Wednesday, December 1, 2010

என் வாழ்க்கை திறந்த புத்தகம்! சொத்துக் கணக்கை வெளியிட்டு, கண்ணுடையோர் காண என கலைஞர் விளக்கம்!

Source:http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=44414

முதல்வர் கருணாநிதி தனது சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார். திராவிட தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி செலுத்தும் வகையில் தமது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் என்றும் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.


தெரு வரிசையில் உள்ள கோபாலபுரம் வீட்டையும் மருத்துவமனை அமைப்பதற்கு கொடுத்துள்ள நிலையில், அதுதவிர எந்த சொத்தையும் வாங்கவில்லை என்றும் முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.




கணக்கு காட்டுகிறேன் கண்ணுடையோர் காண என்ற தலைப்பில் முதல்வர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது,




18 வயதில் முரசொலி வாரப்பத்திரிகையை தொடங்கினேன். திராவிடர் கழகப் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்துகொண்டேன். கடந்த 1949ஆம் ஆண்டு மாடர்ன் தியேட்டரில் எழுத்தாளராகப் பணியில் அமர்ந்தேன். அந்தக் காலத்திலேயே அதற்காக மாத ஊதியமாக 500 ரூபாய் பெற்றேன்.




1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி அன்று ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் திராவிட முன்னேற்ற கழகம் அண்ணாவால் தொடங்கப்பட்டபோது, அந்தக் கூட்டத்திலே கலந்துகொண்டு, விருநகர் நாடார் லாட்ஜில் தங்கினேன்.




சேலத்தில் குடும்பத்தோடு வசித்தபோது, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் மணமகள் என்ற திரைப்படத்திற்கு திரைக்கதை - வசனம் எழுதியதற்காக அந்தக் காலத்திலேயே 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் பெற்றேன். இருவர் உள்ளம் திரைப்படத்திற்காக உரையாடலை எழுதியபோது, அந்தப் படம் 100 நாட்களைத் தாண்டி ஓடியதால் தயாரிப்பாளர் எல்.வி.பிரசாத், பத்தாயிரம் ரூபாய் ஊதியத்தைத் தவிர்த்து மேலும் பத்தாயிரம் ரூபாய் ஊதியமாகத் தந்தார். இவைகளைத் தொடர்ந்து 75 திûப்படங்களுக்கு மேல் திரைக்கதை - வசனம் எழுதி, ஊதியம் பெற்றுள்ளேன்.




கடந்த 1957ஆம் ஆண்டு முதல் இதுவரை, தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராகவோ, மேலவை உறுப்பினராகவோ இருந்துள்ளேன். இந்தியாவிலே உள்ள அனைத்து மாநில முதலமைச்சர்களின் வீடுகளையும் ஒப்பிடும்பொழுது வசதி குறைவான வீட்டில்தான் வாழ்ந்து வருகிறேன். அமைச்சர் ஆவதற்கு முன்பே 45 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கிய வீடுதான் கோபாலபுரம் வீடு. இன்றும் தெரு வரிசையில் உள்ள கோபாலபுரம் வீட்டில்தான் வசித்து வருகிறேன். அந்த கோபாலபுரம் வீட்டையும் மருத்துவமனை அமைப்பதற்காக எழுதிக்கொடுள்ள நிலையில், சென்னையில் வேறு எந்த சொத்தையும் வாங்கவில்லை.




கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை, கலைஞர் கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளை, கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை ஆகியவற்றின் மூலம் தமிழரிஞர்களுக்கு விருதுகளும், ஏழை - எளியோருக்கு நிதியுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.




மண்ணின் மைந்தன், உளியின் ஓசை, பெண் சிங்கம் ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை - வசனம் எழுதியதற்காக கிடைத்த பல லட்சம் ரூபாய் தொகையின் மூலம் சுனாமி நிவாரணம், நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி, அருந்ததியின மாணவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது.




சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்ட பணத்தில் 10 கோடி ரூபாய் கிடைத்தது. அதில் 5 கோடி ரூபாயை வங்கியில் இருப்பு செய்து கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைத் தொடங்கப்பட்டு ஏழை - எளியோருக்கு மருத்துவம் மற்றும் கல்வி நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.




