீரர் தினத்தன்று “நாம்” அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான (ப.சிதம்பரத்தின் மகன்) கார்த்தி சிதம்பரத்தின் மனைவியான ஸ்ரீநிதி சிதம்பரத்தின் பரத நாட்டியத்தை அரங்கேற்றி கொல்லபப்ட்ட மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுதான் ஈழ மக்களுக்கு பாதிரி காட்டிய பாசத்துக்கு எடுத்துக்காட்டு. ஊரே சிரித்த சிரிப்பில் இனி இந்த கடை கல்லா கட்டாது என்பதால் ஈழ ஆதரவுக் கடையை மூடி விட்டு இப்போது நேரடியாக ராஜபக்சேவிடமே ப்ராஜெக்டுக்கு தனது டில்லி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். விரைவில் இவரது வித விதமான விஸ்வரூபங்களைக் கண்டு நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

இதற்கு முன்னர் பத்திரிகையாளர்களை ஏமாற்றி இவர் செய்த “மௌனத்தின் வலி” நூலையும் அதன் அரசியல் அயோக்கியத்தனத்தையும் வினவு அம்பலப்படுத்திய போது தவறை உணர்ந்த ஊடகவியலாளர்கள் இந்தப் பாதிரியை விட்டு ஒதுங்கினார்கள். நன்றி கெட்ட நாய், வீட்டுக்காரன் மீதே பாய்கிற மாதிரி உடனே பத்திரிகையாளர்கள் மீதே பாயந்தார் இந்தப் பாதிரி…. உஷாரானவர்கள் அந்தப் பக்கம் மறுபடியும் எட்டிக் கூட பார்க்கவில்லை. எல்லாப் பழியையும் பத்திரிகையாளார்கள் மீது போட்டு விட்டு வழக்கம் போல தப்பிக்கப் பார்த்தார் பாதிரி.

சசிகுமார் ( மலையாளி)

தென்னிந்தியாவில் சன் டிவிக்கு இணையான வரலாற்றைக் கொண்ட மலையாள சேனலான் ஏஷியா நெட் தொலைக்காட்சியைத் துவங்கியவர்களில் ஒருவர் தென்னிந்தியாவின் மிகப்பெரிய என்.ஜீ.ஓ நெட்வொர்க்கைக் கொண்டவர். தன்னார்வக் குழுக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களின் மூலம் கிடைத்த முற்போக்கு முகமூடியை இன்று வரைத் தாங்கிக் கொண்டிருப்பவர். இப்போது ஏஷியன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் என்கிற ஊடகவியளார்களுக்கான உயர் கல்வி மையத்தின் பொறுப்பாளராக இருக்கிறார். இந்தியா, இலங்கை நாடுகளில் உள்ள பெரும் பண்ணை வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் ஏஷியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் நிறுவனம் சசிகுமாருக்குக் சொந்தமானது என்று நீங்கள் நினைத்தால் அங்கே ஏமாந்து போவீர்கள்.

அது இலங்கை அரசின் கொள்கை வகுப்பாளனும் ராஜபட்சே கும்பலின் நெருங்கிய சகாவுமான இந்து ராமுக்குச் சொந்தமானது. சசிகுமார் இந்து ராமின் ஒர்க்கிங் பார்ட்டனர். இந்து ராம், சசிகுமார், இவர்களோடு சேர்ந்துதான் ஜெகத் கஸ்பார் ஈழ மக்களுக்கான ப்ராஜக்ட்டைப் போட்டிருக்கிறார். இந்து ராமின் ஏஷியன் ஸ்கூல் ஆப்ஃ ஜர்னலிசம் இலங்கையில் இருந்து இங்கு வந்து படிக்கும் மாணவர்களுக்கு ஸ்பெஷல் ஸ்காலர்ஷிப் பெற்றுக் கொடுக்கிறது என்பதாகவும் சொல்கிறார்கள். சசுகுமாரின் மனைவிதான் tulika என்றொரு குழந்தைகளுக்கான பதிப்பகத்தை நடத்துகிறார். கணவரைப் போல பணம் கறக்கும் தன்னார்க் குழுக்களின் பிதாமகள் என்றே இவரைச் சொல்லலாம். பார்ப்பன எலைட் பெண்களால் நடத்தப்படும் பான்யன் என்னும் அமைப்பில் சசிகுமாரின் மனைவிக்கும் பங்குண்டு. பான்யன் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்கிற ப்ராஜெக்ட்டை ஈழத்திற்கு விரிவு படுத்தும் நோக்கோடு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

