“ரோம் நகர் பற்றி எறிந்து கொண்டிருந்த போது பிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனின் அதிகாரப் போதையை புரிந்து கொள்ள முடிகிறது.” கலைஞரின் நான்கு மணி நேர உண்ணாவிரதத்தை தொடர்ந்து, ஈழத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தால் காப்பாற்றப்பட்ட மக்கள் எப்படிச் சிங்கள அரசின் முள்வேலி சிறைக்குள் ஆறு மாதத்திற்கு முன் வந்து சேர்ந்தார்கள் என்பது கலைஞரின் குடும்ப செய்தி சேவைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு புரிந்திருக்காது.
ஆறு மாதக்காலத்திற்குப்பின் திடீரெனக் கலைஞருக்கு ஈழத்தமிழர்மேல் கரிசனைப் பிறக்க உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்தும் கேட்காத இராஷபட்சே, கருணாநிதியின் குழு இலங்கை சென்று வந்தவுடன் ,மக்களை முகாமை விட்டு வெளியே செல்ல அனுமதித்திருக்கிறார்.
“இலங்கையில் சண்டை ஒழிந்து, சாந்தி தழைக்கின்றது! முகாம்களில் முள்வேலிக்குள்ளிருந்தோர்; நாளை முதல் நல்லமைதி கண்டோம் என்று நமை வாழ்த்துகின்றார். விம்மி அழுத அந்தநாள் எங்கே? இன்ப நாளிதே எனப் பாடிடும் இந்த நாள் எங்கே? “ - என அறிக்கை வெளியிடுறார் கருணாநிதி.
என்ன ஒரு நாடகத்தனமான அறிக்கை, அதிகாரமும், மீடியா பலமும் இருக்கிறது என்ற காரணத்தினால் தான் கற்பனையாக கூறுகின்ற எதையும் தமிழக மக்களை நம்ப வைத்துவிடலாம், தன்னிடம் அடிபொடிகளாக இருக்கும் அறிவு ஜீவிகளையும், அமைச்சர்களையும், சினிமாக்காரர்களையும் விட்டு ஆதரவு அறிக்கை வெளியிட்டால், தனக்கு தமிழினத் தலைவர் பட்டம் கிடைத்து விடும் என்று கணக்கு போடுகிறார் கலைஞர்.
ஈழத்தமிழினம் எதற்காக போராட ஆரம்பித்ததோ அந்தக் காரணங்கள் இன்றும் ஆழிந்துவிடவில்லை, அது சிங்கள இனவெறியாலும், துரோகத்தாலும் பல்கிப் பெருகி, இன்று அந்த மக்களின் உயிரையும், வாழ்க்கையையும் வேட்டையாடி விட்டது.
சொந்த இனம் வேட்டையாடப்படும் போதும் தனது ஆட்சிக்கு எந்த பாதகமும் வந்து விடக்கூடாது என ஆஸ்பத்திரி நாடகம், நீதிமன்ற தடியடி, கண்ணீர் அறிக்கைகள், கைதுகள் என சிங்கள அரசு இன ஒழிப்பு நடத்தி முடிக்க கால அவகாசம் வாங்கித்தந்த கலைஞர் இன்று எதுவுமே நடக்காதது போல் அந்த மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப போகின்றனர் என்கிறார்.
காங்கிரஸை ஆட்சிக்கட்டிலிருந்து இறக்கிவிட்டு திராவிடக் கட்சிகள் ஆட்சியை பிடிக்க காரணமாயிருந்த மொழிப் போரில் தீக்குளித்த தியாகிகள் 6 பேர், ஆனால் கடந்த ஒரு வருடத்தில் ஈழப்பிரச்சினைக்காக தீக்குளத்தவர்கள் 16 பேர், அனைத்து தரப்பு மக்களும் நடத்திய போராட்டங்கள் எத்தனை? அவற்றிற்கு கருணாநிதி அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? வெறும் கண்டன அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டிருந்துவிட்டு, 8 கோடித் தமிழனை ஒன்றரைக் கோடிச் சிங்களவனிடம் கெஞ்சச் சொல்லும் இந்த புத்திசாலித் தலைவர், தமிழனுக்காக எல்லாம் செய்தது போல் நாடகம் ஆடுகிறார். சகோதரப் போர்தான் இத்தனை இழப்புகளுக்கும் காரணம் என்று கதை பேசுகிறறார். சகோதரப் போர்தான் காரணம் என்றால் 2000 ல் சிங்களவனை விரட்டி அடித்தது எப்படி ? உலக நாடுகளையும், சிங்களவனையும் பேச்சு வார்த்தை மேசையில் உட்கார வைத்ததெப்படி?, செப்டம்பர் 11 க்கு பிறகான உலகின் தவறான தீவிரவாதக் கொள்கையும், கருணாக்களின் சுயநலமும் தான் இன்று ஈழம் பிணக்குவியல்களும், பிச்சைக்காரர்களும் நிறைந்த தேசமாய் மாறிப்போனதற்கு காரணம்.
