நன்றி: தினமணி
தமிழகம் தவிர்த்து, பிற இந்திய மாநிலம் எதுவும் ஆங்கிலத்தை தலைமேல் வைத்துக் கொண்டாடவில்லை. அவை தத்தம் தாய்மொழிகளுக்கே ஏற்றம் தந்தன. அங்கு மேல்தட்டில் மிகக் குறைவாக விரிசல் இருந்தாலும், பொதுமக்கள் அனைவரும் தங்கள் தாய்மொழியையே நாடுகின்றனர்.
தொடக்கக் கல்வியில் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகக் கற்கவும் அவர்கள் விரும்பவில்லை. வட இந்தியப் பெருமொழிகளான இந்தி, வங்காளம், குசராத்தி, மராத்தி யாவும் முழுமையாய் தாய்மொழி வழிக் கல்வியையே ஏற்று, விரும்பிப் படிக்க வைக்கின்றனர். அம்மொழிகள் ஒவ்வொன்றிலும் அம்மொழி எண்களே பயன்படுத்தப்படுவதாலும் இதை அறியலாம்.
தமிழகத்தில் மட்டுமே இயற்கைக்கு மாறான உணர்வு திணிக்கப்பட்டு விட்டது. இங்கு அரசு, ஆங்கிலத்திற்கு நிகரான ஆதரவை தமிழுக்குத் தந்து, நிதியை உயர்த்துமேயானால், ஓரிரு ஆண்டுகளிலேயே பெரு மாற்றம் ஏற்பட்டு, தாய்த் தமிழ் அரியணையில் அமர்ந்து கோலோச்சும் காட்சி உருவாகிவிடும். தாய் மொழியைப் புறக்கணித்து உலகில் நிலை நின்றார் எவரும் இலர்.
வங்காளத்தில் கொல்கத்தா, துர்க்காபூர், அசன்சோலா போன்ற சில நகரங்களில் மட்டுமே ஓரிரு ஆங்கிலவழிப் பள்ளிகள் உள. கிராமங்கள் அனைத்திலும் தொடக்கம் முதல் முடிவு வரை தாய்மொழி வழியே செழித்தோங்குகிறது. பொதுமக்களிடம் ஆங்கிலவழி எடுபடாததால், கல்வி வணிகர்கள் ஆங்கிலத்தைக் காட்டி மாய மந்திரம் செய்ய முடியவில்லை.
சாந்தி நிகேதனில் உலகப் பெருங் கவிஞர் தாகூர் தொடங்கியதில், அனைத்தும் வங்காளமே. ஓரிரு வகுப்புக்கள் தவிர்த்து, அனைத்திலும் தம் தாய்மொழியையே போற்றினார் இரவீந்தரநாத தாகூர்.
ஒருமுறை அங்குள்ள குடியிருப்பில் வசிக்கும், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் மனைவி, வீட்டில் தன் பிள்ளைக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கும்போது, எண்களை பற்றி கூறி, இன்று நாம் பயன்படுத்தும் அரபி எண்களை எழுதிக் காட்டிக் கொண்டிருந்தாராம். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அடுத்த வீட்டு வங்காளப் பெண்மணி, ""என்னம்மா இது, உங்களுக்கென்று, உங்கள் தாய்மொழியில் எண்கள் இல்லையா'' என்று கேட்டாராம். அந்தத் தமிழ்ப் பெண்மணிக்கு வெட்கமாகப் போய்விட்டது. அங்கு எங்கு நோக்கினும் வங்காள எண்களே பெரும்பகுதி பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பலசரக்குக் கடையில், பொருள்கள் வாங்கினால், வங்க மொழி எண்களிலே எழுதிக் கொடுக்கின்றார்.
இதே நிலையில் குசராத்தி, மராத்தி, இந்தி போன்ற மொழிகளிலும் அவரவர் தாய்மொழி எண்களே பயன்படுத்தப்படுகின்றன.
