Wednesday, August 4, 2010
ஜெ ஜெயலலிதா அவர்களின் அறிக்கை
போலி சாதி சான்றிதழை கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்துவிட்டார் என்ற காரணத்தைக் காட்டி, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த 1990 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு. சி. உமாசங்கரை தற்காலிக பணிநீக்கம் செய்திருப்பது மைனாரிட்டி தி.மு.க. அரசின் பழிவாங்கும் போக்கையே காட்டுகிறது.
அகில இந்திய பணி நியமனங்கள் அனைத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செய்யப்படுகின்றன. இந்திய ஆட்சிப் பணியில் நியமனம் செய்யப்படும் ஒவ்வொருவரின் பூர்வீகம் குறித்த விவரங்களை கண்டறிவதும், அனைத்துச் சான்றிதடிநகளை சரிபார்ப்பதும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பொறுப்பாகும்.
இந்தச் சூழ்நிலையில் போலி சாதிச் சான்றிதழை காட்டி இந்திய ஆட்சிப் பணியில் திரு. உமாசங்கர் சேர்ந்திருக்கிறார் என்று கருணாநிதியின் அரசு திடீரென்று கூறுவதில் உள்நோக்கம் இருக்கின்றதோ என்ற சந்தேகம் எழுகிறது.
2007 ஆம் ஆண்டு மே மாதம் கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கருணாநிதியின் பேரன்களான கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறனுக்கு எதிராக கருணாநிதியின் மகன் அழகிரி சண்டையிட ஆரம்பித்தார்.
9.5.2007 அன்று மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான மதுரையிலுள்ள தினகரன் பத்திரிகை அலுவலகம் அழகிரிக்கு நெருக்கமான ரவுடி கும்பலால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில், பத்திரிகை அலுவலகக் கட்டிடம் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. இதன் விளைவாக மூன்று அப்பாவி ஊழியர்கள்கொல்லப்பட்டனர்.
கருணாநிதியின் வேண்டுகோளின் பேரில், மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதி மாறன் நீக்கப்பட்டதிலிருந்தே, இந்தத் தாக்குதல் கருணாநிதியின் ஆசியோடு தான் நடைபெற்றது என்பது தெள்ளத் தெளிவாகிறது. மேலும், மாறன் சகோதரர்களின் பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியை தடுக்கும் வகையில், ‘மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு’ என்ற பெயரில், அரசு கேபிள் நிறுவனம் தொடங்கப்படும் என்று அறிவித்தார் கருணாநிதி.
இதன் உண்மையான நோக்கம் மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்திற்கு பிரச்சினை கொடுக்க வேண்டும், போட்டியாகத் திகழ வேண்டும் என்பதுதான். சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற கருணாநிதியின் குறிப்பான கட்டளையோடு தான் அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக திரு. உமாசங்கர் நியமிக்கப்பட்டார்.
அதிநவீன மின்னணு சாதனங்களும், கேபிள்களும் வாங்குவதற்காக, அரசு கேபிள் நிறுவனத்தில் 400 கோடி ரூபா மேல் முதலீடு செய்யப்பட்டது. காவல் துறையிடம் கொடுக்கப்பட்ட புகார்களின்படி, பல இடங்களில் அரசு கேபிள் நிறுவனத்தின் செயல்பாடுகளை தடுத்திடும் வகையில், அதன் கேபிள்களை சுமங்கலி கேபிள் நிறுவனத்தார் சிதைத்தனர்.
அரசு கேபிள் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என்ற தகுதியின் அடிப்படையில், அரசின் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக மாறன் சகோதரர்கள் உட்பட இந்தச் செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
பரிந்துரை செய்து இருக்கிறார் திரு. உமாசங்கர். ஆனால், இதற்குப் பிறகு, சண்டையிட்டுக் கொண்ட கருணாநிதி உறவுகளுக்குள் திடீரென்று ஓர் உடன்படிக்கை ஏற்பட்டுவிட்டது.
இதனையடுத்து, மாறன் சகோதரர்களின் அராஜகங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக கருணாநிதியால் நியமிக்கப்பட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திரு. உமாசங்கர் பலிக்கடா ஆக்கப்பட்டு, பழிவாங்கப்பட்டு, அரசு கேபிள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.