பகவான் சிங் ( தெலுங்கர்)

தமிழகத்தின் பல புலி ஆதரவாளர்கள் புலத்து மக்களின் பணத்தில் குளித்தது போலவே புலத்து மக்களால் அழைக்கப்பட்டு விருந்து வைக்கைப்பட்டவர்களில் இவரும் ஒருவர். 2008 புலிகள் ஆதரவு ஊடக அமைப்பு ஒன்று பிரிட்டனில் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்ட பகவான் சிங் ஈழம் உருவாக்கப்பட்டு விட்டது என்றே பேசினார். பின்னர் 2009- ஜனவரியில் கிளிநொச்சி வீழ்ந்த போது சென்னையில் இருந்த இலங்கை துணைத் தூதர் அம்சாவின் விருந்தினராக கொழும்பு சென்றார். நட்சத்திர விடுதியொன்றில் தங்கியிருந்து விருந்துண்ட பகவான் சிங் சென்னை திரும்பிய பின்னர்தான் இவர் பொறுப்பேற்றிருக்கும் சென்னைப் பதிப்பு டெக்கான் குரோனிக்கலில் இலங்கை அரசின் ஆதரவுக் கருத்துக்கள் தொடர்ந்து வந்தன.

புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசனின் நேர்காணலை எடுத்த பகவான் சிங் அதை வெளியிடாமல் பதிலுக்கு சிறப்புப் பேட்டியாக கருணாவின் பேட்டியை வெளியிட்டது அப்போது அம்பலமானது. அப்போது குமுதம், ஜூனியர் விகடன், தினமலர் இதழ்கள் கூட கருணாவின் பேட்டியை தர்மசங்கடமான அந்தச் சூழலில் வெளியிட்டன. பின்னர் பத்திரிகையாளர்கள் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். போருக்கு எதிராகப் போராடிய பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டு போரைத் தொடுத்த இலங்கை அரசின் சென்னைத் தூதர் அம்சாவிடமே போரை நிறுத்தும் படி மனுக் கொடுக்க வைத்த பகவான் சிங் இப்போது உளவாளி ஜெகத் கஸ்பாரோடு சேர்ந்து ராஜபக்சேவிடமே மனுக் கொடுக்கும் நிலைக்கு வளர்ந்திருக்கிறார்.

ரவிக்குமார் ( பச்சைத் தமிழர்)

இவர் தலித்துக்களின் தத்துவாசிரியன் ரேஞ்சுக்கு புகழப்பட்டார். ஆனால் அதெல்லாம் பழைய கதை. இப்போது பவர் புரோக்கிங், ரியல் எஸ்டேட் என வளர்ந்திருக்கிறார். கும்பகோணத்திற்கு பக்கத்தில் பிரமாண்டமான மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றை கட்டிக் கொண்டிருக்கிறாராம், இந்த பழைய பின் நவீன – தலித் தத்துவாசியிரியர். தனது பிழைப்புவாத அரசியலுக்கு ஏற்றவாறு தான் எழுதும் ஊடகங்களையும் பயன்படுத்திக் கொள்வது இவரது சிறப்பு.

ஜூனியர் விகடனில் இவர் எழுதும் கட்டுரைகள் இவருக்கே இவர் போட்டுக் கொள்ளும் சலாம் வகை. என்றாலும் இங்கே கவனிக்கத் தக்கது இந்தியா வரும் திரு.ராஜபட்சேவை வலியுறுத்தி இந்தோ, லங்கா மீள்கட்டுமானக் கூட்டமைப்பைக் கோரும் ரவிக்குமார் ஒரு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ. கட்சியின் தலைவர் திருமாவளவன். எம்.எல்.ஏ ரவிக்குமாரோ ராஜபக்சேவிடம் கூட்டமைப்பைக் கோருகிறார். திருமாவளவனோ இனவெறியன் ராஜபக்சே வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். இதுதான் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் உறுமல் யோக்கியதை….