வங்கிக் கணக்கில் ரூபாய் 5 கோடியே 65 லட்சத்து 92 ஆயிரத்து 134 வைப்பு நிதி தவிர, சேமிப்பு கணக்கில் சுமார் ரூபாய் 35 லட்சத்து 90 ஆயிரத்து 86 உள்ளது. இதுதான் என்னுடைய சொத்துக் கணக்கு.




எஞ்சிய காலத்தையும் திராவிடத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவே செலவிடுவேன். ஏழை - எளிய மக்களின் கவலை தீர்ப்பதையும் கண்ணீர் துடைப்பதையும் கடமையாகக் கொள்வேன்.




கண்ணுடையோர் காண்பதற்காகவே, இந்தக் கணக்கை காட்டுகிறேன். முகத்தில் இரண்டு புண்ணுடையோர்க்கு அல்ல. இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

கருணாநிதி: யாகாவாராயினும் நா காக்க...

Source:www.dinamani.com

நெல்லைகண்ணன் 

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து இரண்டாண்டு காலமாகப் பேசப்பட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அரசு மௌனம் சாதித்தும் பயனில்லாமல் சிஏஜி அறிக்கையால் அமைச்சர் பொறுப்பில் இருந்து திமுக அமைச்சர் ராசா விலகித் தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

நாடாளுமன்றமே நடக்காமல் திணறிக் கொண்டிருப்பதும், உச்ச நீதிமன்றம் சிபிஐ அதிகாரிகளைப் பார்த்து நீங்கள் ஏன் அமைச்சராக இருந்த ராசாவை விசாரிக்கவில்லை என்று கேள்வி கேட்பதுமான சூழல். ஆனால், நமது முதல்வரோ அதுகுறித்து எந்த வருத்தமும் இன்றி எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதில் கூறாமல் தனது உளுத்துப்போன ஜாதிய விமர்சனங்களைத் தொடங்கிவிட்டார்
மிகப்பெரிய பொய்யொன்றை வேலூரில் சொல்லியிருக்கிறார் முதல்வர் கருணாநிதி. முந்திரா ஊழல் வழக்கைப் பெரியவர் டி.டி. கிருஷ்ணமாச்சாரியாரின் ஊழல் என்கிறார். தனக்குச் சம்பந்தமே இல்லாத அந்தக் குற்றச்சாட்டு நேரு பிரானின் மருமகன் பெரோஸ் காந்தியாலே நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட உடனேயே தனது அமைச்சர் பதவியைத் துறந்தவர் டி.டி.கே. - நேரு சொல்லியும், கேட்கவில்லை. அடுத்த விமானத்தில் சென்னைக்கு வந்துவிட்டவர். முதல்வர் சொல்கிறார் - அவர் பதவியைத் துறந்தவுடன் விட்டுவிட்டார்களாம். காரணம், அவர் மேல்ஜாதிக்காரர். டி.டி. கிருஷ்ணமாச்சாரியார். ஆச்சாரியார். பெயரிலேயே ஆச்சாரியார் என்று இருக்கிறது. அதாவது பிராமணர். ஆனால், ராசாவோ தலித். அதனால்தான் மேலும் மேலும் மேல்ஜாதிப் பத்திரிகைகளும், ஊடகங்களும் இதைப் பெரிதுபடுத்துகின்றன என்கிறார். 