மகாராட்டிர மாநிலத்தில், மராத்தி மட்டுமே தொடக்கக் கல்வியில் உளது. அங்கு ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாக கற்பிக்கலாமா என்று பேசினர். அவ்வளவுதான். உடனே இங்கு "மகாராஷ்டிரம் ஆங்கிலத்திற்குத் திரும்புகிறது' என்று திசை திருப்பும் முறையில் செய்தி வெளியிட்டிருந்தனர். வங்காளத்திலும் தொடக்க நிலையில் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாக மட்டும் கற்பிக்கலாமா என ஆராய ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அத் துணைவேந்தர், தாய்மொழிக் கல்வியின் சிறப்பை மிக விரிவாக எழுதி, மூன்றாம் வகுப்பில் ஆங்கில எழுத்துக்களைக் கற்பிக்கத் தொடங்கலாம் எனப் பரிந்துரை செய்திருந்தார். ஒரு வேடிக்கை என்னவென்றால், தமது அறிக்கையின் ஊடே, தமிழகத்தின் "தாய்மொழிப் பற்றை'ப் பாராட்டிக் குறிப்பிட்டிருந்தார். அதாவது நாம் இந்தியை எதிர்த்தது, அவருக்குத் தெரிந்த அளவில் இவ்வாறு எழுதச் செய்திருக்க வேண்டும்.
இருபது ஆண்டுகளுக்குமுன், பொறியியற் கல்லூரி ஒன்றிற்கு நான் சென்றிருந்தபொழுது, அங்குள்ள பேராசிரியரிடம் ஆங்கில வழியில் பாடம் நடத்துவது பற்றிக் கேட்டேன். ""பெரும்பாலும் முன்னதாக குறிப்பு தயாரித்துக் கொண்டு, அதை வைத்துப் பாடம் சொல்லுவோம். பல ஆண்டு பயிற்சி பெற்றவருக்கு அது மனப்பாடமாகிவிடும். புதியவர்கள் பார்த்துப் படிப்பார்கள்.
திடீரென்று மாணவன் கேள்வி கேட்டால், பெரிதும் தமிழிலேதான் விளக்க நேரும்'' என்றார். அதாவது ஆங்கில வழிக்கு தமிழ் துணையாகுமிடம் பலவாகும். மெட்ரிக் பள்ளிகளிலும் நிலைமை இதுதான். முழுவதும் தமிழிலே விளக்கி, பாட நூலில் அப் பகுதிகளைச் சுட்டிக்காட்டி பலமுறை படிக்கச் சொல்வர். அதாவது பலமுறை படித்தும் எழுதியும் அவை மனப்பாடம் ஆகிவிடும். வேறு சிலர் கடினமான பகுதிகளை எல்லாம் விளக்க தமிழைப் பயன்படுத்திக் கொள்வர்.
""இவை எல்லாம் ஆசிரியர்களின் திறமையைப் பொறுத்தவை. ஆங்கிலத்திலேயே பாடம் நடத்தி, முழுவதும் படித்துக் கற்பதென்பது, மிகச் சில பள்ளிகளில் இயலக்கூடும். அதற்கு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிகுதியான ஆங்கில அறிவு வேண்டும். மற்றபடி தமிழின் துணையுடன் இருமொழிப் பாடமாக நடந்தால்தான் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்'' என்று என் பெயரன் குறிப்பிட்டான்.
புகழ்பெற்ற பல பள்ளிகளில் மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்தும், திரும்பத் திரும்ப "டெஸ்ட்' என்று வகுப்புத் தேர்வு எழுத வைத்தும் பயிற்சி கொடுக்கிறார்கள். கண்டித்து கொடுமைப்படுத்துகிறார்கள். இது மாணவர்களை பைத்தியம் பிடித்தவர்கள்போல் ஆக்கும். சில மாதம் கழித்து, "நெட்டுருப் போடுவது' பழக்கமாகிவிடும்.
இன்னொன்றும் சிந்திக்க வேண்டும். ஆங்கில மொழியை கற்பது வேறு; ஆங்கில வழியில் பிற பாடங்களைக் கற்பது வேறு.
ஆங்கில வழியில் கற்பதனால், ஆங்கில மொழி அறிவு வராது. இது பாடம் பற்றிய பகுதியோடு முடிந்து விடும். பொது அறிவு வளராது. ஆங்கிலத்திலேயே சரளமாக உரையாடக்கூட முடியாது.
ஆங்கிலம் நன்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் வேண்டுமே? அவர்கள் ஆங்கில மொழி அறிவு பெற்ற, ஆங்கிலத்தில் இளங்கலை, முதுகலை படித்தவர்களாக இருக்க வேண்டுமே? அத்தனை பள்ளிகளுக்கும் நன்கு கற்பிக்கவல்ல ஆசிரியர்களுக்கு எங்கே போவது?
