Friday, August 27, 2010

தினமணி கார்ட்டூன்: கருணாநீடிமோனியா

கருணாநீடிமோனியா எப்போதும் குடும்பமாகவே வாழும். அதிவிரைவில் பல்கிபெருகும்.சாதகம் என்றால் மற்ற தேசிய கிரிமிகளுடன் ஒட்டி வாழும்.பாதகம் என்றால் பிரிந்துவிடும் தன்மைகொண்டது.எங்கும் எதிலும் எப்போதும் இருக்கும்.
http://www.dinamani.com/edition/photoonStory.aspx?SectionName=Cartoon&artid=293563&SectionID=221&MainSectionID=221&SEO=&Title=%u0b9a%u0bc2%u0baa%u0bcd%u0baa%u0bb0%u0bcd+%u0baa%u0bb5%u0bb0%u0bcd+%u0baa%u0b95%u0bcd%u0bb8%u0bcd!

Wednesday, August 4, 2010

தலையங்கம்: பொய் முகங்கள்!



Source: http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial&artid=282290&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

திங்கள்கிழமை கோவையில், முதல்வர் கலந்துகொண்ட மாபெரும் திமுக பொதுக் கூட்டம் ஒன்று நடந்தது. விலைவாசி உயர்வுக்கு எதிராகச் சில நாள்கள் முன்பு அதே கோவையில், அதே வ.உ.சி. திடலில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவின் கண்டனக் கூட்டத்தின் வெற்றி, முதல்வரை எந்த அளவுக்குப் பாதித்திருக்கிறது என்பதை முதல்வரின் பேச்சு தெளிவுபடுத்தி இருக்கிறது. முதல்வரின் கோவை வ.உ.சி. திடல் உரையில் காணப்படும் ஆத்திரமும், ஆதங்கமும் தேவைதானா என்று கேட்கத் தோன்றுகிறது. தனக்கு முன்னால் பேசிய அமைச்சர்களை வழியொற்றி, எதிர்கட்சித் தலைவி ஜெயலலிதா தன்னைக் கருணாநிதி என்று குறிப்பிடுவதை இவரும் குறிப்பிட்டு மாய்ந்து போனது வியப்பைத் தருகிறது. ""நான் அண்ணாவிடத்திலே பண்பாடு கற்றவன். பெரியாரிடத்திலே அரசியல் நாகரிகம் கற்றவன். அதனால் கருணாநிதி, கருணாநிதி என்று சொல்லட்டும். கருணாநிதி என்பது ஒன்றும் தவறான வார்த்தை அல்ல. கருணை மிகுந்த நிதி. அப்படி எடுத்துக் கொள்கிறேன். எப்படி வேண்டுமானாலும் சொல்லட்டும்'', என்றெல்லாம் இவர் மனக்குறையைக் கொட்டித் தீர்ப்பானேன். ஜெயலலிதா, கருணாநிதி என்று பெயர் சொல்லி அழைப்பது இவரைப் பாதிக்கவில்லை என்றால், அதை இவர் ஏன் பெரிதுபடுத்த வேண்டும்? ""நீ, நான் என்று ஒருமையில் பேசிக் கொள்வதாகக் கருதிக் கொள்ளாதே. ஏன் என்றால் உன் வயது என்ன? என் வயது என்ன? சிறு வயதிலிருந்தே உன்னைத் தெரியும் என்ற காரணத்தால், அந்த மரியாதையுடன் நீ, நான் என்று பேசுவதாக எண்ணிக் கொள். உன் வயதுக்கு 87 வயதான ஒரு முதியவரைப் பார்த்து, நான் அதிகம் படிக்காதவனாக இருக்கலாம், உன்னைப்போல பெரிய அறிவாளியாக இல்லாமல் இருக்கலாம். அந்த வயதுக்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா? நான் மரியாதையைத் தேடி அலைகிறேன் என்று யாராவது தயவுசெய்து எண்ணிக் கொள்ளாதீர்கள்'' - இதுவும் கோவையில் முதல்வர் கருணாநிதி பேசியிருக்கும் பேச்சுதான். ஜெயலலிதா, முதல்வரைக் கருணாநிதி என்று அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்? கட்சிக்காரர்கள் அவரைக் "கலைஞர்' என்று அழைப்பது அவர்கள் இஷ்டம். ஆனால், மற்றவர்களும் அவரைக் "கலைஞர்' என்று அழைக்க வேண்டும் என்று முதல்வர் ஏன் ஆசைப்படுகிறார் என்பது தெரியவில்லை. முதல்வரின் உறவினர்கள் நடத்தும் தொலைக்காட்சி சேனலிலும், பத்திரிகைகளிலும்கூடக் கருணாநிதி என்றுதானே குறிப்பிடுகிறார்கள். அப்படி இருக்க எதிர்க்கட்சித் தலைவி மட்டும் அவரைக் "கலைஞர்' என்று அழைக்க வேண்டிய அவசியம் என்ன? முதலில் தமிழக அரசியலில் உள்ள அடைமொழிக் கலாசாரமே வயிற்றைக் குமட்டுகிறது. வெளிமாநிலத்தவர் நம்மிடம் இதைப்பற்றி கிண்டலும் கேலியுமாகக் கேள்வி கேட்கும்போது, தமிழகத்துக்கு ஏற்படும் தலைக்குனிவு பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? இந்த அடைமொழிகள் அர்த்தமில்லாதவை என்பதை யார் இவர்களுக்கு எடுத்துரைப்பது? ஜவாஹர்லால் நேருவுக்கும், இந்திரா காந்திக்கும், சர்வதேச அளவில் வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்கள் எண்ணிலடங்காது. அவர்கள் யாரும் தங்களது பெயருக்கு முன்னால் "டாக்டர்' பட்டம் போட்டுத் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்வது