கருணாநிதிக்குத் தெரியுமா? டி.டி. கிருஷ்ணமாச்சாரி திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்கிறார். உடன் பெருந்தலைவர் காமராஜும் வருகிறார். கோயிலுக்கு இருவரையும் அழைத்துச் செல்கின்றனர். எல்லோரும் சட்டையைக் கழற்றுகின்றனர். காமராஜ் சட்டையைக் கழற்றுகிறார். டி.டி.கே. சட்டையைக் கழற்றவில்லை. காமராஜ் சொல்லுகிறார்-"அவன் பூணூல் போட்டிருக்க மாட்டான், அதான் கழற்ற மாட்டேங்கிறான்' என்று! அந்த ஆச்சாரியாரின் ஆச்சரியமான ஆச்சாரத்தைப் பார்த்துச் சுற்றி இருந்தோர் வியந்தனர்.  
காங்கிரஸ் கட்சி தனது மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாணை பதவி விலக வைத்திருக்கிறதே! அவர்மீது விசாரணை நடக்கப் போகிறதே! அவர் என்ன தலித்தா? சுரேஷ் கல்மாடியைப் பதவி விலகச் சொல்லியுள்ளதே, அவர் என்ன தலித்தா? கருணாநிதிக்கு நினைவிருக்கும். அரியலூரில் கடும் மழையால் ஒரு ரயில் விபத்து. அன்றைக்கு தமிழர் ஓ.வி. அளகேசன் ரயில்வே துணை அமைச்சர். "அரியலூர் அளகேசா நீ ஆண்டது போதாதா?' என்று இதே கருணாநிதி கூக்குரல் எழுப்பினாரே. விபத்து நடந்த சில மணி நேரங்களில் ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து பெரியவர் லால் பகதூர் சாஸ்திரியும் நம்மவர் ஓ.வி.அளகேசனும்  பதவி விலகினார்களே! அவர்கள் தலித்துகளா?