ஏ.எஸ் பன்னீர் செல்வம் (பச்சைத் தமிழர்)

கருணாநிதியின் விசுவாசி, சமூக நீதி, திராவிட இயக்க ப்ரியம் எல்லாம் இவருக்கு உண்டு என்றாலும் பார்ப்பனரல்லாத முற்போக்குவாதிகளின் சந்தர்ப்பவாதமே இவரது எழுத்துக்கள். ஈழ விவாகரம் கருணாநிதிக்கு எதிராக திரும்புகிறதே என்று அதிகம் வருத்தபப்ட்டவர்களில் இவரும் ஒருவர். சென்னை பெசண்ட்நகரில் இந்து ராமைப்போல இவரும் panos south asia என்றொரு ஊடகக் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதுவும் மிகப்பெரிய அளவில் பெலோஷிப் பெறுகிற நிறுவனம்தான்.

இந்த ஐவர் கூட்டணியோடு காங்கிரஸ், திமுக மத்திய மாநில அமைச்சர்களும் மெகாப்ராஜெக்டில் களம் இறங்குவார்கள் என்று தெரிகிறது.

இனக்கொலைக்கு எதிரனவாரா? ஜெகத் கஸ்பார்?

போர்ச் சூழலின் போது வருமானம் ஈட்டும் நல்வாய்ப்பாக அமைந்த இலங்கைத் தூதரகத்தை பலரும் அப்போது பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு கிறிஸ்தவப்பாதிரி என்னும் போர்வையில் உலவும் ஜெகத் கூட பயன்படுத்திக் கொண்டார். ஆனால் சென்னை மயிலை பேராயர் சின்னப்பா? அவர்தான் “மௌனத்தின் வலி” நூல் வெளியீட்டு விழாவில் தமிழ் மக்களைக் கொன்ற ராஜபக்சேவை கடவுள் மன்னிக்கவே மாட்டார் என்று சாபம் விட்டவர் ஆயிற்றே? இவர் எப்படி சென்னையில் உள்ள இலங்கைத் தூதகரத்தோடு நெருக்கம் பேணுவார் என்று நினைக்கிறீர்கள்?

கொலைகார ராஜபக்சேவை மன்னிப்பதல்ல…. ராஜபக்சேவின் மயிரைக் கூட கர்த்தர் கழட்ட மாட்டார் என்பது தெரிந்ததனாலோ என்னவோ, இலங்கைத் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ண மூர்த்தியை சென்னை மயிலை பேராயர் சின்னப்பா சந்தித்தார். இந்தச் சந்திப்பு தொடர்பான செய்தியை இலங்கைத் தூதரகத்தின் இதழாக வந்து கொண்டிருக்கும் நீரிணை இதழில் இலங்கைத் தூதரகமே பதிவு செய்திருக்கிறது. தாய் எட்டடி பாய்ந்தால் அதன் கள்ளக் குட்டி பதினாறடி பாய்கிறது. பிஷப் இலங்கைத் தூதரைப் பார்தார் ஃபாதரோ ராஜபக்சேவையே பார்க்கக் கிளம்பிவிட்டார்.

ஒவ்வொரு பேரழிவுமே இவர்களுக்கு நல்வாய்ப்புதான்…

இனக்கொலைக்கு எதிரான இந்தியர்கள் என்ற பெயரில் அமைப்பை வைத்துக் கொண்டு இனக்கொலை செய்த ராஜபட்சேவிடமே மீள் கட்டமைப்பின் பெயரால் நிதி வாங்கப் போகும் ஜெகத் கும்பலின் நோக்கம் இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா? நிதி ப்ராஜெக்ட், தன்னார்வக் குழுக்கள், நிவாரணப் பணிகள், இதெல்லாம் இவரது வருமானத்திற்கான ஒப்பந்தங்கள் என்பதற்கப்பால் நம்மிடம் எஞ்சியிருப்பது ஒரே ஒரு கேள்விதான்……. இலங்கையில் நடந்து முடிந்திருக்கும் iifa திரைப்பட விழாவிற்கு சென்று வந்த இந்தி நடிகர்களுக்கு தென்னிந்தியாவில் தடை? அவர்கள் துரோகிகள்… சல்மான்கானோ, ஷாருக்கானோ செய்தால் அது துரோகம். அதையே ஒரு பச்சைத் தமிழன் செய்தால் அது என்ன தமிழ் தேசிய இறையாண்மையா?

