Monday, November 14, 2011

செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்?

Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=348858
அதிர்ச்சியாக இருக்கிறது, இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதே என நினைக்கும் போது! ஆச்சரியமாகவும் இருக்கிறது, இன்னும் அதற்கு எதிர்வினை நடக்கவில்லையே என்று.

கேரள மாநிலம் சோரனூர் அருகே உள்ள சுதவலத்தூரைச் சேர்ந்த அழகுப் பெண் சவுமியா, 23. வழக்கம் போல, அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். கேரளா முழுக்க கொந்தளிப்பையும், நாடு முழுக்க பரபரப்பையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர், விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி. ஆளைப் பிடித்தவர்கள், மளமளவென வழக்கை விசாரித்து, அவருக்கு மரண தண்டனையையும் வாங்கிக் கொடுத்து விட்டனர். இதுவல்ல செய்தி. இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டு 24 மணி நேரம் கடந்துவிட்ட பிறகும், இன்னும் ஒரு தமிழினத் தலைவர் கூட கண்டனம் தெரிவிக்கவில்லை; ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை; மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருக்கவில்லை. இது தான் செய்தி. காரணம், அவர்கள் தலையிட்டு, இந்த மரண தண்டனையை தடுத்து நிறுத்துவதற்கான ஆயிரத்தெட்டு காரணங்கள், இந்தப் பிரச்னையில் உள்ளன.
இந்த வழக்கை, வெறுமனே ஒரு கற்பழிப்பு வழக்காகவோ, கொலை வழக்காகவோ மட்டும் கருதிவிட முடியாது. இது ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான விஷயம் மட்டுமில்லை. இரு இனங்களுக்கு இடையிலான பிரச்னை. இரு மாநிலங்களுக்கு இடையிலான விவகாரம்.

கோவிந்தசாமி ஒரு தமிழன். சவுமியா ஒரு கேரளத்துப் பெண். இது ஒன்று போதாதா, விஷயத்தின் வீரியத்தைப் புரிந்து கொள்ள! ஏற்கனவே அவர்களுக்கும் நமக்கும் தண்ணீர் தாவா இருக்கிறது. முல்லைப் பெரியாறு கோபத்தை, அவர்கள் இந்த வழக்கில் காட்டியிருக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? இதை உலகுக்கு உணர்த்த, ஒரு தமிழ்க்குடிதாங்கி இல்லையா, இந்த நாட்டில்?

கோவிந்தசாமி, சாதாரண தமிழன் மட்டுமில்லை; மாற்றுத் திறனாளியும் கூட. ஆம், அவருக்கு இடது கை கிடையாது. அப்படிப்பட்ட ஒரு பரிதாபத்துக்குரிய ஜீவனுக்கு மரண தண்டனை விதிப்பதா? கொஞ்சம் கூட மனிதாபிமானமில்லாத செயலாக இருக்கிறதே! கோவிந்தசாமி, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும் கூட. ஏதோ, வயிற்றுப் பிழைப்புக்காக சின்னச் சின்ன ரயில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவர் தான். உணர்ச்சியின் உந்துதலில் ஒரு பெண்ணைக் கற்பழித்து விட்டார். ஒரு கொலை, ஒரு கற்பழிப்பு, சில திருட்டுகளைத் தவிர, கோவிந்தசாமி செய்துவிட்ட குற்றமென்ன? அவர் தாழ்த்தப்பட்டவராகப் பிறந்த ஒரே குற்றத்துக்காகத் தானே, அந்தத் தம்பியின் உயிரை தூக்குக் கயிற்றின் முன் ஊசலாட விட்டிருக்கின்றன! இறந்துவிட்ட அந்த அபலைப் பெண் சவுமியா உயிரோடு இருந்திருந்தால், இந்நேரம் கோவிந்தசாமியை மன்னித்திருப்பார் என்பது, மற்றவர்களுக்குத் தெரியாதா 

சம்பவம் நடந்தது, கடந்த பிப்ரவரியில் தான். அதற்குள் மரண தண்டனை விதிக்கும் அளவு அவசரம் என்ன? ஒன்பது மாதங்களுக்குள், 154 சாட்சிகள், 101 ஆவணங்கள், 43 ஆதாரங்கள், கோர்ட்டில் விசாரித்து முடிக்கப்பட்டுவிட்டதாம். கோவிந்தசாமியிடம், 427 கேள்விகள் கேட்கப்பட்டுவிட்டதாம். நம்பும்படியாகவா இருக்கிறது இந்தக் கதை? உலகத்திலேயே தட்டிக் கேட்பதற்கு நாதியற்ற ஒரே இனம், எம் தமிழினம் தான் என்ற இளக்காரத்தில் செய்யப்பட்டது போல் தெரிகிறதே!

குற்றம்சாட்டப்பட்டிருப்பவர், ஒரு தமிழன்; தாழ்த்தப்பட்டவர். அதிலும், மாற்றுத் திறனாளியும் கூட. இறந்தது ஒரே ஒரு பெண். அதுவும் தமிழச்சி கிடையாது. அதற்காக, தம்பி கோவிந்தசாமி, ஒன்பது மாதங்களாக கேரளத்து கொட்டடிகளில் சிறைவாசம் அனுபவித்தது போதாதா? அவரை தூக்கில் வேறு தொங்கவிட வேண்டுமா? இது, ஒரு மனிதனுக்கு இரண்டு தண்டனைகள் விதித்தது போல் ஆகாதா? இயற்கை நீதிக்கு முரணான விஷயமில்லையா?
ஒருவேளை, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும், 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ!
-நமது சிறப்பு நிருபர்-

No comments:

Post a Comment