சகோதர யுத்தமே காரணம் என்று பழைய கதையை மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த இராஷதந்திரி கடந்த ஒரு வருடத்தில் இவர் ஆடிய நாடகங்கள் எத்தனை?.
ஈழத்தில் இந்திய போர் நிறுத்தம் செய்யவில்லை என்றால் 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவோம் என்றார். விலகினாரா ?
மூன்று முறை ஈழப் போரை நிறுத்த சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். என்ன நடந்தது ?
ஈழப்போரை நிறுத்த சொல்லி பிரதமருக்கு அடித்த தந்திக்கு என்ன பதில் வாங்கித் தந்தார்?
போராட்டங்களும், தேர்தலும் முடிந்த பிறகு கலைஞருக்கு ஏன் உடல் நலக்குறைவு ஏற்படவில்லை.
கலைஞர் ஏன் இத்தனைப் பேர் மீது தேசியப்பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சினார். அவர்கள் ஏன் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
இப்பொழுது திருட்டுத்தனமாக இராஷபட்சே அழைத்தவுடன், அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பாமல் தன் ஆதரவு குழுவை அனுப்பும் கருணாநிதி ஏன் ஜனவரியில் இராஷபட்சே விடுத்த அழைப்பை ஏன் ஏற்கவில்லை?.
ஐநா சபையில் இலங்கையின் இன அழிப்புக்குச் சாதகமாக இந்தியா வாக்களித்தபோது, கூட்டணியில் முக்கியத்தலைவரான கருணாநிதி அதைத் தடுக்க என்ன செய்தார் ?.
குடும்ப நலனென்றால் எந்த முறையில் பேச வேண்டும். தமிழர் நலன் என்றால் எந்த முறையில் பேச வேண்டும் என நன்கறிந்த இந்த இராஷதந்திரி, இனவிடுதலைக்காய் சயனைடு குப்பியுடன் எந்த நேரமும் மரணத்தை எதிர்நோக்கி போராடிக் கொண்டிருந்தவர்களை இந்த அறிக்கைப் புலி குறை சொல்கிறார்.
கலைஞர் அவர்களே வாக்குக்கு மாற்றாக நோட்டையும், இலவசங்களையும் எந்தக் கூச்சமும் இல்லாமல் பெற்றுக் கொண்டு “ மானாட மயிலாட”, “எல்லாமே சிரிப்புதான்” . பார்த்து வரும் பெரும்பான்மை தமிழ் மக்களுக்கு முதல்வராய் இருந்து விட்டு போங்கள். ஆனால் மொத்த தமிழினமும் அவ்வாறனதல்ல.
இனத்திற்காய் ஆயுதம் தாரித்தும், நெருப்பில் வெந்தும் இறந்து போன 38 ஆயிரம் வீரர்களை கொண்டது, இலட்சக்கணக்கான மக்களை பலி கொடுத்த இனம், அதிகார பலமும், அரசியல் பலமும் இல்லாது போனாலும் வல்லரசுகளையும் நியாயம் கேட்கும் கூட்டம், குடியேறிய நாடுகளில் எல்லாம் இரண்டாம் தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு என்றாவது ஒரு நாள் கௌரவமாக வாழ முடியும் என்ற கனவுகளுடன் வாழும் மக்களையும் கொண்டது.
ஆனால் குடும்ப நலத்திற்காய் சோனியாவிடம் அடிமையாய் இருக்கும் நீங்கள் விடுதலைக்காய் போராடும் ஒரு சுய மாரியாதைக் கொண்ட இனத்தின் தலைவனாக இருக்க முடியாது.
நாங்கள் பொரியாரின் சுயமாரியாதையையும், காமராசாரின் அரசியல் தூய்மையாகவும், பிரபாகரனின் அர்ப்பணிப்புடன் கூடிய வீரத்தையும் கண்ட இனம், அவர்களுடன் ஒப்பிடும் போது 80 வயதிலும் குடும்ப நலன் மட்டுமே குறிக்கோளாய் உழைக்கும் உங்கள் தகுதி என்னவென்று உங்களுக்கே தெரியும்.
