Thursday, October 8, 2009

பேராசிரியர் சுப வீரபாண்டியனின் பிழைப்புவாதம் தொடர்கிறது








யாராவது தமிழை தெளிவான உச்சரிப்புடன் அழகியலோடு கையாண்டாலே அவரை தமிழின உணர்வாளர் என்று நம்மனது ஏற்றுகொள்ளும். அப்படி வெகுநாட்களாக தமிழ்கூறும் நல்லுலகில் தமிழின உணர்வாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் பேராசிரியர் சுபவீ. தமிழின உணர்வாளர் என்பதாலே புலம்பெயர் தமிழர்கள் இவரை தோளில்வைத்து கொண்டாடியது முந்தைய வரலாறு.



உலகெங்கும் ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைகள் பத்திவகுப்பெடுத்து வந்த சுபவீ இப்பொழுது அறிவாலயம் பக்கமாக ‘பக்காவாக’ வகுப்பெடுத்து கொண்டிருக்கிறார்.நாளுக்குநாள் ஈழத்தில் படுகொலைகள் அதிகரிக்க அதிகரிக்க சுபவீயின் கால்கள் ஈழ ஆதரவு போராட்டத்திற்கு எதிர்திசையில் நடைபோட ஆரம்பித்தது. செத்துவிழுந்த தொப்புள்கொடி உறவுகள்பத்தி கவலைப்படவேண்டிய சுபவீ எங்கே கருணாநிதியின் நாற்காலி கவிழ்ந்து விடுமோ? என்று கவலைகொள்ள ஆரம்பித்துவிட்டார். திசைமறந்த பறவைபோலே ஈழம் என்ற வார்த்தையை உச்சரிப்பதை நிறுத்தி விட்ட சுபவீ மீண்டும் மக்கள் மன்றங்களில் பேசத்துவங்கி இருக்கிறார்.



வருடந்தோறும் கருணாநிதியை வாழ்த்தி ‘வஞ்சப்புகழ்ச்சி தூக்கலாக’ நடைபெறும் கவியரங்கில் மேடையேறிய சுபவீ முழுக்கமுழுக்க கருணாநிதிதாசனாக மாறிப்போனார். வழமையாக எதையாவது அள்ளிவிடும் செகத்ரட்சகனே வெட்கப்படும்படியாக நம்மாளு வெளுத்து வாங்கி இருக்கிறார். அதெல்லாம் அவர்கள் உட்கட்சி விவகாரம் அதைபத்தி நாம் கவலைபடவேண்டியதில்லை.



நமக்கு கவலை எல்லாம் சுபவீயின் “பிரபாகரனின் இருப்பு பற்றிய கசப்பான உண்மை” என்ற தலைப்பில் குமுதம் இணையதளத்தில் கொடுத்தநேர்காணல் பற்றியதுதான்.இந்த நேர்காணலில் கருணாநிதி விசுவாசத்தை மிகத்தெளிவாக வெளியிட்டு இருக்கிறீர்கள்.



பிரபாகரன் இல்லை என்ற தகவலை இந்த நேர்காணலின் மூலமாக உலகத்தமிழ் மக்களுக்குகூற விரும்புவதாக கூறி இருக்கிறீர்கள். உங்களிடமிருந்து எந்தவொரு தகவலையும் உலகத்தமிழ்மக்கள் எதிர்பார்க்கவில்லை என்ற நிதர்சன உண்மையை நீங்கள் அறியாமல் இருக்கமாட்டீர்கள். உலகத்தமிழர்களின் இதயங்களில் இருந்து நீங்கள் தூக்கி எறியப்பட்டு வெகுநாட்கள் ஆகின்றது என்பது மறுக்கமுடியாத உண்மை.ஈழத்தமிழன் கொன்றழிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் உலகத்தமிழ்மாநாடு தேவையா? என்று நியாயமான கேள்விக்கு உங்களது பதில் ஏற்றுகொள்ளும்படி இல்லையே! ஈழத்தமிழர்கள் செத்துவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தமா? தமிழை வளர்க வேண்டாமா? என்று அறிவுப்பூர்வமாக கேள்விகேட்கும் நீங்கள் அதற்கும் ஒருபடி மேலேசென்று இந்த மாநாடுகூட ஒருவழியில் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாணும் என்று அளந்து விடுகிறீர்கள். கேப்பையில் நெய்வழிகிறது என்று இன்னும் எத்தனை காலத்திற்கு கதையளக்கபோகிறீர்கள்?.ஈழத்திற்காக போராடியர்கள் அப்படியே முடக்கி போனார்களா? அவர்கள் இயங்கவில்லையா என்று கேள்வி கேட்கும் நீங்கள், கலைஞரை குற்றம் சுமத்துபவர்கள் என்ன தீக்குளிப்பு போராட்டமா நடத்தினார்கள்? என்று கேட்டு இருக்கிறீர்கள். முத்துகுமார் நியாபகம் இருக்கிறதா சுபவீ அவர்களே? முத்துகுமாரின் தியாகத்தை மறைத்து அதே வேளையில் அழகிரியின் பிறந்தநாளை கோலாகாலமாக கொண்டாடிய கருணாநிதியின் துரோகத்தை மறைக்கமுடியுமா?அல்லது கருணாநிதியின் ஊடகங்கள் செய்த இருட்டடிப்பை மறக்கமுடியுமா? முத்துகுமார் கருணாநிதிபத்தி எழுதியதை மறுவாசிப்பு செய்துபார்க்க சம்மதமா?அப்படியே உங்கள் முன்னாள் தோழர் சீமானையும் காட்டி கொடுக்கிறீர்கள் “சீமான் இத்தருணத்தில் உலகத்தமிழ் மாநாடு கூடாது என்கிறார்! அதே நேரத்தில் ‘உத்தரவு’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்” என்கிறீர்கள். கலைஞர் அன்று முதல் இன்றுவரை ஈழத்தமிழனுக்காக உழைக்கிறார் என்கிறீர்கள். அவரின் அந்த உழைப்பினால் இதுவரை ஈழத்தமிழன் துயரம் எந்தளவிற்கு துடைக்கப்பட்டது என்று சொல்லமுடியுமா? அகதி முகாம்கள் அருமையாக இருக்கின்றன என்ற பார்ப்பன இந்து ராமிற்கும் இலங்கையில் சுமூகநிலை நிலவுகிறது என்று சொன்ன கருணாநிதிக்கும் பெரிதாக என்ன வித்தியாசம் இருக்க முடியும் சுபவீ அவர்களே? போர் வந்தால் மக்கள் சாவது இயல்புதான் என்ற செயலலிதாவும் மழைவிட்டும் துவானம் தூவுவது இயல்புதான் என்று கருணாநிதியும் ஒரே குரலில் ஒலித்தது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?.



