சினிமாவால் ஆட்சிக்கு வந்த அண்ணாவின் தம்பிகளை சினிமாவே ஆட்சியை விட்டு அகற்றப் போகிறது என்ற எண்ணத்தைத் உருவாக்கிய ஆண்டு.
தமிழ்ச் சினிமா 2010 ல் அடைந்த முன்னேற்றமென்ன என்ற கேள்விக்கு மூன்று சிறப்பான பதில்கள் உள்ளன.
01. தமிழக முதல்வர் மு. கருணாநிதி குடும்பத்தவர் தயாரிக்கும் படங்களே தமிழகத்தில் பாதுகாப்பாக காண்பிக்கப்பட முடியும்…
02. சூப்பர்ஸ்டார், உலகநாயகன், இளையதளபதி, அல்டிமேட்ஸ்டார், சுப்பிரீம்ஸ்டார் போன்ற ஸ்டார்களே கருணாநிதி குடும்பத்தின் படியேறி படமோட்ட வேண்டிய நிலை.. சன்னின் ஒளியில்தான் ஸ்டார்கள் ஒளிர்கின்றன என்ற அவலமான உண்மையை மௌனமாக ஏற்றுக்கொண்ட ஆண்டு..
03. இந்தியாவிலேயே ஒரு மாநில முதல்வர் அதிகமான படங்களுக்கு கதை வசனம் எழுதிய ஆண்டு. அவரின் பேரப்பிள்ளைகளே கதாநாயகர்களாகவும், அவர்களின் தொலைக்காட்சி நிறுவனங்களே திரைப்பட கொள்வனவாளராகவும் ஏறத்தாழ தனியுரிமை பெற வழி சமைத்த ஆண்டு..
மேற்கண்ட மூன்று விடயங்களையும் மனதில் நிறுத்தி கீழே தரப்படும் மூன்று திரைப்படங்களுக்கு நடைபெற்ற நிகழ்வைப் பார்த்தால் 2010 ன் தமிழக சினிமாவிற்கான மதிப்பீட்டை செம்மையாக விளங்கக்கூடியதாக இருக்கும்..
எந்திரன் திரைப்படம்
சூப்பர்ஸ்டார் ரஜினி, உலக அழகி ஐஸ்வர்யாராய், ஆஸ்கார் புகழ் ஏ.ஆர்.ரஹ்மான், ஷங்கர், வைரமுத்து என்று சினிமா பிரபலங்கள் எல்லாமே ஒன்றிணைந்தாலும் கூட, சன் டி.வி கலாநிதிமாறனை விட்டால் இப்படிப்பட்ட திரைப்படத்தையே வர்த்தகத்திற்கு கொண்டு செல்ல முடியாது என்ற நிலையை உணர்த்திய ஆண்டு. எந்திரன் திரைப்படம் ஆகா ஓகோ என்று பேசப்படும் திரைப்படம் இல்லை என்றாலும் அதிக பணத்திற்கு விற்று சன் நிறுவனம் இலாபம் உழைத்தது. இலாபத்தின் பெருந்தொகை மு.கருணாநிதி குடும்பத்திற்கு போவதைத் தடுத்தால் சூப்பர் ஸ்டாராலேயே தலை நிமிர முடியாது என்ற உண்மையை உரைத்துப் போயுள்ள ஆண்டு.
மன்மதன் அம்பு
உலக நாயகனும் கலைஞர் குடும்பத்தை அண்டினால்தான் திரையரங்கு கிடைக்கும் என்று முடிவு செய்து பவ்வியமாக நடந்த ஆண்டு. கலைஞர் தன்னைப் பாராட்டினார் என்று விஜய் டிவியில் அவர் வடித்துக் காட்டிய கண்ணீர் ஒன்றே போதும் உண்மையை விளங்க. மன்மதன் அம்பு திரைப்படத்தை தயாரித்து வர்த்தக உரிமைகளை விற்பனை செய்து பெரிய இலாபமெடுத்தது கலைஞானி கமலோ கே.எஸ்.ரவிகுமாரோ அல்ல என்ற உண்மையை எடுத்துரைத்த ஆண்டு.
