Monday, March 18, 2013

இராஜதர்ம முடிவா? புலனாய்வு முடிவா? - பூநகரான்

Source: http://www.lankawin.com/show-RUmryDScNYes0.html
ஈழத் தமிழர் விவகாரத்தில், இந்திய மத்திய அரசு சுய முரண்பாடு மிக்க முடிவுகளை எடுத்தெடுத்தே அவ்வப்போது மத்திய நடுவண் அரசின் இறுதி முடிவுகளை இறுதி நேரத்தில் மாற்றி மாற்றி வருகிறது.
அத்தோடு அது அமெரிக்காவின் உச்சமட்ட இராஜதந்திர ராஜீக முடிவுகளை மட்டுமன்றி , ஐ நா அவையின் உத்தியோகபூர்வமான முடிவுகளைக் கூட மாற்றி வந்திருக்கிறது. இதற்கு பூகோள அரசியலில் இந்தியாவின் சமகால நிலைப்பாட்டுப் பலம் மட்டும் காரணம் என்று கூறி தமிழராகிய நாம் தப்பி விட முடியாது.
உண்மையில் இதற்கு ஒட்டு மொத்த புலம்பெயர்ந்த தமிழரின் இராஜதந்திரமற்ற வெற்று அரசியலும், சரியான பாதையில் செயற்படுபவர்களிற்கும் நகர முனைபவர்களிற்கும் தடையாக உள்ள உணர்ச்சி முதலீட்டுப் புலம்பெயர் குழுக்களும், இதனை உணர்ந்து மொழி வழித் தேசிய ரீதியில் அரசியல் சிந்தனையை முடுக்கி விடாது உணர்ச்சி வேக ஆதரவை அளிக்கும் நாங்களுமே பொறுப்பாவோம்.
தற்போது கருணாநிதியைச் சந்தித்து சமாதானப்படுத்த இந்திய மத்திய அமைச்சர்கள் சென்னை வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இவர்கள் டெல்லியில் இருந்து மத்திய அரசின் அரசியல் முடிவுகளை மாற்றி வரும் புலனாய்வாளர்களையும், இந்திய மத்திய அரசின் இராஜதந்திரிகள் ஸ்தானத்தில் உள்ள பிரதான அலுவலர்களையும் அல்லவா சந்திக்க வேண்டும்.
இந்த இடத்தில் கலைஞர் தான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் காண வேண்டுமாயின் அவர்களை திரும்பிச் சென்று மத்திய அரசில் உள்ள தமிழ் விரோத சக்திகளை சந்திக்குமாறு கூறி எடுத்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மத்திய அரசின் அதிகாரிகளைச் சந்திக்க மறுத்ததை அவர் உற்றுக் கவனிக்க வேண்டும்.
கோடிக்கணக்கில் உலகெலாம் தமிழர் இருந்தும் அவர்களிற்கு என்று ஒரு நாடு இல்லை என்று சிறீலங்காவின் அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்ததையும், அன்மையில் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் ஆற்றிய தமிழரிற்காக ஐநாவில் குரலெழுப்ப பிரதிநிதித்துவம் இல்லையென்ற உரையையும் கலைஞர் தன்னைச் சந்திக்கும் மத்திய அமைச்சர்களிற்கு உணர்த்த வேண்டும்.
இந்தியா தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தாது தமிழகத்தை பிரித்து மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நோக்குமானால் காலப் போக்கில் தமிழகமும் தமிழீழம் போல் பிரிவினைக்கு தள்ளப்படும் என்பதை புரிய வைக்க வேண்டும்.
கேட்கப்படுவதும் கோரப்படுவதும் மட்டும் பிரிவினை அல்ல. புறக்கணிப்பும், அமுக்குவதும், மாற்றான் தாய் மனப்பான்மையும் கூட பிரிவினையே என்பதை துப்புத் தேடும் புலனாய்வாளர்களிற்கும், பொது ஜனத் தொடர்பும், வாக்கெடுப்பும் அன்றி தங்கள் சுய மன அபிலாஜைகளின் அடிப்படையில் தங்களிற்குரிய இறுதி முடிவை மாறறியமைக்கும் வாய்ப்புள்ள அதிகாரிகளை இந்திய தேசியம் பற்றி சிந்திக்கவும் வைக்க வேண்டும்.
