நாம் வாழும் இல்லத்திற்கு வருடம் ஒரு முறை பொங்கலுக்கு வெள்ளை அடித்து சுத்தம் செய்து பாதுகாத்து வருகிறோம். அது போல இறைவன் வாழும் இடமாகிய ஆலயத்தை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்து சாந்தி செய்து கும்பாபிஷேகம் செய்வது மரபாகும். ஆலயம் முழுமையாகச் சிதைந்தோ, பிளவுப்பட்டோ, அஷ்டபந்தனம் சிதைந்து இருந்தாலோ பாலாலயம் செய்து எல்லாவற்றையும் சரி செய்து குடமுழுக்கு செய்வர்.
ஆகம சாஸ்திரப்படியும், ஆலயத்தின் முறைப்படியும் வெகுநாட்களாகப் பூஜை நடைபெறாவிடில் சிவபெருமான் லிங்கத்தை விட்டு விமானத்திற்கு வந்து மூன்று வருடங்கள் வரையிலும் யாவருக்கும் அருள் பாலித்துக் கொண்டிருப்பதாகவும், பன்னிரெண்டு வருடத்திற்கு தல விருட்சத்தில் இருந்து அனுக்கிரஹம் செய்வதாகவும், அதற்கும் மேற்பட்டால் தல விருட்சத்திலிருந்து நீங்கி, சூர்ய மண்டலத்திலிருந்து அருள் பாலிப்பதாகவும் ஐதீகம். ஆகவே இறைவனை நம்முடனேயே வைத்திருக்க ஆலய கும்பாபிஷேகம் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தவறாது செய்யப்பட வேண்டும். இந்த வகையில் பூந்தோட்டம்-திருநள்ளாறு செல்லும் சாலையில், "சேஷ மூலை' என்ற கிராமத்தில் சிவாலயத் திருப்பணியை மேற்கொள்ளும் பாக்கியத்தை சில அடியார்களுக்கு இறைவன் அளித்துள்ளார்.
இக்கோயிலில் ஆதிசேஷன் பூஜை செய்து அவர் அருள் பெற்றதால் இந்த ஊரை "சேஷன் மூலை' என்றும், ஸ்வாமியை "சேஷபுரீஸ்வரர்' என்றும் அழைக்கின்றனர். இங்குள்ள அம்பாளின் பெயர் "திரிபுரசுந்திரி' ஆகும். இந்தச் சிலை மிக நேர்த்தியாக சதுர் புஜங்களுடன் உள்ளது. இங்கு அம்பாள், சுவாமியின் வலப் பாகத்தில் வரும் வண்ணம் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது.
அம்பிகை இறைவனின் வலப்பாகத்தில் வீற்றிருக்கும் தலங்கள் "கல்யாணத் தலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. பாண்டிய மண்டலத்தின் அம்பிகை, மலயத்வஜ பாண்டியனுக்கு மகளாகப் பிறந்து சிவபூஜை செய்து சிவபெருமானை மணந்து கொண்டாள். இதைக் குறிக்க மதுரை மீனாட்சி, கல்யாணப் பெண்ணாக-சிவபெருமானுக்கு வலப்பக்கத்திலேயே கோயில் கொண்டுள்ளாள். நெல்லை காந்திமதி, மதுரை மீனாட்சி, குற்றாலம் குழல்வாய் மொழியாள் போல "சேஷ மூலை'யிலும் இறைவனின் வலது பாகத்திலேயே அம்பிகை எழுந்தருளியுள்ளாள்.
கல்யாண சுந்தரியாக அம்பிகை இங்கு காட்சி தருவதால், திருமணத் தடையுள்ளவர்கள் இத்தலத்திற்கு வந்து வேண்ட அவர்கள் குறை நீங்கும்.
சேஷபுரி ஆலயத்தில் "தரும நந்தி' என்ற அழைக்கப்படும் நந்தி பகவான் சிலை, மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆலயங்களில் சிவபெருமானை நோக்கியவாறு நந்தியின் சிலை அமைக்கப்பட்டு இருக்கும். நந்தி பகவானுக்கும் சிவபெருமானுக்கும் தொப்புள் கொடிப் பந்தம் என்று கூறுவர். நந்தியின் மூக்கு, சிவபெருமானின் நாபிக் கமல உயரத்திற்கு இருக்கும்படி அமைப்பர். இதனால்தான் சிவபெருமானுக்கும், நந்திக்கும் இடையில் செல்லக் கூடாது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
பிரதோஷ வேளையில் நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையில் சிவபெருமானை தரிசனம் செய்தல் சிறப்பு. பல ஆலயங்களிலும் பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கும், நந்தி தேவருக்கும் ஒரே நேரத்தில் மகா தீபாராதனை நடக்கும்.