இளையதளபதி விஜய்
இளையதளபதி விஜய் படம் வருகிறதென்றால் மற்றய திரைப்படங்களை தூக்கி குப்பையில் போடுங்கள் என்று தமிழ் திரையரங்க உரிமையாளர்கள் சொன்ன காலமொன்று இருந்தது. ஆனால் கலைஞர் குடும்பத்து சினிமாக்காரரரையும் வர்த்தகரையும் பகைத்தால் விஜய் நடித்த காவலனையே காப்பாற்ற முடியாது என்ற உண்மையை உரைத்த ஆண்டு. விஜய் படமொன்று திரையிட இடமில்லாமல் அடுத்த ஆண்டுக்கு தூக்கியெறியப்பட்ட ஆண்டு. ஆக ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்ற நிலை விஜய் படத்திற்கு..
இந்த மூன்று விடயங்களையும் உதாரணங்களாக வைத்துக் கொண்டு மற்றய படங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். இதற்கு வெளியால் வந்த சசிகுமாரின் ஈசன் படம் நல்ல படம் இல்லை என்ற செய்திகள் படம் வரமுன்னரே கச்சிதமாக பரப்பப்பட்டுவிட்டன..
இது தவிர மைனா போன்ற படங்கள் ஓடியுள்ளன, அங்கும் கலைஞர் குடும்பமே இருக்கிறது. தயாரிப்பாளர் சங்கத்தில் இராம நாராயணனும், நடிகர் சங்கத்தில் சரத்குமாரும், வி.சி. குகநாதனும் இதே குடும்பத்தினர்க்கான ஊதுகுழல்களாக இருந்து வருகின்றனர் என்ற முணுமுணுப்பு பலரிடையே இருக்கிறது.
தமிழக திரைப்பட ஹீரோக்கள் எல்லாம் ஜீரோக்களாகிப் போக மு.கருணாநிதி குடும்பத்து ஜீரோக்கள் எல்லாம் ஹீரோக்கள் ஆன காலம் என்று ஜெயலலிதா கருத்துரைத்திருந்தார். தமிழ் சினிமா செத்துவிட்டது என்று ராதாரவி கூறியிருந்தார். இவைகள் தமிழ் சினிமாவின் 2010 ம் ஆண்டுக்கான எதிரணி மதிப்பீடாக உள்ளது.
ஆனால் 2010 ல் தமிழ் சினிமாவில் சில மாற்றங்களும் ஏற்பட்டதை மறுக்க முடியாது. களவாணி, மைனா, ஈசன், மதறாசபட்டணம், அங்காடித்தெரு, பசங்க போன்ற சிறிய படங்கள் கவனத்தைத் தொட்ட ஆண்டாக உள்ளது. பெரிய கதாநாயகர்கள் கலைஞர் குடும்பத்தின் காலடியில் அஸ்தமனமாகிவிட புதிய நட்சத்திரங்கள் முளைக்கப் போவதையும் காட்டி நிற்கிறது.
இயக்குனர் பாலாவும், அவர் வழி வந்த இளைஞர்களும் பாரதிராஜா, பாக்கியராஜா காலம் போல ஒரு மாற்றத்தை செய்ய ஆரம்பித்துள்ளார்கள். இயக்குநர் சீமான் சிறையில் இருந்து வந்தபோது அவரை இயக்குனர் பாலா நேரடியாக சந்தித்துவிட்டு மௌனமாக வந்தது, கலைஞருக்கு புதியவர்கள் தெரிவித்த ஒரு சிக்னல் என்றே கூற வேண்டும்.
அதேவேளை..