வேதியியல், இயற்பியல், கணிதத்தைக் கற்றவர்கள், என்னதான் படித்தாலும் அவ்வத்துறை அறிவு நன்கமையுமே தவிர, ஆங்கில மொழிப் புலமை இராது. அவர்கள்தான் ஆங்கில வழிப் பாடங்களைக் கற்பிக்கிறார்கள். இது அரைகுறைக் கல்வியாக்கும் முயற்சியே.
ஆங்கிலம் முழுமையாகக் கற்காதவர்கள் ஆங்கில வழியில் நடத்த, ஆங்கிலம் தாய்மொழி இன்மையால் அதில் இயல்பான அறிவு அமையாத மாணவர்கள் அதைப் பயில்வது, "குருடும் குருடும் சேர்ந்து குருட்டாட்டம்' ஆடுவது போலாகிவிடும். ஒருவனுடைய உடம்பில் இரத்தம் செலுத்த வேண்டுமானால், இயைபுடைய குருதியைத்தானே தேடுகிறார்கள். ஒவ்வாத உணவை உண்டவன் அதை வெளியேற்றத் துடிப்பதைப் போல மனநிலை கெடும்.
மருத்துவம் கற்ற ஒரு இளைஞர், குழந்தைகள் தாய்மொழி மூலம் கற்பதற்கும் அயல்மொழி மூலம் கற்பதற்கும் உள்ள வேறுபாடறிய ஆராய்ச்சி மேற்கொண்டார்.
ஒருவரது குருதியில் உள்ள மரபணுக்கள் காலங்காலமாக வரும் தனி இயல்புடையவை. அவை தாய்மொழிச் சாயலும் பண்பும் உடையவை. பிறமொழிப் பயிற்சியை அக்குருதியணுக்கள் எளிதில் ஏற்க மறுக்கும். என்னதான் திணித்தாலும் அது காலமெல்லாம் நிலைக்க இயலாது; இடையே புறந்தள்ளிவிடும். இவ்வாறு அவரது ஆய்வு முடிவு பற்றி, என்னிடம் விளக்கினார்.
ஆங்கிலவழிக் கல்வி, கணினிவழித் தொழிலுக்கு இன்று உதவுகிறது. அத்தொழில் மூலம் கைநிறைய ஊதியம் கிடைக்கிறது. இதனால் இளைஞர்கள் எல்லோரும் அத்தொழிலுக்கு ஏற்ற பணியாட்களாக மாறி வருகிறார்கள்.
இதனால் எதிர்காலத்தில் பொது அறிவு மிக்க, திறமை சார்ந்த, சுய சிந்தனையுடைய அறிஞர்களை உருவாக்காமல், கூலிக்கு மாரடிப்பவர்களையே உருவாக்க முடிகிறது.
இது வளரும் சமுதாயத்திற்குக் கேடாகும். ஓரினத்தின் பண்பாடும், நாகரிகமும் அழிவுறும். அனைத்தையும் தந்து, காப்பது மொழியேயாகும். மொழிதான் ஒருவனை மனிதனாக்குகிறது. மொழி சிதைந்தால் நமக்கு என்ன என எண்ணலாகாது.
மெக்காலே அயல் மொழியினன். அவன், தன் மொழியைத் திணித்து, தனக்கு உண்மையாய் உழைக்கும் பணியாட்களை உருவாக்கினான். நாமோ நம் மக்களையே காலமெல்லாம் பணியாளர்களாகி முடங்கிப் போக வழிசெய்கிறோம்.
பணம் மட்டுமே முக்கியமா? "உண்பது நாழி; உடுப்பது இரண்டு' என வாழ்ந்தவர்கள்தானே கல்வி மேதைகளாகி, விஞ்ஞானிகளாகி, புதிய கண்டுபிடிப்பாளர்களாகி காலமெல்லாம் நினைக்கப்படுகிறார்கள்.புற்றீசல்கள் ஒரு சிறு பருவத்துடன் போய்விடும். அதுபோல ஆங்கில மோகமும் நிலை பெறாது. நம் இளையோரின் அறிவும் திறனும் வீணாக வேண்டுமா?
நடுவுநிலையுடன் சிந்திப்பவர்கள் உண்மையை உணர்வார்கள்!
கட்டுரையாளர்: தமிழறிஞர்