.ஆகமொத்தம் இங்கே ஈழத்திற்காக நடந்தபோராட்டங்கள் எல்லாமே கருணாநிதியின் ஆட்சியை கவிழ்க நடந்த சதிமுயற்சி என்கிறார் சுபவீ. ஈழத்திற்காக உண்மையாக போராடியர் கருணாநிதி மட்டுமே என்று பெரியார்மீது அடித்து சத்தியம் செய்கிறார். இவர் கனிமொழியோடு சேர்ந்து ஈழத்தமிழர் விடுதலைக்கு ‘லாபி வொர்க்’ பார்த்துகொண்டு இருக்கிறாராம். கருணாநிதி காங்கிரசோடு கைகோர்த்து கூடசரி என்கிறார் ஈழத்தில் தமிழர்களை கொன்ற ராசபக்சே போன்று இந்தியாவில் முகமதியர்களை கொலை செய்த பா.ச.க ஆட்சிக்கு வந்திடும் அபாயத்தில் இருந்து காப்பதற்கே காங்கிரசு கூட்டணியாம். இதற்கு முன்னாள் கருணாநிதி பா.ச.கவோடு கைகோர்த்து பற்றிகேட்டால் அது பேனமாசம் இது இந்தமாசம் என்று சொன்னாலும் சொல்லுவார். சுபவீயை கொண்டாடியதற்காக புலம்பெயர் தமிழர்கள் கண்டிப்பாக வருந்துவார்கள் அப்படி வருந்துபவர்களில் நானும் ஒருவன்.‘பெரியார்விருது’ வீரமணிக்கும், ‘அண்ணாவிருது’ கருணாநிதிக்கும் ‘கலைஞர்விருது’ ஸ்டாலினுக்கும் கொடுக்கப்பட்டு விட்டது ‘கனிமொழிவிருது’ நமது சுபவீக்கு அடுத்த ஆண்டு அளிக்கப்படும் என்று நம்புவோமாக!
www.athirvu.com

ஈழநாடு ஆசிரியருக்கு கொலை மிரட்டல்!

பிரான்சிலிருந்து வெளியாகும் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் சிவகுரு பாலச்சந்திரன் அவர்களுக்கு நேற்று மாலை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பல வாரங்களாக தமிழ் தேசிய ஆதரவு அரசியல் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதிவந்த திரு. சி. பாலச்சந்திரன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி வானொலியில் சுவிஸ் நேரத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் நோக்கில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலைக் கண்டித்து அண்மையில் வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பாகவே இந்தக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று, புதன்கிழமை (07.10.2009) பாரிஸ் பாராளுமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற வழமையான ஒன்றுகூடலில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்த வேளை, அங்கு அவரை இடைமறித்த ரி.ஆர்.ரி. வானொலி உரிமையாளர் தர்சன் எனப்படும் சிறீரங்கன், அறிவிப்பாளர் ரவீந்திரன் ஆகிய இருவரும் அவரைத் தரக்குறைவாக ஏசியதுடன் தாக்குவதற்கும் ஈற்பட்டனர்.
அங்கு கூடியிருந்தவர்கள் இடையில் புகுந்து மறித்த போதும், அந்த இருவராலும் ஆசிரியர் பாலச்சந்திரன் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். ஏற்கனவே, கடந்த 30-09-2009 அன்று மாலையும் இதே போன்று தொலைபேசியிலும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

Source:http://www.meenagam.org/?p=12788#more-12788

Tuesday, October 6, 2009

தமிழகத்து தொப்பிள்கொடி உறவுகளுக்கு ஈழத் தமிழர்களின் இதயம் கனத்த மடல்!






இந்திய – சிறிலங்கா கூட்டுச் சதிக்கு முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் இழந்துவிட்டு, யுத்தக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டு வதை முகாம்களுக்குள் வாழ்விழந்து போயுள்ள ஈழத் தமிழர்கள் மூன்று இலட்சம் பேர் சார்பாகவும் இந்த மடலை உங்களுக்கு எழுத நேர்ந்ததற்காக வேதனைப் படுகின்றேன்.

உலகம் முழுவதும் திரண்டு வந்தாலும் நீங்கள் உடன் இருக்கிறீர்கள் என்ற எங்களது கர்வம் இப்போது எங்களிடம் இல்லை. இப்போதெல்லாம் அந்த எண்ணத்தை எங்கள் மனதிலிருந்து முற்றாகத் துடைத்தெறிந்துவிட்டோம். நாங்கள் எங்களுக்கான பாதையை வகுப்பதில் உங்கள் குறித்த எங்கள் அதீத நம்பிக்கையே எங்களை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றுவிட்டது.
இந்தியாவில் தமிழகம் இருக்கிறது என்ற யதார்த்தத்தை மறந்துவிட்டு, தமிழகம் எங்களோடு இருக்கிறது என்று நாங்கள் உங்களை அளவுக்கு அதிகமாகவே நம்பிவிட்டோம். எங்கள் எதிரியின் கைகளில் கிளிநொச்சி வீழ்ந்தபின்னர் நாங்கள் உங்கள் மீதான உச்ச நம்பிக்கையுடன்தான் முள்ளிவாய்க்கால் வரை அத்தனை அவலங்களையும் தாங்கியவாறு ஓடிக்கொண்டிருந்தோம். உங்கள் திசையை நோக்கியே எங்கள் குரல்களை ஓங்கி எழுப்பினோம்.
முத்துக்குமாரன் மூட்டிய தீயும், பின்னவர்களின் தியாகங்களும் எங்கள் மனங்களை உருக்கியது. எங்களுக்கு நம்பிக்கை ஊட்டியது தமிழகம் எங்களுக்காகப் பெங்கி எழுமென்று உண்மையாகவே நாங்கள் நம்பிவிட்டோம்.