பிபாஷா பாசுவோ, ஜான் ஆப்ரஹாமோ, சல்மான்கானோ சென்றது ஒரு திரைப்பட விழாவுக்காக. ஒரு இனம் என்ற வகையில் நம்மைப் போன்ற உணர்வு ரீதியான பிணைப்போ, புரிதலோ ஈழம் குறித்து இல்லாதவர்கள். இந்த நடிகர்கள் செல்வதால் ஏற்படுவதோ கலாசார சீரழிவு மட்டும்தான். ஆனால் அதை விட பல மடங்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காரியத்தைச் செய்யத் துணிந்து விட்டார்கள் பாதிரி தலைமியில் உள்ள கூட்டணியனர்.

இது iifa விழாவை விட ஆபத்தானது. மலையாளியான சசிகுமாரும், தெலுங்கரான பகவான் சிங்கும், பச்சைத் தமிழர்கள் ரவிக்குமாரும், ஜெகத்தும், பன்னீர் செல்வமும் இணைந்து செயலபடுத்தப் போகும் இந்த இந்தோ இலங்கை ப்ராஜெக்ட் எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களை அரசியல் ரீதியாக அழிப்பதற்கு இந்தியா இலங்கை அரசுகள் கூட்டாக தயாரித்துக் கொடுத்த திட்டம் என்றே தோன்றுகிறது. போருக்குப் பின்னர் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் ராம் என்ற ராஜபட்சே இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு அல்லக்கையை வியந்து போற்றி ஒரு போராளியாக உருவாக்கியதும் இதே ஜெகத்கஸ்பர்தான். நக்கீரன் பத்திரிகை அதற்கான பின் தளமாக இருந்தது.

யார் இந்த பத்திரிகையாளர் பாண்டியன்?

இலங்கை என்று ‘கேணல்’ ராமைச் சந்தித்து நக்கீரனில் செய்தியாக வந்த இவர் யார்? திருப்பூரில் ஒரு பனியன் வியாபாரியாக இருந்தவர், நகைமுகன் என்ற சிவசேனா இந்து வெறியனுக்காக தமிழா, தமிழா, என்றொரு இதழை இவர் நடத்தியிருக்கிறார். நகைமுகனைப் பற்றி எல்லா தமிழக இயக்கங்களுக்குமே தெரியும். இப்போது நகைமுகன், அர்ஜூன் சம்பத், பாண்டியன், பாலகுரு, என புதுக்கூட்டணி. ஒரு காலத்தில் வாடகை கொடுக்கக் கூட வழியில்லாத இந்த பாண்டியன் நாற்பதாயிரம் ரூபாய் கொடுத்து நக்கீரன் இதழில் முழுப் பக்க விளம்பரங்களைக் கொடுக்கிறார். பிரமாண்ட செலவில் பாலகுரு பல கூட்டங்களை நடத்துகிறார். இவர்களின் தலைமைக் குருவாக உருவாகி நிற்பவர்தான் ஜெகத் கஸ்பார் ராஜ்.

ஈழ மக்களின் இன்றைய தேவை

புலிகளின் போராட்ட வழிமுறையும் புலிகளின் அரசியலுமே அவர்களை வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது. மக்களை பார்வையாளர்களாக மட்டுமே நிறுத்தி மக்களை நம்பாத புலிகள் இந்திய, மேற்குலக அரசுகளையும் தமிழக புலி ஆதரவாளர்களையுமே நம்பியிருந்தனர். தமிழக மக்களின் ஆதரவையோ, ஈழ மக்களின் ஆதரவையோ ஒருங்கிணைத்து பேரினவாதத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டத்தை கட்டியமைக்காத புலிகள் இப்போது தாமும் அழிந்து மக்களையும் நடுச் சந்தியில் கொண்டு வந்து நிறுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.

நிலம், உயிர், என எல்லாவற்றையும் இழந்து சுவாசிப்பதற்குக் கூட திராணியற்று பேரினவாத அரசின் அடக்குமுறைக்கு ஈழ மக்கள் ஆளாகி மடிந்து கொண்டிருக்கிறார்கள். உண்மையான ஈழ ஆதரவாளர்களைக் கண்டு கொள்ளாத புலிகள், உளவாளிகளோடுதான் எப்போதும் உறவு கொண்டிருக்கிறார்கள் என்பதும் இப்போது புரிகிறது. பெரும் அவலச் சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கும் ஈழ மக்களின் இன்றைய தேவை அவர்களுக்கான அடிப்படை வசதிகளை உருவாக்கிக் கொடுப்பதுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இந்திய பெரு நிறுவனங்களின் சந்தை வாய்ப்புகளுக்காக இலங்கை திறந்து விடப்பட்டுள்ளது. மன்னாரின் எண்ணைய் வளமும், திருகோணமலைத் துறைமுகமும், வடக்குக் கிழக்கின் பல்லுயிர்ச் சூழலும் தனியார் நிறுவனங்களில் கழுகுக் கணகளில் பட்டு அபகரிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. இந்திய கட்டுமான நிறுவனங்களும், பன்னாட்டு நிறுவனங்களும் இது வரை நூற்றுக்கணக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இலங்கை அரசோடு செய்து முடித்து விட்டன.