நாகரிகமில்லை என்பதுகூட நமது தமிழக அரசியல்வாதிகளுக்குத் தெரிவதில்லை. இந்த விஷயத்தில் முதல்வர் கருணாநிதி மட்டுமல்ல, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்று யாருமே விதிவிலக்கல்ல. பொதுவாழ்க்கையில் வந்தபிறகு அவர்கள் வகிக்கும் பதவிக்கும், அவர்களது தொண்டிற்கும்தான் மக்கள் மன்றம் தலைவணங்குமே தவிர, அவரவர் வைத்துக் கொள்ளும் அல்லது கட்சிக்காரர்களால் தரப்படும் அடைமொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. உயிருடன் வாழும்வரை, காமராஜை பெருந்தலைவர் என்றோ, அண்ணாதுரையை "அறிஞர்' என்றோ யாரும் அழைக்கவில்லை. அவர்களும் அழைக்க வேண்டும் என்று விரும்பவுமில்லை. காமராஜ் என்று அழைத்தவர்களும், அண்ணாதுரை என்று அழைத்தவர்களும், அவர்கள் மறைந்த பின்னர் பெருந்தலைவர் என்றும் அறிஞர் என்றும் அழைக்க முற்பட்டனர் என்றால், அது அந்த மாமனிதர்களின் சமுதாயப் பங்களிப்புக்கு மக்கள் மன்றம் அளிக்கும் மரியாதை. "கலைஞர்' என்று கருணாநிதியையும், "அம்மா' என்று ஜெயலலிதாவையும் அழைக்கும் அருவருப்பான அடைமொழிக் கலாசாரம், தமிழகத்திலுள்ள ஏனைய மாநிலக் கட்சிகளையும் தொற்றிக் கொண்டிருக்கிறது. அரசியல் கலாசாரத்தை, மாற்றிக் காட்டுகிறோம் என்று கூறி கட்சி தொடங்கியவர்கள் டாக்டர் ராமதாஸம், விஜயகாந்தும். ""நானோ எனது உறவினர்களோ பதவி எதுவும் பெற மாட்டோம். அப்படி பதவி பெற்றால் என்னை நாற்சந்தியில் நிறுத்திச் சவுக்கால் அடியுங்கள்'' என்று சவால்விட்ட பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியைக் கேட்டுப் பெற்றதெல்லாம் போகட்டும். தன்னை "மருத்துவர் அய்யா' என்றும் தனது மகனை "சின்ன அய்யா' என்றும் கட்சிக்காரர்கள் அழைப்பதைக் காதுகுளிரக் கேட்டு மகிழ்வதுதான் இவர் செய்து காட்டியிருக்கும் கலாசார மாற்றம். விஜயகாந்தும் இதேபாணியில், கட்சி சின்னம் பொறித்த மோதிரத்தை அணிந்து கொள்வது, கரை வேட்டி கட்டிக் கொள்வது என்று இயங்குவதுடன் நின்றுவிட்டால்கூடப் பரவாயில்லை. தன்னை "கேப்டன்' என்று அழைக்கச் சொல்கிறாரே, அதுதான் வேடிக்கை. விஜயகாந்த் ராணுவத்தில் எந்தப் பிரிவில் கேப்டனாக இருந்தார்? இல்லை, இவர் மதுரையில் ஏதாவது கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுக் குழுவின் கேப்டனாக இருந்தாரா? அவர் நடித்த நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் ஒன்றான கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்தவர் என்பதால் "கேப்டன்' அடைமொழியா? என்ன கேலிக்கூத்து இது. கேட்டால் கட்சித் தொண்டர்கள் மரியாதைக்காக எங்களை இப்படி அழைக்கிறார்கள் என்று கருணாநிதியும், ஜெயலலிதாவும், ராமதாஸýம், விஜயகாந்தும் அதற்கு விளக்கம் கூறுவார்கள். அப்படி அழைக்கக் கூடாது என்று சொன்னால் தொண்டர்கள் அழைக்கப் போகிறார்களா? இவர்கள் விரும்புகிறார்கள் } அவர்கள் அழைக்கிறார்கள். அதுதானே நிஜம்? பொதுவாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் மக்கள் மனதில் இடம்பெற அவர்களது செயல்பாடுகள்தான் உதவுமே தவிர, பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்ளும் அடைமொழிகள் உதவாது. பொதுவாழ்வில் ஈடுபட்டவர்களும் பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களும் தங்களைப் பெயர் சொல்லி அழைப்பது மரியாதைக் குறைவு என்று கருதும் திராவிடக் கலாசார எதிர்பார்ப்பு எந்த பகுத்தறிவு வாதத்தைச் சேர்ந்தது என்பதைப் பெரியாரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாழ்க்கைக்கு வந்த பிறகு வயதைக் காரணம் காட்டி மரியாதை தேடிக் கொள்வதோ, பெயரைக் குறிப்பிடுவது மரியாதைக் குறைவு என்று கருதுவதோ ஏற்புடையதல்ல. இது முதல்வர் கருணாநிதிக்கு மட்டுமல்ல, அடைமொழிகளால் புளகாங்கிதப்படும் எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸக்கும், தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும் பொருந்தும். ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு இதில் எத்தனை பெயர்களைச் சரித்திரம் நினைவில் நிறுத்தப் போகிறது என்பதே சந்தேகம். பிறகல்லவா இந்த அடைமொழிகள்!

ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை


போலி சாதி சான்றிதழை கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்துவிட்டார் என்ற காரணத்தைக் காட்டி, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 1990 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு. சி. உமாசங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது மைனாரிட்டி தி.மு.க. அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது.
அகில இந்திய பணி நியமனங்கள் அனைத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செய்யப்படுகின்றன. இந்திய ஆட்சிப் பணியில் நியமனம் செய்யப்படும் ஒவ்வொருவரின் பூர்வீகம் குறித்த விவரங்களை கண்டறிவதும், அனைத்துச் சான்றிதடிநகளை சரிபார்ப்பதும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பாகும்.

இந்தச் சூழ்நிலையில் போலி சாதிச் சான்றிதழை காட்டி இந்திய ஆட்சிப் பணியில் திரு. உமாசங்கர் சேர்ந்திருக்கிறார் என்று கருணாநிதியின் அரசு திடீரென்று கூறுவதில் உள்நோக்கம் இருக்கின்றதோ என்ற சந்தேகம் எழுகிறது.

2007 ஆம் ஆண்டு மே மாதம் கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கருணாநிதியின் பேரன்களான கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறனுக்கு எதிராக கருணாநிதியின் மகன் அழகிரி சண்டையிட ஆரம்பித்தார்.
9.5.2007 அன்று மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான மதுரையிலுள்ள தினகரன் பத்திரிகை அலுவலகம் அழகிரிக்கு நெருக்கமான ரவுடி கும்பலால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில், பத்திரிகை அலுவலகக் கட்டிடம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதன் விளைவாக மூன்று அப்பாவி ஊழியர்கள்
கொல்லப்பட்டனர்.
கருணாநிதியின் வேண்டுகோளின் பேரில், மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறன் நீக்கப்பட்டதிலிருந்தே, இந்தத் தாக்குதல் கருணாநிதியின் ஆசியோடு தான் நடைபெற்றது என்பது தெள்ளத் தெளிவாகிறது. மேலும், மாறன் சகோதரர்களின் பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியை தடுக்கும் வகையில், ‘மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு’ என்ற பெயரில், அரசு கேபிள் நிறுவனம் தொடங்கப்படும் என்று அறிவித்தார் கருணாநிதி.
இதன் உண்மையான நோக்கம் மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்திற்கு பிரச்சினை கொடுக்க வேண்டும், போட்டியாகத் திகழ வேண்டும் என்பதுதான். சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற கருணாநிதியின் குறிப்பான கட்டளையோடு தான் அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக திரு. உமாசங்கர் நியமிக்கப்பட்டார்.
அதிநவீன மின்னணு சாதனங்களும், கேபிள்களும் வாங்குவதற்காக, அரசு கேபிள் நிறுவனத்தில் 400 கோடி ரூபா மேல் முதலீடு செய்யப்பட்டது. காவல் துறையிடம் கொடுக்கப்பட்ட புகார்களின்படி, பல இடங்களில் அரசு கேபிள் நிறுவனத்தின் செயல்பாடுகளை தடுத்திடும் வகையில், அதன் கேபிள்களை சுமங்கலி கேபிள் நிறுவனத்தார் சிதைத்தனர்.

அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என்ற தகுதியின் அடிப்படையில், அரசின் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக மாறன் சகோதரர்கள் உட்பட இந்தச் செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
பரிந்துரை செய்து இருக்கிறார் திரு. உமாசங்கர். ஆனால், இதற்குப் பிறகு, சண்டையிட்டுக் கொண்ட கருணாநிதி உறவுகளுக்குள் திடீரென்று ஓர் உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டது.
இதனையடுத்து, மாறன் சகோதரர்களின் அராஜகங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக கருணாநிதியால் நியமிக்கப்பட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு. உமாசங்கர் பலிக்கடா ஆக்கப்பட்டு, பழிவாங்கப்பட்டு, அரசு கேபிள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அரசு கேபிள் நிறுவனமும் செயலிழந்துவிட்டது. கோடிக்கணக்கான மக்கள் பணம் விரயமாக்கப்பட்டுவிட்டது. கருணாநிதி குடும்பம் பிரிந்து மறுபடியும் சேர்ந்ததன் விளைவாக இவ்வளவு பெரிய நிதி இழப்பை தாங்க வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டனர்.
மாறன் சகோதரர்களின் விரோதத்தை மட்டும் திரு. உமாசங்கர் சம்பாதிக்கவில்லை.
இதற்கு முன்பு, 2006 ஆம் ஆண்டு, தமிழநாடு மின்னணுக் கழகத்தின் (ELCOT) மேலாண்மை இயக்குநராக இவர் நியமனம் செயப்பட்டார். New Era Technologies Ltd என்ற நிறுவனத்துடன் இணைந்து ELNET என்ற கூட்டு நிறுவனத்தை ELCOT துவக்கியது.
இதற்கிடையில், ELNET நிறுவனம் ETL Infrastructures Limited என்ற துணை நிறுவனத்தை தொடங்கியது. இந்த நிறுவனத்திற்கு 700 கோடி மதிப்பில் சொத்து இருக்கிறது.
இந்த நிறுவனம் சென்னைக்கு அருகில் உள்ள பள்ளிக்கரணையில் 25 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் 17 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவினை கட்டியுள்ளது. தமிழக அரசு நிறுவனமான ELCOT நிறுவனத்தின் துணை நிறுவனம் என்ற பெயரைச் சொல்லி, இந்திய அரசிடமிருந்து தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற தகுதியையும் இந்த நிறுவனம் பெற்றுவிட்டது. பின்னர், திரு. தியாகராஜ செட்டியாரை தலைவராகவும், அவரது மனைவி திருமதி உண்ணாமலை தியாகராஜன் அவர்களை மேலாண்மை இயக்குநராகவும் கொண்ட தனியார் நிறுவனமாக ETL நிறுவனம் ஆகிவிட்டது.
ETL நிறுவனத்தின் 700 கோடி ரூபா சொத்துக்கள் இந்த தனி நபர்களிடம் தான் உள்ளது. ELCOT நிறுவனத்தின் பதிவேடுகளிலிருந்து ETL நிறுவனமும், அதன் 700 கோடி ரூபா சொத்தும் காணாமல் போய்விட்டது குறித்து திரு. உமாசங்கர் கேள்வி எழுப்பியதாலும், இதனுடைய பயனாளிகள் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நெருக்கமானவர்கள் என்பதை
சூசகமாக தெரிவித்ததாலும், திரு. உமாசங்கர் ELCOT நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.
ETL நிறுவனம் என்னவாயிற்று? ETL நிறுவனத்தின் 700 கோடி ரூபா சொத்து என்னவாயிற்று? தியாகராஜ செட்டியார் என்பவர் யார்? அவருக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் என்னத் தொடர்பு? அரசு கேபிள் நிறுவனத்தின் தற்போதைய நிலை என்ன? அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம் எத்தனை பேர் கேபிள் இணைப்பு பெற்றிருக்கிறார்கள்? அரசு கேபிள் நிறுவனத்தில் முதலீடு செயப்பட்ட 400 கோடி ரூபா என்னவாயிற்று?
அரசு கேபிள் நிறுவனத்திற்காக வாங்கப்பட்ட அதிநவீன உபகரணங்கள் என்னவாயிற்று? இந்த இழப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியது கருணாநிதி குடும்பமா அல்லது அப்பாவி தமிழக மக்களா? கருணாநிதி குடும்பத்தினரின் அராஜகங்களை வெளிக் கொணர்ந்ததற்காக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஏன் பழிவாங்கப்படுகிறார்? இந்த ஜனநாயகப் படுகொலையை தமிழக மக்கள் இன்னும் எத்தனை நாட்கள் தான் பொறுத்துக் கொள்ள வேண்டும்? என்பதற்கெல்லாம் கருணாநிதி விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.