எங்களது தியாக வேள்விக்கு அடித்தளம் இட்டவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். தமிழர்கள் ஆளும் உரிமை உள்ளவர்கள் என்ற பேரறிஞர் அண்ணா அவர்களது போர்ப் பறை இந்திய – சீன யுத்தத்துடன் முடிவுக்கு வந்தாலும் எங்கள் செவிகளில் இப்போதும் அது ஒலித்துக் கொண்டே உள்ளது.
ஆம்! ‘ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பதில் என்ன குறை?’ என்று எங்கள் உணர்ச்சிக் கவிஞரும் அண்ணாவை நினைவு கூர்ந்தார். எங்கள் போதாத காலம் அண்ணா அவர்களது ஆயுள் அத்தனை குறைவாகப் போய்விட்டது. உங்களுக்குத் தெரியுமா… எங்கள் தலைவரின் ஆத்மார்த்த குரு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் என்பது? ஆம்! வெள்ளையர்களுக்கு காந்தியின் அகிம்சை புரிந்தது. இந்தியாவுக்கு அது புரியவில்லையே! இந்திய அமைதிப் படை என்ற போர்வையில் இலங்கைத்தீவை ஆக்கிரமிக்க வந்த இந்தியப் படை, இந்திய அரசின் பிராந்திய வல்லாதிக்க கனவுகளை ஏற்றுக்கொள்ளாமல் இந்தியாவின் எதிரிகளுடன் உறவாடிய சிறிலங்காவைத் தாஜா செய்ய எங்களைப் பலிக்கடா ஆக்கியபோது எங்களது திலீபனும் காந்தியைத்தான் நம்பினார்.
அவரது காந்தியப் பாதை இந்தியாவுக்குப் புரியாமலே போய்விட்டது. காந்தியின் அகிம்சையை நம்பிய திலீபன் அந்த காந்திய தேசத்தால் படுகொலை செய்யப்பட்டான். காந்தி தோற்றுப்போய் காணாமல் போனதனால், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்களது பாதை மட்டுமே எங்களுக்கு மீதியாக இருந்தது. இப்போதெல்லாம் எங்களுக்குத் தத்துவம் போதிப்பவர்கள், அந்தக் காந்தியவாதி திலீபன் தோற்றபோது எங்கே போனார்கள்? விடுதலைப் புலிகள் விரும்பி ஆயுதம் ஏந்தவில்லை. காலம் அவர்கள் கைகளில் ஆயுதங்களைக் கையளித்தது. சிங்கள இனவாத சிந்தனைகளால் விரக்தியடைந்திருந்த எங்களது இளைஞர்கள் கைகளில் இந்தியா ஆயுதங்களைக் கைகளில்’ வழங்கியது.
இந்தியாவின் எதிரிகள் பக்கம் நின்ற சிறிலங்காவை நிர்ப்பந்தம் செய்வதற்காக சிங்கள – தமிழ் முரண்பாட்டை நன்றாகவே பயன்படுத்தியது உங்கள் இந்திய தேசம். எங்கள் கைகளில் ஆயுதங்களை வழங்கி சிங்களத்திற்கு எதிராக எங்களைப் போராட வைத்தது. இளைய வயதான எங்களுக்கு அறிவை விடவும் உணர்வே மேலோங்கி நின்றதனால் எங்களுக்கு இந்திய தேசத்தின் சதி எதுவுமே புரியவில்லை. அப்போதும் எமது தாய்த் தமிழகமே எங்களது அறிவுக் கண்களை மறைத்து நின்றது.
தமிழகத்தை எங்கள் தாயாக நினைத்தோம். நம்பினோம். பிள்ளையை அழ விடுவாளோ தாய்? எங்களை அழிய விடுமோ தமிழகம்? நாங்கள் நம்பியிருந்தோம் எங்களைக் காப்பாற்ற தமிழகம் புயலாக மாறும் என்று. எங்களைக் காப்பாற்ற தமிழகம் எதற்கும் தயாராகுமென்று. ஆனாலும் முத்துக்குமாரனாலும் தமிழகத்தை முழுமையாக எழுச்சி கொள்ள வைக்க முடியவில்லை. எங்களுக்காகப் போராடவும் நீங்கள் சார்ந்திருந்த கட்சியிடம் அனுமதி கோரினீர்கள். எங்களுக்காக அழுவதற்கும் உங்கள் சாதித் தலைமையிடம் உத்தரவு கேட்டுக்கொண்டிருந்தீர்கள்.
நாங்கள் அழியும்போது கண்ணீர் விட்ட நீங்கள் எங்களுக்காக உங்கள் அணிகளை விட்டு விலகிப் போராடத் தயாராகவில்லை.



