Monday, November 14, 2011

தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!


ராஜீவ் கொலை வழக்கும் ஒரு பெட்டி கிரிமினலின் குற்றமும் ஒன்றா? ஆம் என்கிறது தினமலர். நாமும் அதை மறுக்காமல் தினமலர் பாணியில் வேறு சில குற்றங்களை ஆராய்ந்து பார்ப்போம்.
13.11.2011 தினமலரில் அதன் சிறப்பு நிருபர் பெயரில் எழுதப்பட்ட “செந்தமிழர்கள் கொந்தளிக்காதது ஏன்?” என்றொரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். அதை நீங்களே ஒரு முறை படித்துவிட்டு வாருங்கள், விரும்பாதவர்களுக்கு அதன் சுருக்கம் இங்கே:
அதில் 23 வயது சவுமியா எனும் அழகான கேரளப் பெண்ணை ஓடும் ரயிலில் வன்புணர்ச்சி செய்து கீழே தள்ளிக் கொன்ற கோவிந்தசாமி என்ற குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கும் விவரத்தை தருகிறார்கள். பின்னர் அந்த கோவிந்தசாமி விருத்தாசலத்தைச் சேர்ந்த பச்சைத் தமிழன், மாற்றுத்திறனாளி, தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் மீதான மரண தண்டனையை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டுமல்லவா என்பதை போற்றுவது போல இழிவுபடுத்தும் வஞ்சப் புகழ்ச்சி பாணியில் எழுதியிருக்கிறார்கள்.
தினமலரின் நோக்கம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதான தூக்கை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை இங்கே பொதுப்புத்தியில் ஒரு சென்டிமெண்டான விசயத்தை வைத்து இழிவுபடுத்துவதுதான். மரணதண்டனை வேண்டாமென்று கோருபவர்கள் இத்தகைய கொடூரமான காமப் பொறுக்கியை காப்பாற்ற குரல் கொடுப்பார்களா என்று கேட்பதன் மூலம் அந்த அழகான கேரளப் பெண்ணின் அனுதாபத்தை வைத்து ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் மூவரை வில்லனாக்குவதுதான் தினமலரின் நோக்கம்.
அதே நேரம் கூடுதலாக தமிழன், மாற்றுத் திறனாளி, தலித் என்ற விவரங்களின் மூலம் தினமலரின் பார்ப்பன விழுமியங்களை நிலைநிறுத்துவது ஒரு போனஸ் நோக்கம். அதிலும் அந்த கோவிந்தசாமி தாழ்த்தப்பட்டவர் என்பதால் வயிற்றுப்பிழைப்புக்காக சிறு திருட்டுகள் செய்து இப்படி உணர்ச்சிவசப்பட்டு ஒரு தவறை செய்து விட்டார், அவரைக் காப்பாற்றுங்கள் என்று நயவஞ்சமாக எழுதுகிறார்கள். அதே போல இந்துத்வ இந்திய உணர்வுக்கு சேதாரம் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழுணவர்வை குறி வைத்து தாக்குகிறார்கள்.
என்ன எழுதி என்ன பயன்? தினமலர் உருவாக்கி வைத்திருக்கும் பிற்போக்கான வாசகர் வட்டம் இந்த வஞ்சப் புகழ்ச்சி இகழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் தினமலர் இப்படி எழுதலாமா என்று கோபப்படுகிறது. அவர்களெல்லாம் கோவை என்கவுண்டர் மேனியாவில் மனதைப் பறி கொடுத்தவர்கள் அல்லவா, அதனால் இளம் பெண் கற்பழிப்பைத் தாண்டி மற்ற விவரங்களின் மறை பொருளை புரிந்து கொள்ள முடியாத துரதிர்ஷடசாலிகள். இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் தினமலர் கட்டுரைக்கு அருஞ்சொற்பொருளை எழுதி வாசகர் கடிதத்தில் புலம்பும் அப்பாவித் தமிழர்களுக்கு தேறுதல் சொல்லி வருவதோடு தினமலருக்கு வாழ்த்தையும் தெரிவிக்கிறார்கள்.
