Saturday, September 26, 2009

காத்திருந்தேன்... கதை முடித்தேன்! ஜெனரல் டயருக்கு மட்டுமல்ல ராஜீவ் காந்திக்கும் அதுவே பொருந்தும்!

1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாகாக் கடுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரையும், அவரது மேலதிகாரி மைக்கேல் ஓ டயரையும் இங்கிலாந்து வரை தேடிச் சென்று, ஜெனரல் டயர் நோய்வாய்ப்பட்டு ஜெனரல் டயர் இறந்துவிட, எஞ்சியிருந்த மைக்கேல் ஓ டயரை விழா ஒன்றில் சுட்டுக்கொன்றார் ஷாஹித் உத்தம் சிங். தன் தேசத்து மக்கள் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்ட கொடியவனில் ஒருவனையாவது சுட்டுக் கொன்ற திருப்தியுடன் 31 ஜுலை 1940 அன்று இங்கிலாந்து நாட்டில் தூக்கிலிடப்பட்டு, அங்கேயே புதைக்கப்பட்டார்.
இவரது எஞ்சிய உடல் பாகங்கள் கல்லறையில் தோண்டி எடுக்கப்பட்டு, 1974-ம் ஆண்டு இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு, அரச மரியாதையுடன் அவரது பிறந்த மண்ணில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த மாவீரரைக் கவுரவப்படுத்தி 'காத்திருந்தேன்... கதை முடித்தேன்!' என்ற தலைப்பில் ஜுனியர் விகடன் நாடு போற்றும் வீரர்கள் வரிசையில் வரிசைப்படுத்தியிருந்தது. உண்மையாகவே, அந்த தேசிய உணர்வாளனின் தியாகம் போற்றப்பட வேண்டியதுதான். உலக மக்களும் அறிந்து கொள்ள வேண்டியதுதான். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.
ஈழத் தமிழர்களான நாங்களும் இதய பூர்வமாக அந்த மாவீரனுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம். இப்படியேதான் நாங்கள் எங்கள் நாட்டுப் படுகொலைகளையும் மீண்டும் நினைத்துப் பார்க்கிறேன்... இந்திய தேசத்தை அடிமைப்படுத்த வந்த ஆங்கிலேயர்கள் போலல்லாது நாங்கள் மலர்க்கொத்துக்கள் வழங்கி இந்திய அமைதிப்படையை வரவேற்ற காலம்... நம்பிக்கையோடு எம் தேசத்தின் அமைதிக் காற்றைச் சுவாசிக்கும் ஆவலில் குதூகலித்திருந்த காலம்... தமிழர்களைக் காப்பாற்ற என்ற கொட்டொலியுடன் 1987 இல் கால் பதித்த இந்திய அமைதிப்படையை நம்பி விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்து அமைதி காத்த காலம்...
தமிழீழ மண்ணில் கால் பதிக்கும்வரை அமைதிப் படையாகவே வந்த இந்தியப் படை தான் வந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டதும், சுய ரூபம் காட்டியது. சிங்கள தேசத்தின் காவல் படையாக மாறிய இந்திய அமைதிப் படையின் துரோகத் தனத்தைக் கண்டு கொதித்த தமிழர்களை பொறுமை காக்க வைத்து திலீபன் அவர்களிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை வைத்து, காந்திய தேசத்திடம் நீதி கோரி, காந்திய வழியில் நீரும் அருந்தாமல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
1- மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
2- சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
3- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
4- ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
5- தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
என்ற சாதாரண கோரிக்கைகளை முன்வைத்து 15 செப்ரம்பர் 1987 அன்று திலீபனால் ஆரம்பிக்கப்பட்ட தியாக வேள்வி இந்திய அரசால் கண்டு கொள்ளப்படாமலே விடப்பட்டது. உறுதி தளராத திலீபன் 26 செப்ரம்பர் 1987 சனிக்கிழமை காலை 10.48 மணிக்குத் தன் இறுதி மூச்சை எம் சுவாசத்தில் கலக்கவிட்டு கண்களை மூடிக்கொண்டார்.
எதிரியின் கொடுமையிலும் பார்க்க, துரோகியின் துரோகத்தின் வலி தமிழீழ மக்களின் நெஞ்சில் நெருப்பை மூட்டியது. இதைத் தொடர்ந்தும் இந்தியத் துரோகத்திற்கு குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட 12 வேங்கைகள் பலியானதால் உருவான கொந்தளிப்பு இந்திய அமைதிப் படைக்கு எதிராகத் திரும்பியது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப்படை ஆரம்பித்த நம்பிக்கைத் துரோகப் போர் யாழ். வைத்தியசாலையையும் விட்டு வைக்கவில்லை. யாழ். வைத்தியசாலைக்குள் புதுந்த இந்திய இராணுவம் அங்கு பணியாற்றிய வைத்தியர்கள், தாதிகள், நோயாளிகள் என்று யாரையும் வேறுபடுத்திப் பார்க்காமல் ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்றது. தொடர்ந்து முன்னேறிய இந்திய இராணுவத்தின் கொலைக் கரங்களுக்கு சிறியவர், பெரியவர், இளைஞர், யுவதிகள், ஆண்கள், பெண்கள், வயோதிபர் என்ற வேறுபாடு தெரியவில்லை.
காந்தி தேசத்தின் படைகள் ஈழத் தமிழர்கள் சுமார் பத்தாயிரம் பேரைக் காவு கொண்டது. விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடியாத இந்தியப் படை 31 மார்ச் 1990 அன்று அன்றைய சிறிலங்கா அதிபர் பிரேமதாசவால் அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டது. தமது உறவுகள் அழிக்கப்பட்டதற்குப் பழிவாங்கும் முகமாக, இந்தியத் துரோகங்களுக்கும் ஈழப் படுகொலைகளுக்கும் காரணமான இந்தியாவின் அந்த நாளைய பிரதமர் ராஜீவ் காந்தி அதே உத்தம் சிங் பாணியில் பலி கொள்ளப்பட்டார்.
அன்று துப்பாக்கியுடன் டயரை நெருங்க முடிந்த உத்தம் சிங் போல அந்த தமிழீழப் பெண்ணால் நெருங்க முடிந்திருந்தாலும் நிச்சயம் குறி தவறியிருக்கும் என்பதால், தன்னையே வெடிகுண்டாக்கித் தன் வீரசபதத்தை முடித்துக் கொண்டாள் என்று ஈழத் தமிழர்கள் அவரை மாவீரராக ஏற்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
அன்று, உத்தம் சிங் எடுத்த முடிவைத்தான் பின்னர் தானு எடுத்தார். உத்தம் சிங் தேசிய வீரராக கவுரவிக்கப்பட்டது சரி என்றால், தானுவும் எமது மக்களால் தேசிய வீரங்கனையாகப் போற்றப்பட வேண்டியவர்தான். இந்தியா உத்தம் சிங்கிற்கு உரிய கவுரவம் வழங்க இங்கிலாந்து அரசு அனுமதித்தது போலவே, தமிழீழம் தானுவுக்கு உரிய கவுரவம் வழங்கப்போகும் காலத்தில் இந்தியாவும் அதற்கான அனுமதியை வழங்கவேண்டும்.
நன்றி: ஈழநாடு


Friday, September 25, 2009

காந்திதேசத்தின் துரோக நாடகம் இன்றுவரை தொடர்கதையாகத் தொடர்கின்றது

தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு ...அன்று நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம்.
"மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது.
"இனவிடுதலைப் போராட்டம்" என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் அந்த இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது. ஒட்டுமொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்திற்காக தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு முன்வரும்போதுதான் விடுதலைக்கான மக்கள் புரட்சியும் அதன்மூலமான விடுதலையும் சாத்தியப்படும்.

ஈழ விடுதலைப் போராட்டமானது தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்தர்ப்பங்களில், தியாகச்செம்மல் திலீபனின் தியாகம் மிக முக்கியமானதாகும். தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பல சந்தர்ப்பங்களில் ஆயுத ரீதியிலான வன்முறை வழியைத் தவிர்த்து அகிம்சை வழியை கடைப்பிடிக்க முனைந்த போதெல்லாம், எதிர்மறையான விளைவுகளையும் ஏமாற்றங்களையுமே பரிசாகப் பெற முடிந்தது.
அகிம்சைக்கே அடையாளமென கருதப்படும் காந்திஜி அவர்களின் தேசமான இந்தியாவே தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தினை காலடியில் போட்டுமிதித்தது. ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்த திலீபனின் உடல்... வாடி வதங்கி, மெலிந்து சுருண்டு, நிலைகுலைந்து நினைவிழந்துபோய் அந்த உன்னத ஆன்மா அவன் உடலைவிட்டு பிரிந்த போதும்... மெளனமாய் இருந்து ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே துரோகம் செய்ததன் மூலம் "காந்தியம்" என்ற திரைக்குப் பின்னாலிருந்த தனது உண்மையான கோரமுகத்தினை வெளிக்காட்டியது காந்திதேசம்.
அன்று வெளிக்காட்டத் தொடங்கிய காந்திதேசத்தின் துரோக நாடகம் இன்றுவரை தொடர்கதையாகத் தொடர்கின்றது.
ஈழத்தின் மேல் இந்தியாவிற்கு அப்படி என்னதான் கோபம்??? காரணம் கேட்டால், இராஜீவ்காந்தி படுகொலை... இந்தியத் தேசியம்... பிராந்திய நலன்... என காரணமில்லாத காரணங்களை அடுக்குவார்கள் இந்த காந்தியவாதிகள். இந்த போலிக் காந்தியவாதிகளுக்குத்தான் புரியுமா எம் வலிகளும் வேதனைகளும்??? இவர்களுக்குத் தெரியுமா நம் இழப்புக்களும் அவலங்களும்???

தமிழீழம் என்ற கோரிக்கையையும் அதற்கான தமிழர்களின் நியாயமான போராட்டங்கள் தொடர்வதையும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு எப்போதுமே ஆதரிக்கப்போவதில்லை என்ற கசப்பான உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். இது உண்மையென்பதைத்தான் அண்மையில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் விடுத்த அறிக்கையும் தெளிவுபடுத்துகின்றது. அதனைப் புரிந்து கொள்ளாமல், தொடர்ந்தும் இந்தியா மனம்மாறும் என நம்பியிருப்போமானால், அன்று திலீபனை நாம் இழந்ததைப்போல் எதிர்காலத்தில் எம் இலட்சியங்களையும், நம் தாய் மண்ணையும் இழந்து நிரந்தரமான அகதிகளாகவே வாழ வேண்டிய இழிநிலைக்கு ஆளாவோம்.

இந்தியாவின் ஆதரவு தமிழர்களிற்கு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் தற்போதைக்கு இல்லையென்பது உறுதியாகிவிட்ட நிலையில், தமிழர்கள் தமக்கு ஆதரவளிக்கக் கூடிய பிறநாடுகளின் ஆதரவினைத் திரட்டவேண்டியது அவசியமாகிறது. இந்தவகையில், இவ்வளவு காலமாக தமிழர் விடயத்தில் பாராமுகமாக இருந்துவந்த அமெரிக்கா,கனடா,அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தமிழர்களுக்கு சார்பாக ஆதரவளிக்கக்கூடியதாக மாறிவரும் சர்வதேச நிலைமாற்றங்கள் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாக அமையக்கூடும். இதனைச் சாதகமாக கையாளுவதன்மூலம், தமிழர்கள் தமது தாயக விடுதலைக்கான போராட்டப் படிமுறைகளை வெற்றியை நோக்கி முன்னகர்த்தக்கூடிய சாத்தியம் வலுப்பெறும்.

சிங்கள அரசோடு கூட்டுச்சேர்ந்துநிற்கும் இந்தியா,சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளைத் தவிர பெரும்பாலான சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகள் இலங்கையரசிற்கு எதிராக மாறிவருவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு சாதகமான புறச்சூழ்நிலை உருவாகுவதற்கு, புலம்பெயர் தமிழர்கள் கடந்த காலங்களில் நடத்திய போராட்டங்களும், மக்களின் அவலங்கள் சர்வதேசத்தின்முன் வெளிக்கொணரப்பட்டமையுமே பெரிதும் உதவின. அத்துடன் சிங்கள அரசின் எதேச்சைத்தனமான அதிகாரப்போக்கும், வல்லரசுத் தோரணையிலான அறிக்கைகளும் கூட சர்வதேச நாடுகளுக்கு இலங்கையரசின் மீது சினத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது.

புலம்பெயர் தேசத்தில் தமிழர்களால் தொடரப்பட்ட போராட்டங்கள் சர்வதேச மட்டத்தில் பல விடயங்களை சாதித்திருக்கின்றன என்பது தற்பொழுது மெல்ல மெல்ல சாதகமாக மாறிவரும் சர்வதேச நிலைப்பாடுகளிலிருந்து தெரிகின்றது. ஈழத்தமிழர் விடயத்தில் உலகில் செல்வாக்கு மிக்க நாடுகளான அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தற்பொழுது கடைப்பிடித்துவரும் அணுகுமுறைகள் சிங்கள அரசிற்கு பெரும் அச்சத்தினைக் கொடுத்திருக்கின்றது. ஆனாலும் இந்தியாவும் சீனாவும் தனக்கு பக்கத்துணையாக இருக்கின்றது என்ற அசட்டுத் தைரியத்தில் சிங்களம் நிம்மதியடைகின்றது என்பதுவே உண்மை. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பனிப்போர் என்றைக்கு உச்சநிலையை அடைகின்றதோ; அன்றைக்கு இலங்கை இவற்றின் பூரண ஆதரவினை இழக்கும் சாத்தியக்கூறுகள் உருவாகும். இவைதான் தனது பக்கபலம் என்று நினைத்து திமிருடன் ஏனைய உலகநாடுகளை பகைத்துக்கொள்ளும் சிங்களம் இவற்றின் ஆதரவையும் இழந்து அநாதையாய் அந்தரிக்கப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ஈழவிடுதலைப் போராட்டமானது தமிழ்மக்களின் கைகளிலேயே கையளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை பிரதானமாக கொண்டு நடத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர் தமிழ் மக்களையே சார்ந்திருக்கின்றது. மூன்று தசாப்த காலமாக புலிகள் தமது ஆயுதரீதியிலான போராட்டத்தினை முன்னெடுத்த நிலையில், அவர்கள் இராணுவ வெற்றிகளைவிட தமிழர்கள் மத்தியில் விடுதலை தொடர்பாக புரட்சிகரமான எழுச்சியையே மிகவும் எதிர்பார்த்தார்கள். ஆனால், எங்களின் விடுதலைக்காக போராடியவர்கள் எங்களிடம் எதிர்பார்த்த ஆகக்குறைந்த எதிர்பார்ப்பைக்கூட நிறைவேற்றாதவர்களாக நாங்கள் இருந்தோம். அன்று திலீபன் மக்களிடம் வேண்டிக்கொண்டதும் அதைத்தான். "மக்கள் புரட்சி" என்ற நிலையை அன்றே நாம் அடைந்திருப்போமானால், இன்று நாம் விடுதலை பெற்று பல வருடங்கள் ஆகியிருந்திருக்கும். அப்படியில்லாவிட்டாலும்...ஆகக்குறைந்தது, தமிழினத்தின் அழிவையாவது தடுத்திருந்திருக்கலாம்.

நடந்தவை நடந்து முடிந்ததாகவே இருக்கட்டும். இனிமேல் நடக்கப்போவதைப் பற்றி சிந்திப்போம். எமது விடுதலையென்பது எம்மிலேயே தங்கியுள்ளது. இவ்வளவுகாலமாய் அதை புலிகள் பெற்றுத்தருவார்கள் என்று சொல்லிச்சொல்லியே அனைத்துப் பொறுப்பையுமே அவர்களின் தலையில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். பணத்தினை அள்ளி அள்ளி கொடுத்த நாங்கள் அவர்கள் எதிர்பார்த்த பக்கபலத்தினைக் கொடுக்கத் தவறிவிட்டோம். புலிகளை சர்வதேசம் தடை செய்தபோது, அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்ற வகையில் அமைதியாக விலகியிருந்தோம். புலிகளையும் தமிழ்மக்களையும் சர்வதேசம் வேறுபடுத்திப் பார்த்ததற்கும் அவர்களது போராட்டத்தினை பயங்கரவாதம் என முத்திரை குத்தியதற்கும் நாமே வழியமைத்தோம். அன்று நாங்கள் இழைத்த இந்தத் தவறுதான், இன்றைய அத்தனை அவலங்களுக்கும் காரணம். எங்கெல்லாம் மக்கள் புரட்சி ஏற்படவேண்டிய தேவை இருந்ததோ, அப்போதெல்லாம் நாம் அமைதியாக இருந்ததன் விளைவை வன்னி அவலங்களாய் அனுபவித்தோம்.

இனிவரும் காலங்களிலும் இப்படியான தவறுகளை இழைக்கப் போகின்றோமா??? நாங்கள் இதுவரை காலமும் இழைத்த தவறுகள் தான் எம்மை இந்த நிலைக்குக் கொண்டுவந்திருக்கின்றது என்ற உண்மையை உணர்ந்தவர்களாய் இனிவரும் காலங்களில்... நம் விடுதலைக்காய் நாமே போராடுவோம்.

"மக்கள் "புரட்சி என்பது ஒரு இலட்சியத்துக்காக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து ஒவ்வொருவரும் தம்மாலான பங்களிப்பினை தவறாது செய்வது என்பதேயாகும். "எமக்கு விடுதலை வேண்டும், அதை அடையும் வரை நாம் ஓயப்போவதில்லை" என்ற புரட்சிகரமான எண்ணத்தினை நாம் ஒவ்வொருவரும் நம் மனதில் விதைத்துக்கொள்ள வேண்டும். அதுவே மக்கள் புரட்சிக்கான அடிப்படை அடித்தளம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்" என்ற தியாகசீலனின் வேண்டுதலை சிரமேற்கொண்டு நம் தேசத்தின் விடுதலைக்காக நாம் போராடுவோம். நமது புரட்சிதான் நாளை நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தரும்.

"மக்கள் புரட்சி வெடிக்கட்டும்; சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற தியாக சீலன் திலீபன் சுமந்த விடுதலைத் தாகத்தினை நிறைவேற்றுவோம்! வென்று நம் தேசத்தில் கொடியேற்றுவோம்!

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
- பருத்தியன் -
Source: http://tamilseithekal.blogspot.com/2009/09/blog-post_3992.html

இலங்கையில் சொந்த மண்ணில் தமிழர்கள் அகதிகளாக வாழும்போது உலகத்தமிழ் மாநாடு எதற்கு? ஜெயலலிதா

’’உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தற்போது நிலைகுலைந்து போய் வேதனையில் இருக்கிறார்கள். அத்துடன் இலங்கையில் சொந்த மண்ணில் தமிழர்கள் அகதிகளாக வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உலகத்தமிழ் மாநாடு எதற்கு? என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தற்போது நிலைகுலைந்து போய் வேதனையில் இருக்கிறார்கள். 1966 ம் ஆண்டு முதல் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய மலேசிய தமிழர்கள் இன்று அந்த நாட்டின் இரண்டாம்தர குடிமக்களாக துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு, தங்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், மலேசியத் தமிழர்கள் தெருக்களுக்கு வந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்த போது, அந்த நாட்டு அரசாங்கத்தால் கொடூரமாக அடக்கப்பட்டனர். இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக கருணாநிதி குரல் எழுப்பவில்லை.

1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய இலங்கைத் தமிழர்கள், இன்று தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள் முகாம்களில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் இனப் படுகொலை நடந்து கொண்டிருந்தபோது கருணாநிதி குரல் கொடுக்கவில்லை.

இந்தச் சூழ்நிலையில் உலக தமிழ் மாநாடு எதற்கு? 2010 ஜனவரியில் ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை கோவையில் நடத்தப்போவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இந்த 'உலகத் தமிழ் மாநாடு' கருணாநிதியை உயர்த்திக் கொள்வதற்காக அறிவிக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சியே தவிர, இதனால் தமிழ் மொழிக்கு எந்தப் பயனும் இல்லை’’என்று தெரிவித்துள்ளார்.

Source: http://tamilseithekal.blogspot.com/2009/09/blog-post_7501.html


Thursday, September 24, 2009

பிணங்களின் மீது உலகத் தமிழ் மாநாடு!

ஒரு மொழி என்பது யாரால் சிறப்பு பெறுகிறது ? மக்களால் சிறப்பு பெறுகிறது. “கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி... “ என்றெல்லாம் பழம்பெருமை பேசி வருகிறோமே. இத்தனை ஆண்டுகாலம், மக்கள் இந்த மொழியை பேசி வருவதால்தான் இன்னும் தமிழ் என்ற மொழி வாழ்ந்து வருகிறது. மக்களால் பேசப்படாத சமஸ்கிருதம், இன்று ஏட்டளவில்தான் உள்ளது என்பதை மறக்கவியலாது. மொழியைவிட, அம்மொழி பேசும் மக்களால்தான் எந்த மொழிக்குமே சிறப்பு. 4 நாட்கள் பட்டினியாய் இருக்கும் ஒருவனிடம், “வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்“ என்று கூறினால், “போடா மயிறு“ என்று திட்டுவான். எல்லாவற்றிலும், மக்களே பிரதானம். மக்களால்தான், கடவுளுக்குக் கூட சிறப்பு. மக்கள் கூட்டம் செல்லாத கோயிலுக்குக் கூட பெருமையில்லை



இன்று 9வது உலகத்தமிழ் மாநாடு கோவையில் நடக்கும் என்று கருணாநிதி அறிவித்துள்ளார். இந்த மாநாட்டு அறிவிப்புக்கு, தினமணி நாளேடு, கீழ்க்கண்டவாறு தலையங்கம் எழுதி வாழ்த்து தெரிவித்துள்ளது. “14 ஆண்டுகளுக்குப் பிறகு, சோர்ந்து போயிருக்கும் தமிழனுக்கும், துவண்டு கிடக்கும் தமிழுணர்வுக்கும் புத்துயிர் ஊட்டும் விதமாக ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு நடத்த முன்வந்திருக்கும் முதல்வர் கருணாநிதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். தமிழ்கூறு நல்லுலகின் சார்பாக முதல்வருக்கு நன்றி... நன்றி... நன்றி! “ இந்த 9ம் உலகத் தமிழ் மாநாடு, நடைபெறும் இந்தச் சூழ்நிலையை, ஆராய்ந்து பார்ப்பது, சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவரின் கடமை.
இன்று தமிழர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் ? தமிழர்கள் என்றதும், ஈழத்தை நினைக்காமல் இருக்க இயலாது. ஈழத்தில், தமிழர்கள் கொத்துக் குண்டுகளுக்கு இரையாகிக் கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், ஆயிரக்கணக்கில் தமிழர்கள் கொத்துக் குண்டுகளாலும், காயங்களுக்கு மருந்தில்லாமலும், உணவில்லாமலும், ஈசல்களைப் போல செத்து மடிந்து கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?அக்டோபர் 2008லிருந்து, ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகமெங்கும் அனுதினமும் உண்ணாவிரதங்களும், மறியல்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்து கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?
போரை நிறுத்து“ என்ற முழக்கம் தமிழத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கையில் என்ன செய்து கொண்டிருந்தார் இந்தக் கருணாநிதி ?
மனிதச் சங்கிலி நடத்தி, “காப்பாற்றுங்கள் தாயே“ என்று மன்றாடத் தெரிந்த கருணாநிதிக்கு, இப்போரை நடத்தும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியை முறித்துக் கொள்ள தெரியவில்லை. 4 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து, “போர் நின்று விட்டது“ என்று போலி அறிவிப்பு வெளியிடத் தெரிந்த கருணாநிதிக்கு, இந்தியா தலையிடாவிட்டால், ஆதரவு வாபஸ் என்று சொல்லத் தெரியவில்லை.
உண்ணாவிரதத்திற்குப் பின் இன்னும் மக்கள் சாகிறார்களே என்று கேட்டதற்கு, மழைவிட்டும் தூவானம் விடவில்லை என்று பசப்பத் தெரிந்த கருணாநிதிக்கு ரத்தக் கரங்களுக்குச் சொந்தமான காங்கிரஸ் கட்சியை ஒழித்துக் கட்டுவேன் என்று சொல்லத் தெரியவில்லை. மகனுக்கும் மகளுக்கும் மந்திரி பதவி வேண்டி, டெல்லி சென்று, தள்ளு வண்டியில், சோனியா வீட்டுக்குச் சென்று மன்றாடத் தெரிந்த கருணாநிதிக்கு போரை நிறுத்துங்கள் என்று மிரட்டத் தெரியவில்லை.

கேட்ட பதவி கிடைக்கவில்லை என்றதும், பதவியேற்பு விழாவில் பங்கெடுக்காமல், கோபித்துக் கொண்டு வரத் தெரிந்த கருணாநிதிக்கு போரை நிறுத்தாததால், காங்கிரஸ் கட்சியுடன் கோபித்துக் கொள்ளத் தெரியவில்லை. பிரிந்த குடும்பம் இணைந்தவுடன் “இதயம் இனித்தது, கண்கள் பனித்தது“ என்று மகிழ்ந்த கருணாநிதிக்கு தமிழர்களின் மரணமும் இதயத்தில் இனித்ததோ என்னவோ ?

போர் முடிந்ததுமாவது, முகாம்களுக்குள் அடைபட்டு வாடி வதங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்ற ஏதாவது முயற்சி எடுத்தாரா இந்தக் கருணாநிதி ?

டெல்லிக்கு ஒரு கடிதம் அனுப்பி விட்டு எனது கடமை முடிந்து விட்டது என புதிதாக கட்டப் பட்டு கொண்டிருக்கும் தலைமைச் செயலக கட்டிடத்தை சுற்றிப் பார்க்க தனது தள்ளு வண்டியில் கிளம்பி விடுகிறார்.

ஈழத்தில் இருக்கும் தமிழர்களை விடுங்கள். இந்தியத் தமிழர்களான மீனவர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்களே .... ! 300க்கும் மேற்பட்டவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்களே; என்ன செய்து கொண்டிருக்கிறார் இந்தக் கருணாநிதி ? முன்புதான் விடுதலைப் புலிகள் என்று சந்தேகத்தில் கொன்றார்கள். இப்பொழுது இவர்கள் கணக்குப்படிதான் விடுதலைப் புலிகள் அழிக்கப் பட்டுவிட்டார்களே. நாள்தோறும் தமிழக மீனவர்கள், கச்சத் தீவு அருகிலும், இந்திய எல்லைக்குள்ளாகவும் துரத்தித் துரத்தித் தாக்கப் படுகிறார்களே.... என்ன செய்கிறார் இந்தக் கருணாநிதி ?
உலகத் தமிழர்கள் கருணாநிதியால் ஏமாந்து போனார்கள் என்று நெடுமாறன் அறிக்கை விட்டால், என் உயிரைப் பிரிக்க சதி என்று பதிலறிக்கை விடுகிறார். கருணாநிதியின் உயிரை எடுப்பதால் யாருக்கு என்ன லாபம் ? கருணாநிதியின் குடும்பத்தில் வேண்டுமானால் யாராவது சதி செய்யலாம். என் உயிரைப் பறிக்க சதி என்று அறிக்கை விட்டால், கருணாநிதியின் துரோகங்கள் மறைந்து, மக்கள் அவரை மன்னித்து விடுவார்கள் என்று கருணாநிதி பகல் கனவு காணுவாரேயானால் அவரது கனவு பலிக்காது.
தமிழர்கள் இத்தனை துயரத்தில் இருக்கையில், தமிழுக்கு மாநாடு நடத்துவது யார் காதில் பூச்சுற்ற?

இத்தனை தமிழர்களின் பிணங்களின் மேல் தன் ரத்தக் கறை படிந்த கரங்களோடு, கருணாநிதி நடத்தும் இந்த மாநாட்டை தமிழன்னை விரும்பமாட்டாள். இந்த உலகத் தமிழ் மாநாடு, தமிழர்களுக்கு நடத்தப்படும் கருமாதியே தவிர வேறு இல்லை.

மூன்று மணிநேர திரையரங்கு சுகமும் அறுபத்துயொருவருட கால போராட்ட வலிகளும்




இந்திய தமிழகத்தின் தற்போதைய முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதியின் குடும்ப தொலைக்காட்சி நிறுவனங்களும், அவர்களின் ஏனைய நிறுவனங்களும் தமது பொருளாதார வளர்ச்சிகளுக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஈழத்தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்ற மடல் ஒன்றை எனது நண்பர் ஒருவர் கடந்த வாரம் எனக்கு அனுப்பியிருந்தார்.கருணாநிதியின் குடும்ப சொத்தாக விளங்கும் தொலைக்காட்சி நிறுவனங்களில் சன் தொலைக்காட்சி நிறுவனம், சன் திரைப்பட நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் என்பன முக்கியமானவை. இந்த தொலைக்காட்சிகள் ஈழத்தமிழ் மக்களின் அண்மைய பேரவலங்களை முற்றாகவே புறக்கணித்திருந்தன.ஒரு இனம் அழிவின் விழிம்பில் அவலக்குரல் எழும்பிய போதும் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. தனது மூன்று மணிநேர உண்ணாவிரதத்தின் மூலம் வன்னியில் போர் நிறுத்தப்பட்டுவிட்டது என்ற கருணாநிதியின் போலியான பிரச்சாரங்களை மிகைப்படுத்திய இந்த ஊடகங்கள் இறுதிக்கட்ட தாக்குதல்களின் மோசமான விளைவுகளை தமிழகத்தில் இருட்டடிப்பு செய்திருந்தன.மேலும் இந்த நிறுவனங்கள் சிறீலங்கா அரசின் தாக்குதல்களிலும், குண்டு வீச்சுக்களிலும் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் அவலங்களை புகைப்படங்களாக வெளியிடுவதை தவிர்த்து வந்ததுடன், தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாளர்களையும் பெரும் விமர்சனம் செய்திருந்தன, செய்து வருகின்றன. ஈழத்தமிழ் மக்களுக்கு இந்த கூட்டம் செய்த அழிவுகளுக்கு தக்க பதிலடியை கொடுக்கும் பலம் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத்தமிழ் மக்களிடம் உண்டு.ஆனால் அவர்கள் அதனை முழுமையாக பயன்படுத்த தவறி வருகின்றனர் என்பதுடன், கருணாநிதியின் குடும்ப திரைப்பட நிறுவனமான சன் திரைப்பட நிறுவன்தினால் தற்போது தயாரிக்கப்படுத் எந்திரன் திரைப்படம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் மிக அதிகளவான பொருட்செலவில் தயாரிக்கப்படுவதாகவும், அது ஏறத்தான 30 நாடுகளில் உள்ள ஈழத்தமிழ் மக்களின் பணங்களை சுரண்டும் நம்பிக்கையுடன் தான் தயாரிக்கப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.இந்த திரைப்படத்தை 30 நாடுகளில் வெளியிடுவதன் மூலம் பல மில்லியன் டொலர்களை ஈழத்தமிழ் மக்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள இந்த நிறுவனங்கள் முயல்கின்றன. ஆனால் நாம் அதனை முற்றாக புறக்கணிக்க வேண்டும் என்பதும் அவர் முன்வைத்துள்ள வாதங்கள். அவரின் கூற்றுக்கள் அனைத்தும் உண்மையானவை தான். இன்றைய உலக ஒழுங்கில் நாம் எந்த பதில் நடவடிக்கையை மேற்கொண்டாலும் அது பொருளாதாரத்தை மையப்பப்படுத்தியதாக இருந்தால் தான் அது எதிர்த்தரப்புக்கு அச்சுறுத்தலாகவும், இழப்பாகவும் அமையும்.விடுதலைப்புலிகளின் போரிடும் வலுவை முற்றாக அழிப்பதற்கு இந்த உலகம் திட்டமிட்டபோது அவர்கள் புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் நிதிவளங்களையே முதலில் குறிவைத்து நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகள் மீது அனைத்துலகத்தில் கொண்டுவரப்பட்ட தடைகளும் அவர்களின் நிதிவளங்களையும், வினியோக வளங்களையும் முடக்கும் திட்டத்தின் அடிப்படையிலேயே கொண்டுவரப்பட்டது. எமது இனத்தின் விடுதலை வேட்கையை அவர்கள் எவ்வாறு நசுக்க முற்பட்டார்களோ அதனையே நாமும் பின்பற்றி அவர்களுக்கான நெருக்கடிகளை உருவாக்க வேண்டும்.இந்திய திரைப்படங்களை ஈழத்தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிப்பார்களாக இருந்தால் அது பொருளாதார சேதத்தை இந்திய சினிமா துறையில் ஏற்படுத்தும். தமிழகத்தை பொறுத்தவரையில் சினிமாவும் அரசியலும் பின்னிப்பிணைந்தது. நடிகர் விஜய் இந்திரா காங்கிரசுடன் சாயமுற்பட்டு வருவதும் அதனால் தான். சினிமாத்துறை மீதான பொருளாதார சுமைகள் அரசின் பொருளாதார வளங்களை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும் இந்திய சினிமாக்களை அதிலும் குறிப்பாக கருணாநிதியின் குடும்ப நிறுவனங்களின் வெளியீடுகளை நாம் எவ்வாறு புறக்கணிக்கப்போகின்றோம் என்பதுதொடர்பாகவும் பல வாதப்பிரதிவாதங்கள் கடந்த வாரம் ஏற்பட்டிருந்தன.அதாவது தமிழ் திரைப்படங்களை பார்க்கவே கூடாதா? ஏன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அது தவறான வாதம் திரைப்படங்களை பாருங்கள் ஆனால் திரையரங்குகளுக்கு செல்வதை தவிர்ப்பதே உகந்தது. ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளிவருவதற்கு சில வருடங்கள் காத்திருக்கும் எமக்கு அதனை திரையரங்குகளை தவிர்த்து டீவிடிகளில் (DVDs) பார்ப்பதற்கு எடுக்கும் ஒரிரு மாதங்கள் அதிகம் நீண்டதல்ல.ஈழத்தமிழ் மக்கள் இந்திய திரைப்படங்களை திரையரங்குகளில் பார்ப்பதை முற்றாக புறக்கணிக்கும் சந்தர்ப்பத்தில் அதனை கொள்வனவு செய்வோர் மெல்ல மெல்ல அதனை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். அதனால் தமிழகத்திற்கு ஏற்படும் பொருளாதார இழப்புக்கள் ஆட்சியில் இருக்கும் அரசின் மீதான வெறுப்பாகவே மக்களிடம் மாறும்.பொருளாதார கட்டமைப்பு என்பது பல நுண்ணிய படிமுறைகளுடாகவே பரிணாமம் எடுப்பதுண்டு. நாம் செலவிடும் ஒவ்வாரு பவுண்ஸ்களும் அல்லது டொலர்களும் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையானது. எனவே அதனை எங்கு பயன்படுத்த வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்கவேண்டும்.இதற்கு நான் இங்கு ஒரு சிறு உதாரணத்தை குறிப்பிட்டு கொள்கின்றேன், வேல்ஸ் (Wales) மானிலத்தின் கார்டிஃப் (Cardiff) தலைநகரத்தில் உள்ள கார்டிஃப் பல்கலைக்களகத்தில் (Cardiff University) நான் பணிபுரிந்த காலத்தில் என்னுடன் வேல்ஸ் மாநிலத்தின் கார்பிலி (Caerphilly) பகுதியில் வசிக்கும் மாணவன் ஒருவர் பணியாற்றிகொண்டிருந்தார். அவர் தனது கிராமத்திற்கு நான் வந்து செல்ல வேண்டும் எனவும், அங்கு பண்டைய காலத்து அரசர்களின் அரண்மனை ஒன்று உள்ளதாகவும் அடிக்கடி கூறுவார்.ஆனால் எனக்கு நேரம் கிடைப்பதில்லை எனவே போவதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இறுதியாக அவர் என்னை அழைத்த போது ஒரு உண்மையை கூறினார். அதாவது நான் அங்கு வந்து அங்கு சில பவுண்ஸ்களை செலவு செய்தால் அது தமது கிராமத்தின் வர்த்தக நடவடிக்கையில் உயர்வை ஏற்படுத்தும் என கூறியிருந்தார். அதாவது பொருளாதார வலிமையின் அடித்தளம் எங்கிருந்து கட்டி எழுப்பப்படுகின்றது என்பதை அன்று நான் புரிந்து கொண்டேன்.தனது கிராமத்தின் மீது அந்த இளைஞனுக்குள்ள பற்று எமது இனத்தின் மீது ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் ஏற்பட வேண்டும். நாம் செலவிடும் ஒவ்வொரு நாணயமும் எதிர்த்தரப்பையோ அல்லது அவர்களுக்கு உடந்தையாக செயற்படுபவர்களையோ பலப்படுத்தாது பார்த்துக்கொள்ள வேண்டும். சிறீலங்காவில் கூட தேவைக்கு அதிகமாக நாம் செலவிடும் ஒவ்வவொரு நாணயமும் சிங்கள அரசினை பலப்படுத்தவே உதவும். இந்திய துாதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டு இந்திய திரைப்படங்களை திரையரங்குகளில் பார்ப்பதன் மூலம் அதன் பொருளாதாரத்தை நாம் வலுப்படுத்துவோமானால் எமது போராட்டத்தினால் எந்த பலனும் ஏற்பட்டுவிடப்போவதில்லை என்பது தான் எனது கருத்து.திரையரங்குகளில் திரைப்படங்களை பார்க்காது விடுவதால் எமது உயிர் எம்மைவிட்டு பிரிந்து விடாது. மேலும் அதன் மூலம் எமது பிள்ளைகளின் காலாச்சாரங்களும் பாதிக்கப்படுவதில்லை. என்னைப்பொறுத்தரையில் 2000 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள திரையரங்கு ஒன்றில் தமிழ் திரைப்படம் ஒன்றை பார்த்தேன் அதன் பின்னர் கடந்த ஒன்பது வருடங்களாக திரைப்படங்கள் எதனையும் திரையரங்குகளில் பார்க்கவில்லை.மலிவாக கிடைக்கும் டிவீடிக்கள் மூலம் அல்லது இணையத்தளங்கள் மூலம் பார்ப்பதுண்டு. நாம் எமது உரிமைக்காக போராடும் இனம் எனவே நாம் தான் அதிக வலிகளையும், கட்டுப்பாடுகளையும் சுமக்க வேண்டும். ஒரு இந்தியனையோ அல்லது சிங்களவனையோ விட எமக்கு முன்னாள் உள்ள பணி பல மடங்கு அதிகமானது. அதனை கடப்பதற்கான பாதையும் கடினமானது. நீதித்துறையில் ஒரு வாசகம் உண்டு அதாவது கொலை செய்பவனை விட அதனை துVண்டுவதே அதிக குற்றம்.அதனை போல இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளையும், தற்போதைய தமிழக அரசசையும், அதற்கு துணைபோகும் சக்திகளையுமே ஈழத்தமிழ் மக்கள் தமது பிரதான எதிரிகளாக பார்க்கின்றனர்.எமது மக்களின் அவலங்கள் தொடர்பாக மேற்குலக ஊடகங்கள் காட்டும் அனுதாபங்களில் ஒரு விகிதத்தை கூட தற்போதைய தமிழகத்தின் ஆளும் கூட்டணி அரசின் ஊதுகுழல்கள் காண்பிக்கவில்லை.நாம் எந்த கலைஞர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால் எமக்கு எமது மக்களில் விடுதலை தான் தற்போதுள்ள தலையாய பிரச்சனை அதனை காணும் வரையிலும் எந்த வழியிலும் நாம் போராடுவோம். எமது கையில் உள்ள அத்தனை வளங்களையும் ஆயுதமாக்குவோம். அதனை தான் எனது நண்பர் எனக்கு கூற முனைந்திருந்தார்.மகாத்தமா காந்தி கூறியதை போல சிறியதோ பெரியதோ எம்மால் முடிந்த பங்களிப்புக்களை நாம் வழங்கும் போது அதுவே எமது வெற்றியை தீர்மானிக்கும் காரணிகளின் உந்து சக்தியாக மெல்ல மெல்ல மாற்றம் பெற்றுவிடுவதுண்டு.மூன்று மணிநேர திரையரங்கு சுகத்திற்காக ஒரு இனத்தின் ஆறுபத்தியயாரு வருட கால விடுதலைப் போராட்டத்தையும், வேதனைகளையும் அடகுவைக்க முடியாது. அதனை நாம் தான் சிந்திக்க வேண்டும்.


வேல்ஸ் இல் இருந்து அருஷ்நன்றி: ஈழமுரசு


Tuesday, August 18, 2009

ஈழ மக்களுக்காக பொய்யாக ஏங்கும் தமிழ் அரசியல் வியாபாரிகளே, மனம் மாறுங்கள்.

இது ஒரு முயற்சி:
இந்த இடுக்கையை பதிவு செய்ய எனக்கு மனமில்லைதான். ஆனாலும் என்னால் அடக்கிக்கொண்டு இருக்க முடியவில்லை.

தமிழ் நாட்டில் உள்ள எல்லா அரசியல்வாதிகளும் தமிழ் தேசிய தலைவரின் பெயரையும் படத்தையும் வைத்துக்கொண்டு பிழப்பு நடாத்தி கொண்டு உள்ளனர். கலைஞர் முதல் திருமா வரை, ஜெயலலிதா முதல் ஈழ உணர்வாளர்கள் என தன்னை பிரகடன படுத்தி கொண்டு அலையும் சில ஜன்மங்கள் வரை அனைவருக்கும் தேசிய தலைவர் தானவர்கள் கண் முன்னால் தெரிகின்றனர். அங்கே 30 முகாம்களில் தன்னை இழந்து தான் கொண்ட பெயர்களை இழந்து நடைப்பிணமாக அலைந்து கொண்டு இருக்கும் மூன்று லட்சம் அப்பாவி மக்களை பற்றி அவர்களுக்கு, அதாவது தமிழ் நாட்டில் அரசியல் வியாபாரம் செய்து வரும் இந்த நாதாரிகளுக்கு எங்கே தெரிய போகிறது?தலித் மக்களின் தலைவராக தன்னை பிரகடன படுத்தி தமிழ் நாட்டின் தேசிய தலைவராக தன்னை தானே கூறிக்கொள்ளும் திருமா ஆகஸ்ட் 17 அன்று அவருடைய பிறந்த தினத்தை படு விமரிசையாக கொண்டாடினார். இதில் வேடிக்கை என்னவென்றால், அவருடைய கட்சியினர் பல இடங்களில் தேசிய தலைவரின் முழு உருவ படத்தை தோரணமாக கட்டி இருந்தனர். தமிழ் மக்களின் ஏகோபித்த தலைவராக தானே கூறிக்கொள்ளும் மு க விண் உததரவின் படி தேசிய தலைவரின் படம் பல இடங்களில் தார் பூசி அளிக்கப்பட்டன. இது குறித்து திருமவிடம் கட்சியினர் கூறியபோது இந்த விசயத்தை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என அவர் கூறிவிட்டதாக அறிய வருகிறது.நமக்கு இங்கு எழுவது ஒரே கேள்விதான். தேசிய தலைவரின் பெயரை கொண்டு தன் அரசியல் வாழ்க்கையை துவங்கிய திருமா போன்ற பல தமிழ் நாட்டு போலிகள் மக்களை இன்னும் எவ்வளவு நாட்கள் ஏமாற்றிக்கொண்டு இருப்பார்கள்.தற்போது விசயத்துக்கு வருவோம். அரசியல் வியாபாரிகளுக்கு அது தான் பொழப்பு என்றால், சில பத்திரிகைகள் அதைவிட மேலே போய் தேசிய தலைவரை கொச்சை படுத்துவதில் போட்டி போட்டு கொள்கின்றன.
குறிப்பாக, சென்னையை சார்ந்த பார்ப்பன பத்திரிகைகள் ஈழம் என்பது கனவு, அது தற்போது கலைந்துவிட்டது என மக்களிடையே பிரச்சாரம் செய்து வருகின்றன.இன்னும் சிலரோ, ஒரு படி மேலே போய் தலைவர் எங்கு உள்ளார் என்ற தேவையில்லாத ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போதைய தலையாய பிரச்சினை, சொந்த மண்ணிலே அகதிகளாக அரசு நலன்புரி முகாம்களில் வதைபபடும் மூன்று லட்சம் மக்கள் அவர்கள் சொந்த வீடுகளுக்கு செல்ல அனைவரும் பாகீதரண முயற்சி எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.அவர்களை பற்றி, அவர்களின் நிலமையை பற்றி பேசாமல் இருக்கும் ஒவ்வொரு தமிழனும் (என்னையும் சேர்த்து) ஏதோ ஒரு வகையில் தனக்கு தெரியாமலே சிங்களவனுக்கு உதவி வருகிறார்கள்.எனவே, என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால், தமிழ் நாட்டில் வரிந்து கட்டி கொண்டு ஈழ மக்களுக்காக பேசும் அரசியல் போலிகளே, உண்மையை உணருங்கள். அங்கு கஸ்டத்தில் இருக்கும் மக்களை காப்பாற்ற உண்மையாக உங்கள் உள்மனததை கேட்டு நல்ல முடிவை எடுங்கள். இல்லையென்றால், ஈழ உறவுகள் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்களை மிக கேவலமாக தங்கள் வரலாற்றில் வடித்து விடுவர்.எனவே, ஈழ வரலாற்றில் தம் பெயர்களை பதியும் நேரம் வந்து விட்டது.

Thursday, June 18, 2009

மக்களை முட்டாள் ஆக்கும் இலங்கை அரசு.

இன்று ஒரு தகுடு தகுடு தகவலை விடுதலைப்புலிகள் அமைப்பு தெரிவித்து உள்ளதாக இலங்கை புலன் ஆய்வு அறிவித்து உள்ளது. அதன் படி தேசிய தலைமை பீடம் வீரகாவியம் அடைந்து விட்டதாக தெரிவிக்க பட்டு உள்ளது.ஆனால், அந்த செய்தியிலேயே பல முரண்பாடுகள் உள்ளது அதை படித்த வர்களுக்கு நன்றாக தெரியும்புலிகளின் புலனாய்வு பிரிவு மற்றும் வெளியகப்பணிப்பிரிவு பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எமது இயக்கத்தின் தலைவர் மற்றும் ராணுவ தளபதி தமிழீழத் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வீரமரணம் அடைந்து விட்டார். இதை புலிகளின் புலனாய்வுத் துறை இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. இறுதிப்போரின் போது பிரபாகரனை பாதுகாப்பான இடம் நோக்கிக் கொண்டு செல்லும் முயற்சியில் அவருடன் எமது புலனாய்வு போராளிகள் ஈடுபட்டிருந்தனர். இப்போது இந்த புலனாய்வு போராளிகள் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளனர். இவர்கள் இப்போது அளித்த தகவல்கள் மற்றும் இலங்கை ராணுவத்துடன் தொடர்புடைய எங்களுக்கு தகவல் அளிப்பவர்கள் கூறும் தகவல்கள் ஆகியவை தலைவர் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததை உறுதிப்படுத்துகின்றன.
இங்கு ஒன்று மட்டும் புரியவில்லை. ஒரு தலைவரை முக்கியமான இடத்துக்கு மாற்றும் போது எந்த தளபதியும் அவருடைய முக்கிய நபரின் பாதுகாப்புக்கு குந்தகம் இல்லாமல் முடித்து விட நினைப்பர்.ஆனால் இங்கு தலைவர் கொல்லப்பட்டு அவரின் உதவியாளர்கள் பத்திரமாக பாதுகாப்பு பகுதிக்கு வந்து விட்டதாக கதை புணயபபட்டு உள்ளது.
எந்த செய்தியையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வு துறையினர் ஆகிய எங்களுக்கு உள்ளது. அதன் அடிப்படையில் தலைவர் பிரபாகரன் சரண் அடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை. இலங்கை ராணுவத்திடம் போரிட்டே வீரகாவியம் ஆனார் என்பதை நாங்கள் மிக திடமாக உறுதிப்படுத்துகின்றோம். இப்போது தோன்றியுள்ள மிக நெருக்கடியான காலகட்டத்தில் தலைவர் பிரபாகரன் உருவாக்கி வளர்த்தெடுத்து, நமது கைகளில் தந்து விட்டு சென்றுள்ள எமது விடுதலைப்போராட்டத்தை அதே உறுதிப்பாட்டுடன் அதே கட்டுக்கோப்புடன் அதே ஒற்றுமையுடன் நாங்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும். எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வெல்லும் எமது இறுதி லட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக இப்போது உருவாக்கப்பட உள்ள நாடு கடந்த தமிழீழ அரசு அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எங்கள் முன்னாள் உள்ள கடமையாகும். தமிழீழ தேசிய தலைவர் அவர்களுக்கும், அவருடன் வீரமரணம் அடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் , தளபதிகளுக்கும் வீரவணக்கத்தை செலுத்துவதுடன் இந்த போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு புலிகளின் புலனாய்வுத் துறை அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது.
ATTN: இந்த புதிய கதையை நம்புவது அவரவர் பொறுப்பு