காவலன் படம் புலம் பெயர் தமிழர் வாழும் நாடுகளில் காண்பிக்க முடியாத நிலையை அடைந்துள்ளது. அசின் செய்த தவறு அந்தப்படத்தை பாதித்துவிட்டது என்று கூறுவதைவிட, புதுமாத்தளனுக்கு பின்னர் புலம் பெயர் தமிழரிடையே தெளிவான பார்வை ஒன்று மின்னல் கீற்றாக தெரிவதையும் அது காட்டுகிறது. புலம் பெயர் தமிழர் படமெடுக்கப் போனால் சென்னை விமான நிலையத்தில் புலிப்பட்டம் கட்டி திருப்பி அனுப்பப்படுவதை இப்போது புலம் பெயர் தமிழர் உணர்கிறார்கள். இலங்கை தமிழ் சினிமா வளராமைக்கு இலங்கைக் கலைஞர்கள் அல்ல இந்தியாவின் இத்தைகைய செயற்பாடுகளே என்பதும் பேசு பொருளாக்கப்படக் கூடிய திறவுகோலை உருவாக்கிய ஆண்டாகவும் இது அமைந்தது. இலங்கைக் கடலில் மீன் பிடிக்க ஆசை கொண்ட இந்தியா தனது கடலில் மற்றவன் மீன் பிடிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பது போலவே சினிமாவிலும் இருக்கிறதை தெளிவாக உணர்த்திய ஆண்டாக உள்ளது.
வேலைக்காரி, பராசக்தி திரைப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவை ஆயுதமாக்கி ஆட்சிக்கு வந்த திமுக இப்போது கலைஞருக்குப் பின் அவருடைய மகனே துணை முதல்வர் என்ற இடத்திற்கு போய் குடும்ப ராகம் பாடியுள்ளது. இப்போது தம்மை உயர்த்திய தமிழ் சினிமா ஏணியையும் கலைஞர் குடும்பம் தாம் மட்டுமே ஏறும் ஏணிஎன்றே கருதத் தலைப்பட்டுவிட்டது என்ற கவலை தமிழக சினிமா வட்டாரங்களில் வாய்திறக்க முடியாத குமுறலாகக் கேட்கிறது.
மூன்று தீபாவளி கண்ட எம்.கே.தியாகராஜபாகவதர் காலத்து மனோநிலை கொண்டவர்களாகவே தமிழ் சினிமா திரையரங்க முதலாளிகள் இருப்பதையும், அவர்கள் தமது திரையரங்கங்களை குத்தகைக்கு உழைக்கும் இடமாக்கி குப்பை கொட்டிய ஆண்டாகவும் இது இருக்கிறது.
புலம் பெயர் நாடுகளில் திரையரங்கங்களை மறித்து ஐங்கரன் செய்த வேலை இப்போது தமிழகத்திலம் தொற்றி தமிழ் சினிமாவையே சீரழித்திருப்பதையும் இந்த ஆண்டு உணர்த்துகிறது.
இப்படி தமிழ் சினிமா அடைந்துள்ள மோசமான தேக்கம் ஒரு கட்டத்தில் கட்டுடைத்து புதிய பாதையில் திரும்பும் என்பது கவனிக்கத்தக்கது. மற்றக் கலைஞனும் வாழவேண்டும் என்று சிறிய வழியை விடாமல் எல்லாவற்றையும் ஏப்பம் விட்டால் என்ன நடக்கும் ? பதில் 2010 ல் சன், கலைஞர் குடும்பம் இழைத்த தவறுகள் 2 ஜி ஒளிக்கற்றை விவகாரமாகியிருக்கிறது.
ஒரு காலத்தில் சினிமாவால் ஆட்சிக்கு வரலாம் என்று உணர்த்திய அண்ணாவின் அன்புத் தம்பிகள் சினிமாவால் ஆட்சியை விட்டே போக வேண்டிய நிலை வரும் என்று மதிப்பிட வேண்டிய நிலைக்கு 2010 தமிழ் சினிமா இருந்துள்ளது. கலைஞரின் இளைஞன் படத்திற்குக் கொடுக்கப்படும் தாங்க முடியாத விளம்பரத்தைவிட 2010 தமிழ் சினிமாவிற்கு வேறென்ன மதிப்பீடு வேண்டும்.
அலைகள் 2010 பார்வை
No comments:
Post a Comment