உங்கள் அணிகளின் தலைவர்கள் ஏற்கனவே சிங்களத்தால் விலைக்கு வாங்கப்பட்டார்கள் என்ற உண்மைகள் உங்களுக்குத் தெரியாமலே போய்விட்டது. நாங்கள் அனாதரவாக்கப்பட்டு, கொலைக்களத்தில் நின்று கொண்டிருந்த வேளையிலும் உங்கள் தலைவர்கள் மனமிரங்க மறுத்துவிட்டார்கள். எங்கள் தேசம் எரிந்துகொண்டிருந்த வேளையில் உங்கள் மன்னர்கள் பிடில் வாசித்துக் கொண்டிருந்தார்கள்.
எங்கள் அழு குரல்களாலும், அபயக் குரல்களாலும் உங்கள் மனங்கள் புண்பட்டுப் போகாமல் உங்கள் தலைவர்கள் தங்களது தொலைக்காட்சி மூலமாக ‘மானாட, மயிலாட’ என்று மயக்கமுறும் காட்சிகளை வாரி வழங்கிப் பாரியையும் தோற்கடித்தார்கள். எங்களது இத்தனை இழப்புக்களுக்கும் யார் காரணம்? எங்களது இத்தனை அழிவுகளுக்கும் எது காரணம்? நாங்கள் உங்களை விட்டு விலக முடியாத கோழைத்தனத்தினால் எங்களை நாங்களே அழித்துக் கொண்டோம். உங்கள் மீதான எங்கள் பிரியத்தினால் இந்திய தேசத்தை எடுத்தெறிய எங்களால் முடியவில்லை.
நீங்கள் எங்களது தொப்பிள்கொடி உறவு என்பதால் நாங்கள் இந்திய தேசத்தால் விலை கூறி விற்கப்பட்டோம். நீங்கள் இந்தியர்களாக இருக்கும்வரை எங்கள் மண்ணில் இரத்த ஆறு ஓடுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நீங்கள் தமிழர்களாக உங்களை உணரும்வரை எங்களது அழிவுகளை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது. நாங்கள் வாழவேண்டும் என்ற ஆசை கூட உங்களது தேசபக்தியினால் சிதைக்கப்பட்டு விட்டது. எங்களை அழ்ப்பதற்காக சிங்கள தேசத்திற்கு அத்தனை உதவிகளையும் வழங்கிய இந்திய காங்கிரஸ் கட்சியை எத்தனை இடங்களில் தோற்கடித்தீர்கள்?
உங்கள் தேசத்தின் நலம் எங்கள் தேசியத்தைக் குலைக்குமானால் நாங்கள் உங்கள் நலனுக்காக எங்களை அழித்துக் கொள்ள இனியும் தயாராகப் போவதில்லை. நீங்கள் உங்கள் சுய சிந்தனையைத் தொலைத்து வெகு காலமாகிவிட்டது என்பதை நாங்களும் அறிவோம். இல்லையேல், அவலக் குரல்கள் எழுப்பியவாறு அபயங்கரம் நீட்டிவாறு உங்களிடம் வந்து சேர்ந்த ஈழ தேசத்தின் ஏதிலிகளை இப்படி அவல வாழ்க்கை வாழ அனுமதித்திருப்பீர்களா? சிங்கள தேசம் போலவே உங்களது அரசும் ஈழத் தமிழர்களை விசாரணைகள் எதுவும் இல்லாமல் ஈனத்தனமாக அடைத்து வைக்க அனுமதித்திருப்பீர்களா?
பாவம், ஈழத் தமிழர்களுக்கு இலங்கைத் தீவும் இந்தியத் தமிழகமும் ஒரே நீதியைத்தான் வழங்குகின்றது. வாழ அனுமதி மறுக்கபட்டுள்ள நாங்கள் இனியும் உங்கள் திசை நோக்கிக் கதறப் போவதில்லை. ஏனென்றால், நீங்கள் இந்தியர்களாக இருந்தே எங்களைத் தமிழர்களாக உணர்கின்றீர்கள். உங்கள் தேச பக்தியும் எங்கள் எதிர்காலமும் எப்போதும் ஒருமித்துப் பயணிக்கப் போவதில்லை. ஆதலால், நாங்கள் முடிவு செய்தே ஆகவேண்டும் உங்களுக்காக நாங்களா? அல்லது, எங்களுக்காக நாங்களா என்பதை.
ஆம்! உங்களுக்காக நாங்கள் இந்திய தேசத்தை நேசித்த காரணத்தால் எங்களுக்கெதிராக சீனாவும், பாக்கிஸ்தானும் சிங்கள தேசத்துடன் கூட்டுச் சேர்ந்தது. இந்திய தேசத்தின் வல்லாதிக்க கனவுக்கு நாங்கள் பலி கொள்ளப்பட்டோம். இந்திய தேசம் எங்களைப் பலிக்கடா ஆக்கிய கணத்தில் இந்தியா – பாக்கிஸ்தான் – சீனா என அத்தனை பகை நாடுகளும் ஒரே திசையில் அணிவகுக்கும் பெரும் பேற்றினைப் பெற்றுக் கொண்டன. பேரறிஞர் அண்ணா அவர்களது தமிழ்த் தேசியக் கனவு கலைஞர் கருணாநிதி அவர்களுக்குப் புரியவில்லையானாலும் அமரர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.
திரையுலகிலும் நாயகனாகவே தன்னை நிலை நிறுத்திய அந்த மாமனிதர் நிகழ் வாழ்விலும் ஈழத் தமிழர்கள் விடுதலை பெற்று வாழ வேண்டும் என்றே பெரு விருப்புற்றிருந்தார். எங்கள் துர்ப்பாக்கியம் ஈழத் தமிழர்களுக்காக எதையும் செய்ய அஞ்சாத அந்த வீரத் திருமகனும் எம்மை விட்டு வெகு சீக்கிரமாக மறைந்துவிட்டார். பாவம், உங்களை எல்லாம் ஆளும் பொறுப்பை நீங்கள் கோழைத் தமிழனான கருணாநிதியிடமல்லவா கொடுத்துவிட்டிர்கள். தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே நேசிக்கத் தெரிந்த கலைஞர் கருணாநிதியிடம் எங்கள் அவலங்கள் எடுபடுமா?
சங்கத் தமிழையும் விற்றே பழக்கப்பட்டவர் ஈழத் தமிழர்களுக்கும் விலை நிர்ணயம் செய்யமாட்டார் என்று எப்படி நம்பினீர்கள்? நாங்கள் விலைகூறி விற்கப்பட்டோம். இந்திய அரசாலும், தமிழக அரசாலும் நாங்கள் விலை கூறி விற்கப்பட்டோம் என்பதை நீங்கள் அறிவீகளா? நாங்கள் அழிந்து கொண்டிருந்த போதும் கலைஞர் அவர்கள் இரக்கம் காட்டவில்லையே. நாங்கள் இறந்து கொண்டிருந்த வேளையிலும் கலைஞர் அவர்கள் கடிதம்தானே எழுதிக்கொண்டிருந்தார்.
அதை மீறி, அரைநாள் உண்ணாவிரதம் தானே இருந்து சாதனை செய்து எங்கள் வேதனையிலும் அரசியல் ஆதாயம் தேடினார். ஈழத் தமிழர்களின் ஒற்றுமையின்மை பற்றி ஒப்பாரி வைக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் திராவிடர் முன்னேற்றக் கழகத்தை எத்தனை ஒற்றுமையுடன் கட்டிக் காத்தார்? அமரர் எம்.ஜி.ஆர். அவர்களை எப்படிப் பிரிந்து போக அனுமதித்தார்? தி.மு.க.வின் போர் வாளாக அறியப்பட்ட வை.கோ. அவர்களை எப்படி வெளியேற்றினார்?
பலதாரப் பிதாமகர் கருணாநிதி அவர்களுக்கும் அவரது அரசியல் எதிரியான செல்வி ஜெயலலிதா அவர்களுக்கும் இடையே நிகழும் வார்த்தைப் போர் உலகப்பிரசித்தம் கொண்டது என்பதைக் கலைஞர் அறிவாரா? போதும் தமிழகமே! உனக்காக நாங்கள் இந்திய தேசத்தை நம்பியது போதும்! கிழக்கிலும், மேற்கிலும் எதிரிகள் பலம் பெற்ற போதும் தெற்கு வாசலில் உங்களுக்காக நாங்கள் தோத்தது போதும். உங்கள் எதிரி சீனா பாக்கிஸ்தானிலும் வங்காள தேசத்திலும், பூட்டனிலும், நேபாளத்திலும் நிலை கொண்ட போதும் இலங்கைத் தீவில் இன்று எதிர்த் துருவமாக நின்றது நாங்கள் மட்டுமே.
சிங்கள தேசம் சீனாவுக்கு செங்கம்பளம் விரித்த போதும், எங்கள் இந்திய விசுவாசம் அதை எதிர்த்தே நின்றது. இந்தியாவுக்குப் பங்கம் வரக்கூடாது என்பதால்தான் எங்கள் தலைவன் சீனாவை ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது, காலம் கடந்த ஞானம் பெற்றுவிட்டோம். எங்கள் தேசியத் தலைவர் இந்திய ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்ற சிங்கள தேசத்துடன் உடன்பாடு செய்ததைப் போலவே, எங்கள் தேசியத்தையும் எங்கள் தேசத்து மக்களையும் காப்பாற்ற நாங்கள் சீனாவுடனும் சமரசம் செய்ய முடிவு செய்துவிட்டோம்.
உங்களுக்கான எங்கள் அர்ப்பணிப்புக்கள் எங்களுக்கு அழிவை மட்டுமே தந்தது. இப்போது எங்களுக்காக நாங்கள் எடுக்கும் முடிவினால், உங்கள் தேசமும் தேசியமும் சிதைவுறுமானால், அதற்கும் நீங்கள் மட்டுமே காரணம். ஏனென்றால், ஈழத் தமிழர்கள் இதற்கு மேலும் இந்தியத் துரோகங்களைத் தாங்கிச் சகிக்கமாட்டார்கள். தொப்பிள்கொடி உறவு என்ற பேதமையை வைத்து இந்திய அரசால் இனியும் விபச்சாரப் பிழைப்பு நடாத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
- நன்றி்: ஈழநாடு