போஃபர்ஸ் பீரங்கி என்று தமிழகம் முழுவதும் ரூ. 64 கோடிக்கு விசாரணை வேண்டும். ராஜீவ் காந்தியைக் கைது செய்ய வேண்டும் என்றீர்களே!  இன்று ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய்க்கு கேள்வியே கேட்கக் கூடாது என்கிறீர்களே! என்ன நியாயம்?  
1967-ல் ஜெயலலிதா கட்டிய வருமான வரி என்ன? இன்று அவர் கட்டுகிற வருமான வரி என்ன என்று கேட்கிற கருணாநிதி, அவர் 67-ல் கட்டிய வருமான வரி என்ன? இப்போது கட்டுகிற வரி என்ன என்று சொல்வாரா? 
பத்திரிகைகளைப் பார்ப்பனப் பத்திரிகைகள் என்றெல்லாம் வாய்கிழியப் பேசும் இந்த சாமானியனின் சாயம் வெளுத்துவிடும் என்பதாலா? ஜெயலலிதாவைப் பார்ப்பனத்தி என்று இவர் பேசினால் வீரமணி கோபம் கொள்வார். அவர்தான் ஜெயலலிதாவுக்கு "சமூக நீதி காத்த வீராங்கனை' என்று பட்டம் கொடுத்தவர். கருணாநிதிக்குக்கூட அந்தப் பட்டத்தை அவர் வழங்கவில்லை. பார்ப்பனப் பத்திரிகைகள் என்று குறிப்பிடுகிற கருணாநிதி, அவற்றை முதலில் இருந்தே இவை பார்ப்பனப் பத்திரிகைகள் என்று புறக்கணித்திருந்தால் நமக்குப் புரியும், இவர் சரியான பெரியாரின் சீடர் என்று. "சோ'வைப் பார்ப்பான் என்பார். பிறகு "சோ'வே என்னைப் பாராட்டியிருக்கிறார் தெரியுமா என்பார். ஓர் ஆங்கில நாளேட்டை மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு என்பார். பிறகு அந்தப் பத்திரிகையே தன்னைப் பாராட்டியிருக்கிறது என்று பெருமை பேசுவார். இவர் குடும்பத்தினர் நடத்துகிற பத்திரிகைகளில் கதைகள், கட்டுரைகள் எழுதுவதெல்லாம் பார்ப்பனர்கள்தான். எதற்கு அவர்களை இந்தப் பெரியாரின் சீடர் குடும்பம் வளர்க்கிறது? பார்ப்பன வாடையே படாமல் இவர்களின் ஊடகம் நடக்காதா, என்ன? ஜெமினி கணேசன் பிறந்த நாளில் கலந்துகொள்கிறார். ஜெமினியின் மாமா ஒருவர் முதல் மனைவியை இழந்துவிட்டாராம். உடனே எங்கள் இசை வேளாளர் குடும்பத்துப் பெண்ணைத்தான் திருமணம் செய்தார். அவரின் பெண்தான் முத்துலெட்சுமி ரெட்டி என்கிறார். அப்படியென்றால், இந்தியச் சட்டப்படி முத்துலெட்சுமி பார்ப்பனப் பெண்தானே! அவரை ஏன் இவர் புகழ்கிறார்? ஜாதிய ஒழிப்பில் ஈடுபட வேண்டிய கருணாநிதி, இன்னும் தன் ஜாதியைக்கூட மறக்க மாட்டேன் என்கிறாரே. கேட்டால், தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்தவன் என்பார். தன் இனத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இணைத்தவரே இவர்தானே! பார்ப்பனர்களை இவ்வளவு வசைபாடும் கருணாநிதி, தன் குடும்பத்து இளைஞர்களிடம் பார்ப்பனப் பெண்களைத் திருமணம் செய்யாதீர்கள் என்று சொல்லியிருக்கலாமே? சொல்லமாட்டார். பார்ப்பனீயம் அவருக்கு மட்டும் இனிக்க வேண்டும். மற்றவர்களுக்குக் கசக்க வேண்டும். இதுதான் கருணாநிதியின் பகுத்தறிவு தர்மம். தனக்குச் சாதகமான கேள்விகளுக்கு மட்டும் பதில் தருகிற கருணாநிதி, நீரா ராடியா, கனிமொழி, ராசா ஒலிக் குறுந்தகடுகள் குறித்து ஒன்றுமே சொல்லவில்லையே, ஏன்? ஆ. ராசாவுக்கு அமைச்சர் பதவி வாங்கிக் கொடுத்தது நீரா ராடியாவா, இல்லை தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியா என்று ஆங்கிலப் பத்திரிகைகள் கேள்வி கேட்டு திமுகவின் மானத்தைச் சந்தி சிரிக்கச் செய்கின்றனவே, அதைப்பற்றி இவர் எதுவுமே பேசுவதில்லையே, ஏன்? ஒவ்வொரு தேர்தலின்போதும் நான் தாழ்த்தப்பட்ட பெண்ணை மருமகளாக்கியிருக்கிறேன் என்பார். தன் வீட்டு மருமகளாகிவிட்ட பெண்ணை ஒவ்வொரு தேர்தலின்போதும் தாழ்த்தப்பட்ட பெண் என்று சொல்வது தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருணாநிதி செய்கிற மரியாதையா? அவமரியாதையா? அவரது உள்மனதில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண் மருமகளாகிவிட்டாளே என்கிற ஆதங்கத்தின், உள்மனதின் ஓலம்தானே அது? அவருக்கும், அவர் குடும்பத்துக்கும் ஆபத்து வருகிறபோதெல்லாம் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்று பேசுகிற கருணாநிதி, ஏதாவது பெரும்பான்மை ஜாதி குறித்துப் பேசுவாரா? இதுவரை பேசியிருக்கிறாரா? ராஜாஜி என்கிற பார்ப்பனர்தான் காமராஜையும், காங்கிரûஸயும் வீழ்த்த இவர்களுக்கு உதவினார். உடனே அவரை மூதறிஞர் என்றார்கள். அதற்கு முன்புவரை அவர் குல்லுக பட்டர், கோணல் புத்திக்காரர், ஆச்சாரியார்! மார்க்சிஸ்டுகளோடு தேர்தல் உறவா, தோழர் பி. இராமமூர்த்தியை சர்வதேசச் சிந்தனையாளர் என்பார்கள். உறவு முறிந்த மறுகணமே நொண்டிப் பார்ப்பான் இராமமூர்த்தி என்பார்கள். தோழர் ரங்கராஜனைக்கூட பார்ப்பனர் என்று சமீபத்தில் குற்றம்சாட்டியவர் கருணாநிதி. இன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சிவகங்கைச் சின்னப் பையன், சீமான் வீட்டுச் செல்லப்பிள்ளை. அந்தப் பையன் என்னைப் பேசுகிறான் என்றவர்தானே கருணாநிதி. வேலூரில் ""நேருவே ஆரிய திராவிட யுத்தம்'' என்று எழுதியிருக்கிறார் என்று சான்று காட்டுகிறார் கருணாநிதி. என்ன செய்ய கருணாநிதி அவர்களே! அந்த நேருவும்கூட ஒரு பார்ப்பனர்தான். ஆமாம் காஷ்மீரத்து பண்டிட்தானே!