மூவர் தூக்கை வெறும் மனிதாபிமான நோக்கில் பேசிய பலரும், அதன் அரசியல் முக்கியத்துவத்தை பேசினால் பிரச்சினை என்று வெறும் சென்டிமெண்டாக மட்டும் மக்களிடம் கொண்டு போனவர்களும், தினமலரின் இந்த சாணக்கிய நரித்தந்திரத்தை எதிர் கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். எனினும் அவர்களின் தவறு தினமலரின் வக்கிரத்தோடு ஒப்பிட முடியாத ஒன்று.
முதலில் ராஜிவ் கொலை என்பது ஆயிரக்கணக்கான ஈழத்தமிழரின் வாழ்வுரிமை போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்று. அமைதிப்படையை அனுப்பி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இந்திய அரசின் போர்க்குற்றத்தோடு தொடர்புடைய ஒன்று. ராஜிவ் கொலை வழக்கை வெறும் கிரிமினல் வழக்காக விசாரிக்காமல், அமைதிப்படை அனுப்பிய காலத்திலிருந்து தொடர்புடைய அரசியல் வழக்காக விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும். அதன்படி பார்த்தால் ராஜீவ் கொலை வழக்கில் குற்றமிழைக்காத மூவர் மட்டுமல்ல, அந்தக் கொலையை செய்தவர்களும் குற்றமற்றவர்கள் என்று ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். அதாவது அமைதிப்படை அட்டூழியத்தின் எதிர்விளைவுதான் ராஜவ் கொலை.
இதுவும் ஒரு பெட்டி கிரிமினலின் குற்றமும் ஒன்றா? ஆம் என்கிறது தினமலர். நாமும் அதை மறுக்காமல் தினமலர் பாணியில் வேறு சில குற்றங்களை ஆராய்ந்து பார்ப்போம்.
தினமலர் வாரமலரில் எழுதிப் புகழ்பெற்றவர் அந்துமணி எனும் இரமேஷ். இவர் தினமலர் சென்னை பதிப்பின் உரிமையாளரும் கூட. ராமசுப்பையரின் வழியில் வந்த பார்ப்பன உத்தமர். இவருக்கு இருக்கும் அதிகார செல்வாக்கை வைத்துப் பார்த்தால் இவர் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு சில பெண்களோடு மட்டும் கொஞ்சம் விளையாடி இருக்கிறார். அதில் ஒரு பெண், தினமலர் அலுவலகத்தில் வேலை செய்தவர் போலீசில் புகார் கொடுக்கிறார். இதை பாலியல் வக்கிரம் என்று மட்டும் புரிந்து கொள்ளாதீர்கள். அந்துமணிக்கு சினிமா, மேன்மக்கள், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், முதலாளிகள் என்று பரந்துபட்ட தொடர்பு, வாய்ப்புகள் இருந்தும் அவர் எப்போதும் எல்லை மீறியவரில்லை.
ஏதோ போதாத காலம், கீழ் பணியாற்றும் பெண்ணிடம் கொஞ்சம் ‘லைட்டாக’ வரம்பு மீறிவிட்டார். பின்னர் புகார் கொடுத்த அந்தப் பெண்ணை மனநோயாளியாக ஆக்கி அலுவலகத்தை விட்டு துரத்தி, போலீசு உலகை கொஞ்சம் கவனித்து அந்த புகாரை குப்பைக் கூடைக்கு வீசி எறிந்து விட்டார். அவர் நினைத்திருந்தால் அந்தப் பெண்ணை கூலிக்கு ஆள் அமர்த்தி கொலையே செய்திருக்கலாம். அப்படி செய்யாதது ஏன் என்பதில்தான் அவரது ஜீனின் மாட்சிமை அடங்கியிருக்கிறது. பார்பனர்கள் எப்போதும் யாரையும் நேரடியாக கொலை செய்து பழக்கமில்லை. அதெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடும் காட்டு மிராண்டிகளான ‘கீழ்சாதி’ பயல்கள் செய்வது. அந்துமணி இரமேஷ் அய்யரை அப்படி எடை போட்டு விடாதீர்கள்.