Source: http://www.meenagam.org/?p=12650#more-12650

Monday, October 5, 2009

கருணாநிதி அல்ல இவன் பெயர் – கருணா(ய்)நிதி இதுதான் மிகவும் பொருத்தம்






தி கிரேட் டிக்டேட்டர் படத்தில் உலக வரைபடத்தை தன் கையில் வைத்துக் கொண்டு குரங்காட்டம் ஆடிக் கொண்டிப்பார் ஹிட்லர். மேதை சாப்ளினின் நடிப்பில் அது அவளவு நகைச்சுவாய இருக்கும். தமிழக முதல்வர் கருணாநிதியின் தற்கால செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும் போது அவரும் தமிழக வரைபடத்தை கையில் வைத்துக் கொண்டு குரங்காட்ட குத்துக்குரணம் ஒன்றை நடத்திக் கொண்டிருப்பது நமக்குப் புரிகிறது.
பலர் கருணாநிதியை மூத்த திராவிட இயக்கத்தலைவர் என்பதால் விமர்சிக்கக் கூடாது என்கிறார்கள். பலர் மௌனமாக கருணாநிதியின் அல்லக்கையாக மாறுவதற்கான தருணத்தைக் எதிர்பாத்துக் காத்திருக்கிறார்கள். கவிஞர்கள், திரைத்துறையினர், தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் என்று பலரும் கருணாநிதியை சகித்துக் கொண்டிருப்பதற்கு இதுவே காரணம்.
ஊழல், அராஜகம். போலீஸ் காட்டாட்சி, ஊழல், சாதி வெறி அரசியல் இதில் எந்த ஒன்றிலும் அதிமுகவிற்கு கருணாநிதி குறைந்தவரல்ல என்று அம்பலப்பட்டுக் கிட்ககும் சூழலில் இந்தியாவிலேயே தமிழகம்தான் அதிக என்கவுண்டர் நடக்கும் மாநிலமாக மாறியிருபப்தை எந்த மனித உரிமை ஆர்வலர்களும் கண்டு கொள்ளவில்லை. காரணம் கருணாநிதி மீதான திராவிடப் பாசம்.
சரி அதெல்லாம் இருக்கட்டும். காஞ்சிபுரத்தில் சமீபத்தில் நடந்த அண்ணாதுறையின் நூற்றாண்டுவிழா மாநாட்டில், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி, தமிழை தேசீய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற மாதிரி தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார் கருணாநிதி. இதே விதமான தீர்மானங்களை திமுக தொடங்கிய காலத்தில் இருந்தே போட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மத்தியில் அரசைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது திமுகாதான். ஈழ மக்கள் போரில் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது அவர்களை காக்க உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதோடு அவர்களின் உயிர்களையே ‘‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’’ என்று கொச்சைப்படுத்தியது போக இறுதிப்போரின் போது மக்கள் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லபப்ட்டுக் கொண்டிருந்த போது குடும்ப சகிதமாக டில்லிக்கு சென்று பதவிக்காக டில்லியிலேயே ஐந்து நாட்களுக்கு மேல் கிடந்தவர்தான் இந்தக் கருணாநிதி.
ஈழத் தமிழர்களுக்குத்தான் எதுவும் செய்யவில்லை,
உள்ளூரிலாவது சுயாட்சிக்கும், தமிழுக்கும் என்ன செய்திருக்கிறார் கருணாநிதி என்று பார்த்தால் கடந்த பல வருடங்களாக தீர்மானம் போட்டிருக்கிறார் என்பதைத் தவிற எதுவுமே செய்யவில்லை.தன் மகள் கனிமொழியை எம்பியாக்கினார். அழகிரியை அமைச்சர் ஆக்கினார். சமீபத்தில் நாடாளுமன்ற அமைச்சர் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் திமுக எம்பிக்களால் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஏண்டா இத்தனை நாள் வைக்காத கோரிக்கையை திடீரென இப்பொ வைக்கிறாங்களே? என்னடா என்று கேட்டால் அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாதாம். அதனால் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் தமிழில் பதில் சொல்ல அனுமதிக்க வேண்டுமாம். என்ன கொடுமையப்பா? இது? அழகிரிக்கு தமிழ் மட்டும் ஒழுங்கா பேசத் தெரியுமா?
ஆனால் கருணாநிதிக்கு சமீபத்தில் விருதுகள் மேல் விருதுகள் வழங்கப்படுகின்றன. எண்பது வயதைக் கடந்து விட்ட இன்னும் இளைஞராகவே இருக்கும் கருணாநிதிக்கு இத்தனை வேகமாக ஏன் இவளவு விருதுகள் வழங்குகிறார்கள் என்று தெரியவில்லை. காஞ்சிபுரம் விழாவில் அவருக்கு அண்ணா விருது வழங்கியிருக்கிறார்கள்.அண்ணா விருது திமுக கட்சியால் வழங்கப்படுகிற விருது. திமுக என்பது கருணாநிதியின் கட்சி அதன் தலைவரும் அவரே, கேள்வியும் நானே பதிலும் நானே என்று தினம் தோறும் அறிக்கை விடுகிற மாதிரி விருது கொடுப்பதும் நானே, பெற்றுக் கொள்வதும் நானே என்று அண்ணா விருது பெற்றிருக்கிறார்.
