Friday, August 9, 2013

மர்மமான முறையில் உடலில் தீப்பிடிக்கும் குழந்தை: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதி

 நன்றி: தினமணி /Aug 10, 2013


மர்மமான முறையில் திடீர் திடீரென்று உடலில் தீப்பிடிக்கும் இரண்டு மாதக் குழந்தை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தரங்கிணி கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கர்ணன், அவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு கடந்த மே மாதம் 22-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த எட்டு நாள்களில் திடீரென அதன் உடலில் தீப்பிடித்தது. குழந்தையின் உடலில் பல இடங்களில் தீக்காயம் ஏற்பட்டது.
குழந்தை பிறந்த இரண்டரை மாதத்திற்குள் நான்கு முறை இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. இதனால் பெற்றோரும் உறவினரும் பீதியடைந்தனர்.
இதையடுத்து அந்தக் குழந்தை விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இரண்டு முறை சேர்க்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டது. குழந்தையின் உடலில் திடீரென தீ பிடிப்பதற்கான காரணத்தை டாக்டர்களாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதன் பின்பு புதுவை ஜிப்மர் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கும் இதற்கான காரணத்தை டாக்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதை தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அந்தக் குழந்தை எடுத்துவரப்பட்டு அங்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து குழந்தை கண்காணிக்கப்பட்டு வருகிறது. குழந்தையை கவனிப்பதற்கென தனியாக ஒரு மருத்துவரும் செவிலியரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

விநோத நோய்: இது குறித்து மருத்துவமனையின் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவின் தலைவர் டாக்டர் நாராயணபாபு கூறியது:

கடந்த 300 ஆண்டுகளில் 200 பேருக்கு இந்த அரிதான நோய் இருந்துள்ளது. கடைசியாக 1980-ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி தாமஸ் என்ற 73 வயது முதியவர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அதன் பின்பு உலகிலேயே இந்தக் குழந்தைதான் இந்த விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுதான் முதல் முறை.
குழந்தையின் உடலில் தீப்பிடித்து எரியக்கூடிய வாயு உருவாகியுள்ளது. இதனால் அவ்வப்போது குழந்தையின் உடலில் தீப்பிடித்து எரிகிறது.
குழந்தையை காற்றோட்டமான, குளிர்ந்த இடத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் எளிதில் தீப்பற்றக்கூடிய அடுப்பு, மெழுகுவர்த்தி, மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருள்களை குழந்தையின் அருகில் வைக்கக் கூடாது. எளிதில் தீப்பற்றி எரியும் உடைகளையும் அணிவிக்கக்க கூடாது. குழந்தையின் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார் அவர்.
குழந்தை, சிகிச்சைக்காக வைக்கப்பட்டுள்ள அறையில் தண்ணீர், தீயணைப்பு சாதனங்கள் உள்ளிட்டவை பாதுகாப்புக்காக வைக்கப்பட்டுள்ளன. இது அரிய வகை நோய் என்பதால் இதற்கான சரியான சிகிச்சை முறைகள் இல்லையென்று கூறப்படுகிறது.
இந்த அரிதான குழந்தையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்தும், ஆய்வுகளை மேற்கொண்டும் வருகின்றனர்.

No comments:

Post a Comment