இதற்கு மேல் அந்துமணியை கைது செய்து அந்த பாலியல் வன்புணர்ச்சிக்கான வழக்கில் விசாரித்து அவருக்கு தூக்குதண்டனை வாங்கித்தரவேண்டும் என்று யாராவது கிளம்பினால் அது தருமத்தின்படியும், மனு தர்மத்தின்படியும், பார்ப்பன நெறிப்படியும் அநீதியானதாகும். மேலும் உலகை ஆளும் ஒரு பார்ப்பனனை அப்படி தூக்கில் போட்டால் இந்தியாவே இயற்கை சீற்றத்தால் அழியுமென்பது உறுதி. ஆகவே யாரும் அந்த புண்ணியவானுக்கு தீங்கிழைக்காமல் இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஏற்கனவே காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதிக்கு அப்படி ஒரு அபகீர்த்தி நிகழ்ந்ததனால்தான் சுனாமி ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தார்கள். பெரியவாள் துறவறத்தோடு, பார்ப்பன தர்மத்தையும், இந்து மதத்தையும் அல்லும் பகலும் பாடுபட்டு காப்பாற்றும் திருப்பணியை செய்து வந்தவர். தொடர்ச்சியாக அந்த வேலைகளில் ஏற்பட்ட களைப்பு காரணமாக சில பல பார்ப்பன மாமிகளின் மேல் கை வைத்து விட்டார். அதுவும் கூட வன்புணர்ச்சி என்று முடிவு செய்துவிடக்கூடாது. அதெல்லாம் பெரியவாளுக்காக சில பக்தர்கள் ஒப்புதலுடன் மேற்கொண்ட பரிகாரங்கள்.
அனுராதா ரமணன் மட்டும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பெரியவாளின் செய்கையில் குற்றம் கண்டுபிடித்து பொதுவெளியிலும் அம்பலப்படுத்தினார். அவர் புராணக்கதைகள் எதையும் படித்ததில்லை போலும். ஆனானப்பட்ட இந்திரனும், விசுவாமித்திரனும் கூட இப்படி சில தருணங்களில் சஞ்சலப்பட்டவர்கள்தான். அதையெல்லாம் பரப்பிரம்மத்தின் ஆகிருதி விளையாட்டு என்று கொள்வதை விடுத்து இகலோக மனிதப்பதர்களின் நோக்கில் ஆய்வு செய்வது தவறு.
இதையெல்லாம் புரிந்து கொள்ளாத குசும்புப் பார்ப்பான் சங்கரராமன் தொட்டதுக்கெல்லாம் மொட்டைக்கடிதாசி போட்டு பெரியாவளை இம்சித்து வந்தான். பெரியவாளும் எத்தனை நாள் இந்தக் கொசுக்கடியை சமாளிப்பது? அவாளுக்கும் சமயத்தில் கோபம் வருமோ இல்லியோ? பக்தரான அப்புவையும், ரவி சுப்ரமணியனையும் கூப்பிட்டு சங்கர ராமனை போட்டுத் தள்ளுமாறு உத்திரவிட்டார். அவர்களும் பெரியவாளின் கொசுக்கடியை கோவில் வளாக்கத்திலையே அரிவாளால் அழித்து விட்டார்கள். தெய்வம் நின்று கொல்லுமென்பது பெரியவாளின் விசயத்தில் உண்மையானது.