அடுத்த நாளே திரைப்பட விருதுகளை அறிவித்திருக்கிறார் கருணாநிதி மொத்த விருதுகளையும் தன் திரைத்துறை அல்லக்கைகளுக்கு அள்ளி வழங்கிவிட்டதோடு விடாமல் உளியின் ஓசை என்ற தனது படத்திற்கு தான் எழுதிய வசனத்திற்கு சிறந்த உரையாடல் ஆசிரியர் – மு.கருணாநிதி (உளியின் ஓசை) என்று தானே விருது கொடுத்திருக்கிறார். இந்த விருதுகளிலும் திருஷ்டிப் பொட்டு மாதிரி சா.தமிழ்செல்வனுக்கும் விருது கொடுத்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கமலஹாசனை விட சிறந்த இயக்குநர்கள் வந்து விட்டார்கள், பாலா, அமீர், சசிகுமார், மிஸ்கின், என்று தமிழ் சினிமா பல சாத்தியங்களைக்கொண்டு பலவீனங்களோடு இயங்கிக் கொண்டிருக்க ஸ்கூல் பசங்க மாறுவேடப்போட்ட்டிக்கு வேஷம் கட்டுகிற மாதிரி சிறுபிள்ளைத்தமாக படத்திற்கு படம் கமல் கட்டுகிற மாறுவேடப்போட்டிக்கு விருது கொடுக்கிறார் கருணாநிதி. ஆனால் ஒரு நல்ல கதையை உருவாக்கிய சுபரமணியபுரத்திற்கு உருப்படியான எந்த விருதுகளும்.இல்லை. விருது தொடர்பாக சிறந்த பதிவு இதில் இருக்கிறது படியுங்கள். http://truetamilans.blogspot.com/
அப்பாடா என்று கண்ணைக்கட்டி டிவியை அணைக்கலாம் என்று போனால் அடுத்த செய்தி. கருணாநிதிக்கு உலக சாதனையாளர் விருதாம் வழங்க இருப்பவர்கள் சினிமா தொழில்நுட்பக்கலைஞர்கள். இப்போ தெரிகிறதா? ஹிட்லர் கையில் இருந்த உலக வரைபடம் கருணாநிதி கையில் என்னவாக இருக்கிறது என்று.
அதிமுகவில் இருந்து வந்த ஒரு கூட்டத்தினரை வரவேற்றுப் பேசும் போது சொல்கிறார் ‘’நமது சாதனைகளைப் பார்த்து தமிழக மக்கள் பூரித்துப் போயிருக்கிறார்களாம்” ஆமாம் கருணாநிதியின் ஆட்சியில் மக்கள் பூரித்த பூரிப்பில்தான் ஆங்காங்கே வகைதொகையில்லாமல் கொலைகள் விழுகின்றன. சில அரசியல் படுகொலைகளில் கொலை செய்தவர்களும் போலீஸ் நிலையத்திலேயே இறந்து போய் விடுகிறார்கள்.
இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் பஞ்சாலை தொழிலாளர்கள் வேலையிழந்து பட்டினியால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழக கிராம மக்கள் பாரம்பரீய விவாசயத்துக்கு விடை கொடுத்து விட்டு நகரங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். கிராமத்து மக்கள் பல வெளிமாநிலங்களின் கல்குவாரிகளில் கொத்தடிமைகளாக இருக்க தமிழகமே மகிச்சியில் பூரித்திருக்கிறது என்று இவரே பூரித்துக் கொள்கிறார்.
ஜெயலலிதாவை மேரி மாதாவோடு ஒப்பிட்டு விளம்பரத் தட்டி வைத்த போது சிறுபான்மை கிறிஸ்தவர்களை தூண்டி விட்டு அதை பெரிய கலவரமாக மாற்றத் துடித்தவர் கருணாநிதி. ஆனால் கடவுள் மறுப்புப் கொள்கையே தனது கட்சி,குடும்ப ( ஆழ்வார்பேட்டைம், கோபாலபுரம், இரு குடும்பங்களின்) கொள்கை என்று தம்பட்டம் அடித்துக் கொண்ட கருணாநிதியின் மகன் ஸ்டாலினின் மகன் கட்அவுட் தமிழ் கடவுள் முருகனைப் போல சித்தரித்து வைக்கப்பட்டுள்ளது. வீரமணி ஒரு வேளை புது வியாக்கினாம் இதற்குக் கொடுக்கலாம். மேரி மாதாவோடு ஜேவை ஒப்பிட்டது தவறு என்றால் முருகவோடு ஸ்டாலினை ஒப்பிட்ட திமுகவை எதைக் கொண்டு வரவேற்பது எனத் தெரியவில்லை.கடவுளில் என்னடா? தமிழ் கடவுள் இங்கிலீஷ் கடவுள்?
இபப்டியான கூத்துக்கள் எவளவோ கருணாநிதியின் ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. சிறுபான்மையின்ரரின் ஆதரவாளர், திராவிட இயக்கத்தின் கடைசித் தூண், தமிழகத்தில் இருக்கும் ஒரே கம்யூனிஸ்ட் இப்படி எல்லாம் கருணாநிதிக்கு முகம் உண்டு.
ஆனால் முற்போக்குச் சக்திகளை ஒடுக்கியது, ஈழ ஆதரவுப் போராட்டங்களை புலி ஆதரவுப் போராட்டங்களாக சித்தரித்து அவர்களை அடக்கி ஒடுக்கியது, கடைசி நேரத்தில் ஈழ மக்களுக்கு துரோகம் செய்தது எல்லாம் போக சிறுபான்மை மக்களையும், இடதுசாரிகளையும் கூட வாய்ப்பு வரும் போதெல்லாம் கழுத்தறுத்தவர்தான் இந்த கருணாநி.இதற்கு எத்தனையோ உதாரணங்களை வரலாற்றில் இருந்து சொல்ல முடியும்.
ஆனால் அவருக்கு இருக்கும் முற்போக்கு முகங்களில் எந்த ஒன்றை வைத்தேனும் இன்றைய கருணாநிதியை அளவிட்டுப் பாருங்கள். தன் பதவிக்கும், ஆட்சிகும் ஆபத்து வரும் என்றால் எத்தகைய இழிவான செயலையும் செய்யத் தயங்காத கருணாநிதியின் இன்றைய வருத்தமெல்லாம் உலக்த் தமிழர்களின் தலைவர் பதவி பறிபோய் விட்டதே என்ற கவலைதான்.

Source: http://www.nerudal.com/nerudal.10600.html

Friday, October 2, 2009

இந்தியத் துரோகத்தால் நாம் இழந்தது போதும்!

தன்னிடம் ஒடுங்க மறுத்த சிறீலங்காவை அடிபணிய வைக்கும் மந்திரக் கோலாகவே ஈழத் தமிழர்களது பிரச்சினையை இந்தியா பயன்படுத்தியுள்ளது. இந்தியாவின் துரோகத்தால் நாம் இழந்தது போதும். இந்தியாவை நம்பி நாம் அழிந்தது போதும். இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
‘எதிரிகளிலும் பார்க்க துரோகிகளே அதிக ஆபத்தானவர்கள்’ என்பது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது தீர்க்கமான கருத்து. தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிரிகளால் பலவீனமுற்றது என்பதிலும் பார்க்க, துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிதைவுற்றது என்பதே உண்மை.
இப்போது ஈழத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே தேர்வு எதிரிகளுடன் சமரசம் செய்து கொள்வதா? அல்லது துரோகிகளுடன் கூட்டுச் சேர்வதா என்பதே.
‘அமைதிப்படை’ என்ற பெயரோடு தமிழீழ மண்ணில் கால் பதித்த இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் துரோகத்திற்கு முதல் களப்பலியானவர் லெப். கேர்ணல் திலீபன் அவர்கள். காந்திய மொழியில் இந்தியத் தவறுகளை எடுத்துரைக்க அதே காந்திய பாதையில் பயணித்து, உண்ணா நோன்பிருந்து கேர்ணல் திலீபன் அவர்கள் தன் உயிரைத் தமிழீழ இலட்சியத்திற்காக அர்ப்பணித்தார். தொடர்ந்து, குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் இந்தியத் துரோகத்தால் பலியானபோது விடுதலைப் புலிகள் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராகப் போராட முடிவு செய்தார்கள். அப்போதும் அவர்களுக்கு இதே விதமான குழப்பம் உருவாகியது.
சிங்கள எதிரிகளா? இந்தியத் துரோகிகளா? என்று தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் எதிரியுடன் சமரசம் செய்து கொண்டு துரோகியை எதிர்க்கும் முடிவை எடுத்தார். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் அனுமதிக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் பிரசன்னம் சிங்கள மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெறவில்லை. தெற்காசிய நாடுகளின் தாதாவாகத் தன்னை நிலைநிறுத்த முணலும் இந்தியாவின் அணுகுமுறை சிங்கள இனவாதிகளுக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. இதனை விடுதலைப் புலிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தீர்மானித்தார்கள்.
பிரேமதாஸ தலைமையிலான சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இந்தியப் படைகளை இலங்கையிலிருந்து வெளியேற்ற விரும்பிய பிரேமதாஸ விடுதலைப் புலிகளுக்கு வேண்டிய அனைத்து வளங்களையும் அள்ளி வழங்கினார். இந்திய இராணுவம் பலத்த இழப்புக்களுடன் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியது. தமிழீழத் தேசியத் தலைவரது ‘எதிரியைப் பின்னர் பார்த்துக்கொள்வோம்’ என்ற தத்துவம் மீண்டும் அரங்கேறியது. இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் விடுதலைபர் புலிகளை அழித்து விடலாம் என்ற பிரேமதாஸவின் கனவு கனவாகவே நிலைபெற, பிரேமதாஸ விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டார்.
தமிழீழத் தேசியத் தலைவரது வார்த்தையும் செயலும் ஒன்றாகவே இருந்தது. துரோகிகள் விரட்டப்பட்டார்கள். எதிரியின் முக்கிய தலைவன் காவு கொள்ளப்பட்டான். கருணா என்ற துரோகி வீழ்த்தப்படாததாலேயே தமிழீழத்தின் இராணுவம் சிதைக்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடலாகாது.இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கக் கனவுக்கு பல்லாயிரக்கணக்கான தமிழாகளையும், தமிழீழக் கனவோடு போராடிய விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பையும் பலி கொடுத்தாகிவிட்டது. இனிமேலாவது தமிழீழ மக்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.
சிங்களக் கொடூரங்களிலிருந்து விடுதலை பெற்ற இனமாக ஈழத் தமிழர்கள் வாழ்வதை இந்திய அரசு அனுமதிக்கப் போவதில்லை. இந்தியச் சதிக்கும், சிங்களக் கொடூரங்களுக்கும் இடையே ஈழத் தமிழர்களது உயிர்வாழ்தல் என்பது சாத்தியமே இல்லாதது. இத்தனை இன அழிப்பிற்கும், இத்தனை துயரங்களுக்கும், இத்தனை இழப்புக்களுக்கும் பின்னரும் ‘சிங்கள தேசத்துடன் சேர்ந்து வாழ்’ என்ற சாத்தானின் வேதம் இலங்கைத் தீவில் தமிழர்களை முற்றாகவே அழிக்கும் நிலையையே உருவாக்கும்.
ஈழத் தமிழர்கள் எப்போதுமே இந்திய நலனுடன் சேர்த்தே தமது விருப்பங்களை நிறைவேற்ற எண்ணியதன் விழைவாக பல பிராந்திய நாடுகளின் ஆதரவையும் அனுதாபத்தையும் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டார்கள். ஈழத் தமிழர்களை இந்திய உதிரிகளாகக் கருதிய சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தமது இந்திய எதிர்ப்பு நிலைக்குள் ஈழத் தமிழர்களையும் அடக்கி விட்டதனால் சிங்கள தேசத்தின் பக்கம் அவர்களும் நின்று கொண்டார்கள். இந்த நிலை மாற்றம் பெறாத வரை ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை இலங்கைத் தீவில் நிலைநிறுத்தப்படப் போவதில்லை. மாறாக, இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கக் கனவுக்காக ஈழத் தமிழர்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டு இலங்கைத் தீவில் இல்லாமலேயே போய்விடுவார்கள்.
ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், ‘நீங்கள் வவுனியா தடை முகாம் ஒன்றினுள் அடைக்கப்பட்டவராக இருந்தால், வெளியே வரும் சூழலில் என்ன செய்வீர்கள்?’. நிச்சயமாக இலங்கைத் தீவிலிருந்து வெளியேறி, எங்கேயாவது கரை ஒதுங்கவே முயற்சி செய்வீர்கள். அல்லது, வெட்கத்தை விட்டாவது கடல் கடந்து தமிழகம் செல்ல முற்படுவீர்கள். இதுதான் மனித யதார்த்தம். அப்படியாயின், தமிழீழம் நிரந்தர கனவாகவே புலம்பெயர் தேசங்களில் நிலைத்து விடும்.
இந்த நிலையை மாற்ற வேண்டுமானால், புலம்பெயர் தேசத்து மக்கள் தாம் வாழும் நாடுகளின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பும் போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். மேற்குலக நாடுகள் கடந்தகாலத்தின் தவறான கணிப்புக்களைத் திருத்தி, தமிழீழ மக்களுக்கு நீதி வழங்கத் தவறினால், எமது வாழ்வைத் தனது பிராந்திய நலனுக்காகப் பலி கொள்ளும் இந்தியாவை விட்டு விலகி, அதன் எதிர்த் துருவமான சீனாவின் பக்கம் ஈழத் தமிழர்கள் முழுமையாகச் சாயவேண்டும்.
இந்தியாவின் பக்கம் நின்று நாம் இழந்தது போதும். இந்தியாவை நம்பி நாம் அழிந்தது போதும். இந்தியாவின் சிதைவில்தான் தமிழீழம் மலருமானால், அதற்காகவேனும் நாம் சீனாவின் பக்கம் நின்றேதான் ஆகவேண்டும். இந்திய புராணம் பாடி, ஈழத் தமிழர்களுக்கு மகுடி ஊதும் பலரும் ஈழத் தமிழர்களின் அத்தனை துயரங்களுக்கும் இந்தியாவே காரணம் என்பதை வசதியாக மறந்து விடுகின்றார்கள். தன்னிடம் ஒடுங்க மறுத்த சிறிலங்காவை அடிபணிய வைக்கும் மந்திரக் கோலாகவே ஈழத் தமிழர்களது பிரச்சினையை இந்தியா பயன்படுத்தியுள்ளது. இன்றும் சிறிலங்காவைக் குளிர்வித்துக் காரியமாற்ற ஈழத் தமிழர்களைப் பலிக்கடா ஆக்குவதற்கு இந்தியா தயங்கப் போவதில்லை. இந்தியத் துரேகம் இன்றுடன் முடிவுறப் போவதில்லை. இதிலிருந்து விடுபடுவதே ஈழத் தமிழர்களுக்கிருக்கும் மிகப் பெரிய சவாலாகும்.
‘எதிரிகளிலும் பார்க்க துரோகிகள் ஆபத்தானவர்கள்’ இது தேசியத் தலைவர் அவர்களது வார்த்தை.
நன்றி:
சி. பாலச்சந்திரன்ஆசிரியர் (பாரிஸ் ஈழநாடு)
Source: http://tamilthesiyam.blogspot.com/2009/10/blog-post_7038.html

Wednesday, September 30, 2009

சுருட்டல் மன்னன் கருணாநிதி








ஐயா கலைஞர் அவர்களே…இதோ உங்கள் சொத்து...பட்டியல்..