அதாவது தவறான இராஜதந்திர முடிவால் பாரதம் என்கிற தேசிய உணர்வு மிக்க இராஜதர்ம முடிவை மாற்றக் கூடாது என்பதை எடுத்துரைக்க வேண்டும். இல்லாவிடின் ஒட்டு மொத்த தமிழக ஆதரவுடன் பாரதீய ஜனதா அரசிற்கு ஆதரவு அளித்து, அதன் மூலம் “காங்கிரஸ் இந்தியாவின்” திரு நம்பியார் போன்ற அதிகாரிகளும் திரு நாராணயசுவாமி போன்ற அமைச்சர்களும் இதர அரசியல்வாதிகளும் சிறீலங்காவுடன் சேர்த்து சர்வதேச விசாரணைக்கு உட்பட வேண்டிய தேவையை உருவாக்குவதைத் தவிர வேறு மார்க்கம் தமிழக தமிழர்களிற்கு இல்லை.
அதாவது தமிழக கோட்டை அதிகாரப் போட்டிக்கு அப்பால், தமிழகம் இணந்து செயற்பட வல்லதாக, சிறீலங்கா அரசால் 2002 ம் ஆண்டிலிருந்து வெளியேற்றப்பட்ட, வெள்ளைப்புலிகள் என முத்திரை குத்தப்பட்ட பழைய கண்காணிப்பு அதிகாரிகளையும், லூயி ஆர்பர் போன்றவர்களையும், பிரித்தானியா கனடா அடங்கலாக உள்ள அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கனேடிய ஊடக நண்பர்களை எல்லாம் என்று திரட்டி ஒரு உலகளாவிய ஈழத் தமிழர் மனித உரிமை ஜனநாயக அமைப்பை அமைத்து அதற்குள் தமிழகத்தின் முதல்வராக வருபவரையும், எதிர்க்கட்சித் தலைவராக வருபவரையும் உள்ளடக்கி டெல்லி தமிழகத்தை பிரித்தாளும் வாய்ப்பை தவிடு பொடியாக்க வேண்டும்.
இதனை புலம்பெயர்ந்த அமைப்புக்களோ அன்றில் கனடாவின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பவர்களோ என்றோ செய்திருக்க வேண்டும். இதனையே தமிழரின் இராஜதந்திரமற்ற வெற்று அரசியல் என்று தொடக்கத்திலேயே சுட்டியுள்ளேன்.
அமெரிக்காவையும் அதன் சிறீலங்காவிற்கு எதிரான அழுத்தங்களையும் தீர்மானங்களையும், அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் மாற்றி அமைக்கவில்லை. இந்தியாவே அதனை மாற்றுகிறது என்பதை புலம் பெயர்ந்த தமிழராகிய நாம் உணர வேண்டும்.
தலைவர் பிரபாகரன் அன்றே இனங் கண்டதைப் போல், இந்தியாவே பெரும் தடைக்கல் என்பதை நாம் உணர்ந்து இந்தியாவை எதிர்ப்பதை விட்டு அமெரிக்காவை எதிர்ப்பது நியாயமானதாகவோ விவேகமானதாகவோ புலப்படவில்லை.
சரியான ராஜீக நகர்வுகளிற்கான சர்வதேச ராஜீக வெளியற்ற புலம்பெயர் தமிழர்கள் அமைப்புக்களாவது இத்தகைய தவறுகளை நம்மவர்க்கு கூட்டிக் காட்டி உள்ள அமெரிக்க ஆதரவையும் இழக்காது காக்க முயல வேண்டும்.
என்றோ கடனைத் தீரத்திருக்க வேண்டிய கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகக் கருணா ஆவாரா?
அல்லது உறுதியுடன், சமாதானப்படுத்த வரும் மத்திய அமைச்சர்களை இராஜதர்மத்தின் அடிப்படையிலும், தமிழக அபிலாஜைகளினதும், அவசர பாதுகாப்புத் தேவைகளின் அடிப்படையிலும், தமிழகத்தையும் அடக்கிய இந்திய தேசிய நிலைப்பாட்டில் உறுதியாகவும் தெளிவாகவும் இருப்பாரா?
அல்லது உண்மையை அறியாது பொய்யை மீண்டும் நம்பி கறள் பிடித்த வெற்று வாளாவாரா? என்பதை நாளைய செய்திகள் தான் நமக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தமிழக மக்களிற்கும் மாணவர்களிற்கும் புலம் பெயர் ஈழத் தமிழரின் நன்றி.
kuha9@rogers.com