அரசு கேபிள் நிறுவனமும் செயலிழந்துவிட்டது. கோடிக்கணக்கான மக்கள் பணம் விரயமாக்கப்பட்டுவிட்டது. கருணாநிதி குடும்பம் பிரிந்து மறுபடியும் சேர்ந்ததன் விளைவாக இவ்வளவு பெரிய நிதி இழப்பை தாங்க வேண்டிய நிலைக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டனர்.
மாறன் சகோதரர்களின் விரோதத்தை மட்டும் திரு. உமாசங்கர் சம்பாதிக்கவில்லை.
இதற்கு முன்பு, 2006 ஆம் ஆண்டு, தமிழநாடு மின்னணுக் கழகத்தின் (ELCOT) மேலாண்மை இயக்குநராக இவர் நியமனம் செயப்பட்டார். New Era Technologies Ltd என்ற நிறுவனத்துடன் இணைந்து ELNET என்ற கூட்டு நிறுவனத்தை ELCOT துவக்கியது.
இதற்கிடையில், ELNET நிறுவனம் ETL Infrastructures Limited என்ற துணை நிறுவனத்தை தொடங்கியது. இந்த நிறுவனத்திற்கு 700 கோடி மதிப்பில் சொத்து இருக்கிறது.
இந்த நிறுவனம் சென்னைக்கு அருகில் உள்ள பள்ளிக்கரணையில் 25 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் 17 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவினை கட்டியுள்ளது. தமிழக அரசு நிறுவனமான ELCOT நிறுவனத்தின் துணை நிறுவனம் என்ற பெயரைச் சொல்லி, இந்திய அரசிடமிருந்து தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற தகுதியையும் இந்த நிறுவனம் பெற்றுவிட்டது. பின்னர், திரு. தியாகராஜ செட்டியாரை தலைவராகவும், அவரது மனைவி திருமதி உண்ணாமலை தியாகராஜன் அவர்களை மேலாண்மை இயக்குநராகவும் கொண்ட தனியார் நிறுவனமாக ETL நிறுவனம் ஆகிவிட்டது.
ETL நிறுவனத்தின் 700 கோடி ரூபா சொத்துக்கள் இந்த தனி நபர்களிடம் தான் உள்ளது. ELCOT நிறுவனத்தின் பதிவேடுகளிலிருந்து ETL நிறுவனமும், அதன் 700 கோடி ரூபா சொத்தும் காணாமல் போய்விட்டது குறித்து திரு. உமாசங்கர் கேள்வி எழுப்பியதாலும், இதனுடைய பயனாளிகள் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நெருக்கமானவர்கள் என்பதை
சூசகமாக தெரிவித்ததாலும், திரு. உமாசங்கர் ELCOT நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்.
ETL நிறுவனம் என்னவாயிற்று? ETL நிறுவனத்தின் 700 கோடி ரூபா சொத்து என்னவாயிற்று? தியாகராஜ செட்டியார் என்பவர் யார்? அவருக்கும், கருணாநிதி குடும்பத்திற்கும் என்னத் தொடர்பு? அரசு கேபிள் நிறுவனத்தின் தற்போதைய நிலை என்ன? அரசு கேபிள் நிறுவனத்தின் மூலம் எத்தனை பேர் கேபிள் இணைப்பு பெற்றிருக்கிறார்கள்? அரசு கேபிள் நிறுவனத்தில் முதலீடு செயப்பட்ட 400 கோடி ரூபா என்னவாயிற்று?
அரசு கேபிள் நிறுவனத்திற்காக வாங்கப்பட்ட அதிநவீன உபகரணங்கள் என்னவாயிற்று? இந்த இழப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியது கருணாநிதி குடும்பமா அல்லது அப்பாவி தமிழக மக்களா? கருணாநிதி குடும்பத்தினரின் அராஜகங்களை வெளிக் கொணர்ந்ததற்காக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஏன் பழிவாங்கப்படுகிறார்? இந்த ஜனநாயகப் படுகொலையை தமிழக மக்கள் இன்னும் எத்தனை நாட்கள் தான் பொறுத்துக் கொள்ள வேண்டும்? என்பதற்கெல்லாம் கருணாநிதி விளக்கம் கொடுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment