Source: http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=5739:2010-04-13-10-52-39&catid=901:2009-08-16-09-44-24&Itemid=139
தமிழ்த் திரைப்படங்களின் அசத்தலான ஃபார்முலாக்களில் ஒன்று ஒரே பாடல் காட்சியில் கதாநாயகன் பேப்பர் போடுவதில் ஆரம்பித்து ஊறுகாய் கம்பெனி தொடங்கி, வியர்வை சிந்தி கடுமையாக உழைத்து பெரும் பணக்காரனாகிவிடுவது. இந்த ஃபார்முலா விளம்பரங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறது. "நான் வளர்கிறேனே ம்ம்மி" காம்ப்ளான் விளம்பரம், "குடிக்க வேணாம், அப்படியே சாப்பிடுவேன்" ஹார்லிக்ஸ் விளம்பரம் இரண்டும் வெற்றிகரமான உதாரணங்கள்.
தமிழ் இலக்கிய உலகத்திலும் இந்த ஃபார்முலா வெற்றி பெற்றிருப்பதைக் கவனிக்கும்போது, தமிழ் நாட்டிற்கே உரிய இந்த ஸ்பெஷாலிட்டியை பாராட்டியே ஆகவேண்டும் என்ற பரவசம் ஏற்படுகிறது. இன்று பெரிய இலக்கியவாதிகளாக பெயர் பெற்றிருக்கும் பலர் சினிமாப் பாட்டைப் போட்டு அந்த கேப்பில் இலக்கியத்தில் முன்னுக்கு வந்தவர்கள். அவர்களை எல்லாம் ஏப்பம் விட்டு ஒரு சில விளம்பரப் படங்களால் முன்னுக்கு வந்தவர் என்ற பெருமை லீனா மணிமேகலையையே சேரும்.
"பறை" பட சர்ச்சை, லயோலா கல்லூரி துப்பட்டா தகராறு, தில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த யாரோ ஏற்பாடு செய்திருந்த இரண்டு ரயில் பெட்டிகளை கடத்திச் சென்ற The Great Train Robbery துணிகரக் கொள்ளை, யோனியில் மசிர் கவிதை, கூலி கேட்ட தொழிலாளியை கடல் கடந்து வந்த எழுத்தாளரை அடியாளாக ஏவி விட்டு அடித்த "செங்கடல்" படம் என்று அடுத்து அடுத்து வெற்றிகரமான சுயவிளம்பரப் படங்களைத் தந்த லீனா மணிமேகலையின் அடுத்த விளம்பரப் படமான இந்துத்துவா எதிர்ப்புப் படமும் ஒரு வாரம் வெற்றிகரமாக "ஏ" சென்டர்களில் ஓடும் என்று நம்பலாம். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
வெற்றிகரமான விளம்பரப் பட நடிகை லீனாவின் சளைக்காத இந்த படைப்பு முயற்சிகளில் ஏப்ரல் – 15 அன்று ரிலீசாக இருக்கும் இந்துத்துவா எதிர்ப்பு, கலாச்சார அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்கு எதிரான கருத்துச் சுதந்திர போர்ப் பிரகடனப் படம் இரண்டு வகையில் முக்கியமான மைல் கல்.
வருடத்திற்கு ஒருமுறை தமிழ் நாட்டின் கேந்திர மையங்கள் எங்கும் "கலை இலக்கிய இரவு" விழாக்கள் நடத்தி தமிழ் கலாச்சாரப் பரப்பில் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சிபிஎம் – மின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் ச. தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, பிரளயன் போன்ற மூத்த ஃபிகர்களையும், தமிழ் அறிவுப் பரப்பின் சீனியர் அறிவாளிகள், கவிஞர்கள், எழுத்தாளர்களையும் வைத்து 5 மணி நேரத்தில் எடுத்து அன்றே ரிலீசாகப் போகும் படம் என்பது ஒரு சாதனை.
தமிழ்நாட்டின் மிகப் பெரிய அறிவாளியாகவும், மனித உரிமைப் போராளியாகவும் மட்டுமே அறியப்பட்டிருந்த அ. மார்க்ஸ் அவர்களை, இந்த மெகா விளம்பரப் படத்தின் மூலம் ப்ரொட்யூசர் அந்தஸ்திற்கு உயர்த்தியிருப்பது அதைவிட பெரிய சாதனை. ஒரே படத்தில் இரண்டு மைல் கல்கள்.
லீனா மணிமேகலையின் இந்த விளம்பரப் படத்தின் கதைக் கருவும் திரைக்கதை அம்சங்களும் மணிரத்தினத்தின் பாணியில் மிக மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருப்பதும் கடந்த இரண்டு வாரங்களாக இலக்கிய வட்டாரங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாடாவதி ஜர்னலிசத்திற்கு வாழ்க்கைப்பட்டுவிட்டால் எதையாவது எழுதித் தொலைக்க வேண்டும் என்பது விதி. மணிரத்தினத்தின் வாரிசு லீனா மணிமேகலை வாயில் இருந்து ஒரு தகவலும் கசியப் போவதில்லை. மணிரத்தினம் மேதை, அதனால் பேசுவதில்லை என்று சொல்கிறார்கள். லீனா மேதையா மக்கா என்ற கேள்வியும் எரிச்சலும் பொத்துக் கொண்டு வந்தது. மக்கு என்கிறார்கள் பலர். நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை. யோசனைக்கு நடுவே எடிட்டரின் ஏகவசனங்கள் பத்தி பத்தியாக மூளைக்குள் ஓட, மேசை முன்னே மல்லுக்கட்டி உட்கார்ந்ததும் பேனா வழியாக சிந்தனைகள் தானாக வழிய ஆரம்பித்துவிட்டது.
ஃபோக்கஸ் லீனா இல்லை. புதுப்பட ப்ரொட்யூசர் அ. மார்க்ஸ். இரண்டு விமர்சனக் கணைகள்.
விமர்சனக் கணை ஒன்று. லீனா மணிமேகலையை வைத்து அ. மார்க்ஸ் எடுக்கும் இந்த முதல் படத்தில், சிபிஎம் – மின் மூத்த மூன்று ஃபிகர்கள் ச. தமிழ்ச்செல்வன், ஆதவன் தீட்சண்யா, பிரளயன் கட்டாயம் நடிக்க வேண்டும் என்று அ. மார்க்ஸ் ஒற்றைக் காலில் நின்றதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் சொல்கின்றன. கலாச்சார அடிப்படைவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக போராடுவதற்கும் சிபிஎம் – க்கும் ஏழாம் பொருத்தம். இந்த சிபிஎம் கட்சிதானே அவர்களுடைய சொந்த கட்சித் தலைவர் W. R. வரதராஜன் மீது ஒழுக்கக் குற்றச்சாட்டு வைத்து, கட்சியில் இருந்து ஒதுக்கி, தற்கொலை செய்து கொள்ள வைத்தது? W. R. வரதராஜன் தற்கொலைச் செய்தி தினசரிகளில் ஒரு வாரம் பரபரப்பாக பேசப்பட்டு, சிபிஎம் – மின் மானம் கப்பலேறிய பிறகு, எந்த கூச்சநாச்சமும் இல்லாமல் தோழர். வரதராஜனுக்கு செவ்வணக்கம் செலுத்தி பிரச்சினையை குழிதோண்டிப் புதைத்ததும் இதே சிபிஎம் தானே? W. R. வரதராஜன் மரணம் கொலையாக இருக்கலாம் என்று செய்தி வெளியிட்ட பாமக அலுவலகத்தை சூறையாடிய சிபிஎம் காம்ரேடுகள் கருத்துச் சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? அதே சிபிஎம் – மின் லீடிங் ஃபிகர்கள் கலாச்சார அடிப்படைவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் எந்த முகத்தோடு கலந்து கொள்கிறார்கள்? அவர்களை புதுப் ப்ரொட்யூசர் அ. மார்க்ஸ் இந்த விளம்பரப் படத்தில் நடிக்க வைப்பதன் மர்மம் என்ன?
கணை இரண்டு. கேரளாவின் மூத்த எழுத்தாளர் பால் சக்காரியா கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் தேதி கேரளாவின் காஸர்கோடு என்ற மாவட்டம் பையனூரில் சிபிஎம் – மின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) உறுப்பினர்களால் தாக்கப்பட்டார். காரணம்? அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கேரள காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் உன்னிதன், மல்லாபுரம் மாவட்டம் மஞ்சேரியில் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்தபோது, DYFI உறுப்பினர்கள் அவருடைய வீட்டிற்குள் புகுந்து இருவரையும் தாக்கி வீடியோ எடுத்ததை பால் சக்காரியா கண்டித்து அறிக்கை விட்டிருந்தார். அறிக்கை விட்டதற்கு பால் சக்காரியாவுக்கு கிடைத்தது உதை. இது சிபிஎம் கருத்து சுதந்திரத்திற்குத் தரும் ஜனநாயகம். விளம்பர நடிகை லீனோவோ புதுப்பட ப்ரொட்யூசர் அ. மார்க்சோ கேரள சிபிஎம் – மின் இந்த ரவுடித்தனைத்தைக் கண்டித்து ஒரு அறிக்கையாவது விட்டார்களா? கண்டனக் கூட்டம் நடத்தினார்களா? இல்லை இனிமேலாவது நடத்துவார்களா? அப்படி நடத்தினால் அதில் சிபிஎம்-மின் மூத்த மூன்று பிகர்களும் கலந்து கொள்வார்களா?
அப்படி எல்லாம் முடியாது என்றால், பிறகு என்ன எழவுக்கு இப்போது இந்த ஒப்பாரி விளம்பரப் படத்தை அ.மார்க்ஸ் அவசர அவசரமாக தயாரித்து வெளியிடுகிறார்?
விளம்பரப் பட நடிகை லீனா மணிமேகலை மீது இந்து மக்கள் கட்சி ஒரு போலீஸ் புகார் கொடுத்துவிட்டதற்காக போராட்டக் களத்தில் குதிக்கும் புதுப் ப்ரொட்யூசர் அ. மார்க்சுக்கு இந்த நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல நேரம் இருக்காது. பெருஞ்சித்திரனார் முதல் மனுஷ்யபுத்திரன் வரை பலபேருடைய கோவணங்களை உருவி சேர்த்து வைக்கவே அவருக்கு நேரம் சரியாக இருக்கும். இப்போதான் தெரிகிறது, அடுத்து யார் கோவணத்தை உருவலாம் என்ற அவரசத்தில் இருந்த அ. மார்க்சின் கோவணத்தை யாரோ உருவி விட்டிருக்காங்க என்று.
- அ.அமுதன் ( amuthan70@yahoo.com )
No comments:
Post a Comment