முதலீட்டிற்கு உகந்த சூழல் இலங்கையில் நிலவுகிறது என்பதுதான் ராஜபக்சே சொல்லும் செய்தி….. ஆமாம் கை, கால்கள் இழந்து மௌனிகளாக்கப்ப்ட்டுவிட்ட மக்களின் கல்லறைகளின் மீது கட்டிடம் கட்ட படையெடுக்கக் காத்திருக்கிறது பன்னாட்டு நிறுவனங்கள்….. அரசியல் ரீதியாக பன்னாட்டு நிறுவனங்களை பாதுகாத்து இனி எப்போதும் அரசியல் ரீதியாக ஈழ மக்களை எழும்ப விடாமல் அடித்துப் புதை குழியில் தள்ள கூடவே படையெடுக்கிறது தன்னார்வ நிறுவனங்கள்.

மறுக்கப்பட்ட சிவில் உரிமைகளை நாங்களே வழங்குவோம் என்று சொல்கிற தன்னார்வக் குழுக்கள் புதிதாக சொல்கிற வார்த்தை ” மீள் கட்டுமானம்” ஆமாம் இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின் அமெரிக்கா கட்டமைத்த பயங்கரவாத கதையாடலோடு துவங்கிய ஈராக், ஆப்கான் யுத்தத்தின் பின்னர் அவர்கள் அடுத்து சொன்னதுதான் இந்த ”மீள்கட்டுமானம்”.

முதலில் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்று மக்களையும் அவர்களின் வாழ்விடங்களையும் அழித்தார்கள். பின்னர் மீள்கட்டுமானம் என்று அழித்ததை மீண்டும் கட்டுகிறார்கள். அழிப்பின் போது ஆயுத வியாபாரம்… மீளக்கட்டும் போது ஒட்டு மொத்த இடங்களையுமே கைப்பற்றிக் கொள்வது………ஆக ஒவ்வொரு பேரழிவும் ஒரு நல் வாய்ப்பாக இவர்களுக்கு வாய்த்து விடுகிறது… பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல ஜெகத் கஸ்பருக்கும்தான்……..

பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கான சொர்க்கம் இலங்கை என்று சொல்லியே உலக நாடுகளை ஏமாற்றி பல்லாயிரம் மக்களை கொன்றொழித்தது இலங்கை.

நிவாரணம் உள்ளிட்ட மக்களின் சிவில் சமூக உரிமைகளை தன்னார்வக் குழுக்கள் வழங்கினால் இனி எப்போதும் அவர்களால் மீளவே முடியாது. மாறாக அவர்களிடமிருந்து பறிக்கபப்ட்ட நிலங்களை அவர்களிடம் மீள ஒப்படைப்பதும் உழைப்பிற்கான உத்திரவாதத்தை வழங்குவதோடு சிவில் உரிமைகளைப் முழுமையாக வழங்கி, இராணுவக் கண்காணிப்பை நீக்கினாலே தங்களுக்கான மீள் கட்டுமானத்தை சில ஆண்டுகளில் அவர்கள் செய்து விடுவார்கள். ஏனென்றால் அவர்கள் விவசாயிகள், மீனவர்கள், இன்னபிற உழைக்கும் மக்கள்.

சாம்பலில் இருந்து மீண்டெழுவதை அவர்களுக்கு ஜெகத் கும்பல் மட்டுமல்ல வேறெந்த தன்னார்வக குழுக்களும் கற்றுக் கொடுக்க வேண்டியதில்லை. மாறாக பாதிரி தலைமையில் அணிவகுத்திருக்கும் இந்தக் கும்பல் ஈழமக்களை அரசியல் ரீதியில் காயடிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவே பாதிரி கஸ்பரை இனியும் துரோகி என்று அழைப்பது பொருத்தமற்றது. அவர் ராஜபக்சேவின் இந்திய ஏஜெண்டு. எச்சரிக்கையாக இருங்கள்!