இது பொறுக்காத சில ஜென்மங்கள் பெரியவாளை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தியது அக்கிரமம். ஆனாலும் பெரியவாள் சஞ்சலப்படாமல் தொடர்ந்து போராடி எல்லா சாட்சிகளையும் விலைக்கு வாங்கி, பிறகு நீதிபதிக்கே ரேட் பேசி வழக்கை நீர்த்துப் போகச் செய்து விட்டார். இதெல்லாம் நீதிமன்றங்களில் சகஜம் என்பது ஒரு போண்டா வக்கீலுக்கு கூட தெரியும்.
தற்போது இந்த வழக்கை மறு விசராணை செய்து குற்றத்தை நீருபித்து பெரியவாளை தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று சிலர் பேசுவது சரியா? பூலோக இந்துக்களின் சர்வலோக குருவை இப்படி ஒரு கொசுக்கடி அழிப்பிற்காக தூக்கில் தொங்க விடுவது சரியா? நேர்மையுள்ள இந்துக்கள் சிந்திக்கட்டும். ஒரு வேளை சில தமிழ் – திராவிட – கம்யூனிஸ்ட் வெறியர்கள் அப்படி பெரியவாளை தூக்கில் போடுவதற்கு காரணமாக இருந்தால் இந்தியா அழிவது உறுதி.
விருத்தாசலம் கோவிந்தசாமி வயிற்றுப்பாட்டுக்காக திருடியதும், நம்மவா முதல்வர் புரட்சித் தலைவி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததும் ஒன்றா? சில அம்மாஞ்சிகள் அப்படிக் கேட்கிறார்கள். கோவிந்தசாமி திருடி, கற்பழித்ததற்கு தூக்கா, முழு தமிழகத்தையும் மொட்டையடித்த ஜெயாவுக்கு வாய்தாவா என்று கேட்பது மாபெரும் அநீதி.
புரட்சித் தலைவி தன்னை பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே துணிவாக அறிவித்த வீராங்கனை. இது வரை தமிழகம் கண்டமுதல்வர்களில் ஒரே ஒரு  இந்து முதல்வர் இவர்தான் என்று வீரத்துறவி இந்து முன்னணி இராம கோபாலனால் பாராட்டப்பட்ட தாய். அவருக்கென்று குடும்பமோ, குட்டியோ எதுவும் கிடையாது. அவர் சொத்து சேர்ப்பது யாருக்காக? தமிழகத்தில் உள்ள எல்லாக் கோவில்கள்களிலும் பூஜை, புனஸ்காரங்கள், யாகங்கள், குடமுழுக்கு செய்து இந்து தருமத்தை காப்பாற்றுவதற்காகவே அப்படி சொத்து சேர்க்கிறார். அதுவும் பெரிய பெரிய முதலாளிகள் தமிழகத்தில் தொழில் துவங்கி கைமாத்தாக வைக்கும் தட்சிணையைப் போய் அப்படி சொத்து சேர்ப்பு, திருட்டு, ஊழல் என்று சொல்வது யாருக்கு அடுக்கும்?
மல்லையாவின் மெக்டோவல் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடுவதனால்தானே சூத்திர, பஞ்சம, சண்டாளப் பயல்களுக்கு இலவச லாப்டாப்பெல்லாம் கொடுக்க முடிகிறது? அதற்கு காணிக்கையாக மல்லையா புண்ணியவான் சில போல கோடிகளை அம்மாவுக்கு கொடுத்தால் என்ன தப்பு?
பெங்களூரூ சொத்து குவிப்பு வழக்கிற்காக அம்மா எத்தனை நெடிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது? இல்லையென்றால் அந்த கோவிந்தராசனை சட்டுப்புட்டென்று தூக்கில் போட தீர்ப்பளித்த மாதிரி ஓரிரு வருடங்களில் வழக்கை முடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
ஆக பார்ப்பன அறம் தழைத்தோங்க, பூலோகம் செழித்திருக்க அந்துமணி இரமேஷ், காஞ்சிப் பெரியவாள், புரட்சித் தலைவி போன்ற ஆன்றோரை காப்பாற்றுவது மானமுள்ள ஒவ்வொரு இந்துவின் கடமை என்பதை இங்கே வலியுறுத்துகிறோம்.
வந்தே மாதரம்!
பாரத் மாதாகி ஜெய்!!
இந்து தர்மம் ஓங்குக!!!

செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்?

Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=348858
அதிர்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதே என நினைக்கும் போது! ஆச்சரியமாகவும் இருக்கிறது, இன்னும் அதற்கு எதிர்வினை நடக்கவில்லையே என்று.

கேரள மாநிலம் சோரனூர் அருகே உள்ள சுதவலத்தூரைச் சேர்ந்த அழகுப் பெண் சவுமியா, 23. வழக்கம் போல, அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். கேரளா முழுக்க கொந்தளிப்பையும், நாடு முழுக்க பரபரப்பையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர், விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி. ஆளைப் பிடித்தவர்கள், மளமளவென வழக்கை விசாரித்து, அவருக்கு மரண தண்டனையையும் வாங்கிக் கொடுத்து விட்டனர். இதுவல்ல செய்தி. இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு 24 மணி நேரம் கடந்துவிட்ட பிறகும், இன்னும் ஒரு தமிழினத் தலைவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை; ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை; மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருக்கவில்லை. இது தான் செய்தி. காரணம், அவர்கள் தலையிட்டு, இந்த மரண தண்டனையை தடுத்து நிறுத்துவதற்கான ஆயிரத்தெட்டு காரணங்கள், இந்தப் பிரச்னையில் உள்ளன.
இந்த வழக்கை, வெறுமனே ஒரு கற்பழிப்பு வழக்காகவோ, கொலை வழக்காகவோ மட்டும் கருதிவிட முடியாது. இது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான விஷயம் மட்டுமில்லை. இரு இனங்களுக்கு இடையிலான பிரச்னை. இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம்.

கோவிந்தசாமி ஒரு தமிழன். சவுமியா ஒரு கேரளத்துப் பெண். இது ஒன்று போதாதா, விஷயத்தின் வீரியத்தைப் புரிந்து கொள்ள! ஏற்கனவே அவர்களுக்கும் நமக்கும் தண்ணீர் தாவா இருக்கிறது. முல்லைப் பெரியாறு கோபத்தை, அவர்கள் இந்த வழக்கில் காட்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதை உலகுக்கு உணர்த்த, ஒரு தமிழ்க்குடிதாங்கி இல்லையா, இந்த நாட்டில்?

கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாத செயலாக இருக்கிறதே! கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. ஏதோ, வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச் சின்ன ரயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் தான். உணர்ச்சியின் உந்துதலில் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார். ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன? அவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தானே, அந்தத் தம்பியின் உயிரை தூக்குக் கயிற்றின் முன் ஊசலாட விட்டிருக்கின்றன! இறந்துவிட்ட அந்த அபலைப் பெண் சவுமியா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் கோவிந்தசாமியை மன்னித்திருப்பார் என்பது, மற்றவர்களுக்குத் தெரியாதா 

சம்பவம் நடந்தது, கடந்த பிப்ரவரியில் தான். அதற்குள் மரண தண்டனை விதிக்கும் அளவு அவசரம் என்ன? ஒன்பது மாதங்களுக்குள், 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள், கோர்ட்டில் விசாரித்து முடிக்கப்பட்டுவிட்டதாம். கோவிந்தசாமியிடம், 427 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதாம். நம்பும்படியாகவா இருக்கிறது இந்தக் கதை? உலகத்திலேயே தட்டிக் கேட்பதற்கு நாதியற்ற ஒரே இனம், எம் தமிழினம் தான் என்ற இளக்காரத்தில் செய்யப்பட்டது போல் தெரிகிறதே!

குற்றம்சாட்டப்பட்டிருப்பவர், ஒரு தமிழன்; தாழ்த்தப்பட்டவர். அதிலும், மாற்றுத் திறனாளியும் கூட. இறந்தது ஒரே ஒரு பெண். அதுவும் தமிழச்சி கிடையாது. அதற்காக, தம்பி கோவிந்தசாமி, ஒன்பது மாதங்களாக கேரளத்து கொட்டடிகளில் சிறைவாசம் அனுபவித்தது போதாதா? அவரை தூக்கில் வேறு தொங்கவிட வேண்டுமா? இது, ஒரு மனிதனுக்கு இரண்டு தண்டனைகள் விதித்தது போல் ஆகாதா? இயற்கை நீதிக்கு முரணான விஷயமில்லையா?
ஒருவேளை, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும், 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ!
-நமது சிறப்பு நிருபர்-