நந்திதேவர் எப்பொழுதும் சிவலிங்கத்தின் முன், அதையே பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருப்பதால் அவருடைய அனுமதி பெற்று உள்ளே சென்று இறைவனைத் தரிசிக்க வேண்டும்.
சிவபெருமானின் வேக வடிவமாகக் கருதப்படுவது பைரவர் ஆகும். பைரவர் என்ற சொல்லுக்கு "பயத்தைப் போக்குபவர்' என்று பொருள். சிவாலயங்களில் காலையில் வழிபாடு துவங்கும் முன்னரும், இரவில் அர்த்த ஜாம வழிபாடு நிறைவு பெற்ற பின்னரும் திருக்கோயிலின் அனைத்துச் சந்நிதிகளையும் பூட்டி அந்தச் சாவியினை பைரவரின் திருவடியில் சமர்ப்பித்து கோயிலைப் பூட்டுவது மரபு. இவர் ஆலயத்தின் காவலராக இருப்பதால் "úக்ஷத்திர பாலகர்' என்று இவரைக் கூறுவர்.
"சேஷ மூலை' சிவாலயத்தைச் சுற்றி இக்கோயிலின் சுற்று வட்டாரத்தில் திருநள்ளாறு, அம்பர் மாகாளம், திருவீழிமிழலை, திருவேட்டக்குடி, காரைக்கால் போன்ற புகழ்பெற்ற சிவ ஸ்தலங்கள் உள்ளன. சேஷ மூலை ஆலயத்தில் தென்திசைத் தலைவனான தட்சிணாமூர்த்திக்கு சிறப்பாகக் கோட்டம் அமைத்துள்ளனர். இச்சந்நிதியில் இறைவன் மோன நிலையில், சின் முத்திரை தாங்கி அருள்பாலிக்கிறார்.
வடக்கு திசையில் துர்கைக்கு சந்நிதி அமைந்துள்ளது. கோயிலின் முதன்மைத் தெய்வம் வீற்றிருக்கும் இடமாக அமைவது கர்ப்பக்கிரகம் ஆகும். இந்த இடத்தின் மீது கூம்பு வடிவில் உச்சியில் கலசத்துடன் கூடிய கட்டிட அமைப்பே விமானமாகும். இந்தக் கோயிலின் விமானம் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது. இது சோழர் காலத்தில் கட்டப்பட்டதாகும்.
இக்கோயிலில் திருப்பணியையொட்டி "புனருத்தாரணம்' செய்யப்படவுள்ள சந்நிதிகள் : கர்ப்பக் கிரஹம், அர்த்த மண்டபம், ஏக தள விமானத்துடன் சிவனுக்கு தனி சந்நிதி, அம்பாளுக்கு தனி சந்நிதி, சிறிய நந்தி மண்டபம், நாகருக்கு சந்நிதி, பிள்ளையார், வள்ளி}தெய்வானை ஸமேத சுப்ரமண்யருக்கு தனி சந்நிதி ஆகியன.
சிவாலயத் திருப்பணி செய்தால் ஒருவரின் 21 தலைமுறைகள் இறைவனின் திருவருளைப் பெறுவதாகக் கூறுவர். முன்பு மிகப் பெரிய கோயில்களை அரசர்களும், இறைவனின் அடியவர்களும் கட்டி இறைப்பணியை எங்கும் பரப்பினர். ஆனால் நாம் நம் முன்னோர்கள் கட்டிய ஆலயங்களைப் பராமரிக்காமல் அவைகளைப் பாழ்படுத்துகிறோம். அதன் எதிர் விளைவாக இயற்கையின் சீற்றங்களை அனுபவிக்கிறோம்.
நாம் புதிய கோயில்களைக் கட்டுவதைவிட நம் முன்னோர்கள் நமக்கு அளித்த மிகப் பழமையான கோயில்களை பொக்கிஷமாகக் கருதி புனருத்தாரணம் செய்வதே பெரும் புண்ணியமாகும்.
"சேஷ மூலை" ஆலயத் திருப்பணியில் பங்கேற்க விரும்புவோர், "எஸ். வரதராஜன்,
மொபைல் : 94449 17124, 98400 76964. வீடு: 24611244" என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Source: http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Religion&artid=150780&SectionID=152&MainSectionID=152&SEO=&Title=
No comments:
Post a Comment