கடந்த இரண்டு வருடங்களாக சர்வதேச மக்களின் தொடர்பில் இருந்து ஈழமக்களை தீவிரவாதத்தின் பெயரால் தனிமைபடுத்தி சிங்கள அரசியலும், இராணுவமும் பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கின்றன.
தங்களது அதிகாரத்திற்கும், குடும்ப நலத்திற்குமாய் தமிழகத்தில் எழுந்த அனைத்துப் போராட்டங்களையும் நீர்த்துப் போகச் செய்து ஈழத் தமிழினத்திற்கு நடந்த கொடுமைக்கு எங்களையும் பங்கேற்க வைத்து குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி விட்டீர்கள்.
ஆனால் புலம் பெயர்ந்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எடுத்துக் கூறி போராட்டம் நடத்தியதன் விளைவாக ஓரளவு அந்தந்த நாடுகள் இலங்கையின் அத்துமீறல்களை கண்டிக்க ஆரம்பித்துள்ள நிலையில், கருணாநிதியின் சுயநல அரசியல் விளையாட்டும், அதிகார, மீடியா பலமும் அதனை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்போல் தெரிகிறது .
இதுவரை சிங்கள இனவெறி அரசு எந்த விசயத்தில் நேர்மையாக நடந்து கொண்டது. இப்பொழுது அது 58 ஆயிரம் மக்களை விடுவிக்கிறோம் என்று கூறியவுடன் புளகாங்கிதம் அடைந்து அறிக்கை வெளிவிடும் கலைஞரும், அவர்களது குடும்ப செய்திப் பிரிவும், கலைஞரைப் பாராட்டி சுவரொட்டி ஒட்டும் உடன் பிறப்புகளும்.
அவர்கள் எங்கே கொண்டு செல்லப்படுகிறார்கள்?
அவர்களின் பெயர்ப்பட்டியல் என்ன?
இராணுவத்தால் சித்திரவதை செய்து கொல்லப்படுபவர்களும், விடுவிக்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலில் இணைக்கப்பட்டால் என்ன செய்வது?
விடுவிக்கப்படுவர்கள் சர்வதேச அமைப்புக் கண்காணிப்பின் கீழ்தான் விடுவிக்கப்படுகிறார்களா? அவர்களை சர்வதேச அமைப்புகளும், பத்திரிக்கைகளும் சந்திக்க முடியுமா?
அவர்களின் சொந்த இடங்களிலேயே மீண்டும் குடியமர்த்தப்படுகின்றனரா?, அவர்களின் நிலங்கள் சிங்களவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா?
என எதை பற்றியும் ஆராயமல் ஈழத்திலுள்ள அனைத்து மக்களும் மகிழ்ச்சியில் திளைப்பது போல் பேசத் தொடங்கியுள்ளனர். உலகத் தமிழ் செம்மொழி மாநாடு எனும் அடுத்த நாடகத்திற்காக.
உலகத் தமிழர் அனைவருககும் தலைவனாய் உலகத்தமிழ் மாநாடு நடத்தும் இடத்திலும் நீங்களில்லை, அதனை கண்டுகளிக்கும் மனநிலையிலும் தமிழினம் இல்லை.
நடத்தப்பட வேண்டியது உலகத் தமிழர் வாழ்வுரிமை மாநாடு, யூத இனம் வாழும் நாடுகளெல்லாம் அவர்களுக்கு ஆதரவாக கொள்கைகள், கொண்ட நாடுகளாக உள்ளன. ஆனால் தமிழன் வாழும் நாடுகளில் எல்லாம் அவன் இரண்டாம் தர குடிமகனாக நடத்தப்படுகிறான்.
6 ½ கோடி மக்கள் இருந்து தமிழனின் குரலைக் கேட்க இந்தியாவில் ஆளில்லை, ஐநாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்ட போது, தமிழன் அதிகமாக வாழும் அனைத்து நாடுகளும் தமிழருக்கு எதிராகவே வாக்களித்தன.
எனவே உலகில் உள்ள அனைத்து தமிழர்களும் ஒருங்கிணைந்து அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கும், அரசியல் இருப்புகளுக்கும் குரல் கொடுக்க வேண்டும். காலம் தாழ்ந்திருந்தாலும், உடனடியாக கூட்டப்பட வேண்டியக் கூட்டம் அதுதான்.
(நட்புக்காக : தனஞ்செயன்)
Source: http://anburajabe.blogspot.com/2009/11/blog-post_09.html
No comments:
Post a Comment