எங்களுக்கு தெரிந்த வரை தனக்கு தானே எழுதிக் கொண்ட நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பக்கம் 80 ல் கூறியிருப்பதை பார்க்கலாம்.



*1944 ம் ஆண்டு எனக்கும், பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற்றது. ஓராண்டு காலம் வரையில் வாழ்க்கையின் சுவைபடலம் பேரானந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. எனக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லை. இதனால், மனஅமைதி குறைய தலைப்பட்டது. இப்படியே வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்தால், வாழும் காலம் எப்படி போய் முடிவது? என்ற கேள்விகள் எல்லா பக்கங்களிலிருந்தும் கிளம்பின. ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் வேலை தேடி அலைந்தேன். வாழ்வதற்கு என்ன வழி என்று தீவிரமாக யோசிக்க தொடங்கினேன். அதன் விளைவு நாடக நடிகனாக ஆனேன்.இவ்வாறு தனது புத்தகத்தில் எழுதியிருக்கிறார் கருணாநிதி.



கருணாநிதியின் பக்கம் 81,82 ல்…………..



*விழுப்புரத்தில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தோம். அங்கு அறைகுறையாக உணவு கிடைக்கும். குளிப்பது என்பது அங்கு மிகவும் பெரிய பிரச்சனை. நாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து குளிக்க வேண்டுமென்றால், 1 கிமீட்டர் தூரமாவது செல்ல வேண்டும். வயலுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் இடங்களில் தான் எங்களது குளியல். அந்த குழாய் தான் எங்களுக்கு குற்றால அருவி. குடிநீர் எல்லாம். குளித்து விட்டு வீட்டுக்கு கிளம்புவோம். கடுமையான வெயில் கொளுத்தும். சிறிய துண்டை இடையில் கட்டிக் கொண்டு, துவைத்த சட்டையை தோளில் உலரப் போட்டுக் கொண்டு சவுக்கார சோப்பினால் வெண்மையாக மாற்றப்பட்ட வேட்டியை, இரு கைகளாலும் தலைக்கு மேலே குடை போல பிடித்துக் கொண்டு அதனை உலர வைத்தவாறு வீட்டிற்கு வந்து உலர்ந்த பின் அவற்றை அணிந்து கொண்டு பிற்பகல் உணவிற்கு தவமிருப்போம்.



இதற்கடுத்து, 92,93 ம் பக்கங்களில்…………….



* பெரியாரின் ஈரோட்டு குடியரசு பத்திரிகை அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மாதம் சம்பளம் 40 ரூபாய். அதிலும் பிற்பகலும், இரவும் பெரியார் வீட்டில் சாப்பிடுவதற்காக இருபது ரூபாய் பிடித்துக் கொள்வார்கள். காலை, மாலை சிற்றுண்டிக்காக மாதம் 10 ரூபாய் போய் விடும். எனது இதர செலவுகள் ஐந்து ரூபாய். மீதம் 5 ரூபாயை தான் என்னை நம்பி அண்டி வந்த அருமை மனைவி பதமாவதிக்கு மாதந்தோறும் திருவாரூக்கு மணியார்டர் செய்வேன்.



பக்கம் 92,93 ல்…………………………



* பெரிய அளவில் வைத்திய உதவிகளை எனது தந்தையாருக்கு செய்ய வசதியான நிலையில் குடும்பம் இல்லை. என் தந்தை இறந்து விட்டார்.இப்படி கருணாநிதி எழுதிவைத்துள்ளார்.



இன்றைக்கு கருணாநிதி குடும்பத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?1.கருணாநிதியின் கோபாலபுரம் வீடு



2. முரசொலி மாறனின் வீடு-கோபாலபுரம்



3. கிருஷ்ணன் கோவில் அருகில்-உறவினர்களின் வீடு



4. முரசொலி செல்வம், செல்வி வீடு- கோபாலபுரம் ( கருணாநிதியால் கொடுக்கப்பட்டது)



5. மு.க.முத்து வீடு-கோபாலபுரம்



6. ஸ்வர்ணம் வீடு- கோபாலபுரம்



7. அமிர்தம் வீடு- கோபாலபுரம்



8. எழிலரசி வீடு ( முரசொலி செல்வத்தின் மகள்) -கோபாலபுரம்



9.ஆலிவர் சாலையில் ராஜாத்தி அம்மாள் வீடு



10. மு.க.ஸ்டாலின் வீடு- வேளச்சேரி



11. உதயாநிதி பொழுது போக்கு வீடு- ஸ்னோபவுலிங்- நுங்கம்பாக்கம்



12. உதயநிதி தீம்பார்க்- (மாமல்லபுரம் அருகில்)



13. பில்லியர்ட்ஸ் மையம் ( வேளச்சேரி)



14. கலாநிதி மாறன் வீடு (அடையாறு போட்கிளப் ரோடு)



15. தயாநிதி மாறன் வீடு



16. டிஸ்கோ- குவாலிட்டி இன் அருணா, அமைந்தகரை



17. கொட்டி வாக்கத்தில் மாறனின் பண்ணை வீடு



18. டிஸ்கோ- எத்திராஜ் காலேஜ் எதிரில்



19. டெலிபோன் எக்சேஞ்ச் கட்டிடம் -நீலாங்கரை



20. எம்.எஸ் இன்டஸ்ட்ரீஸ்- ராமச்சந்திரா மருத்துவக்கல்லூரி போரூர் அருகில்



21. முரசொலி கட்டிடம்- அண்ணாசாலை



22. சுமங்கலி கேபிள் கட்டிடம்- கோடம்பாக்கம் மேம்பாலம்



23. ராஜா அண்ணாமலை புரம் எம். ஆர்.சி நகரில் சன் தொலைக்காட்சிக்காக 32 கிரவுண்ட் நிலம்



25. சன்டிவியின் புதிய அப்-லிங்க் ஸ்டேசன்( கோடம்பாக்கம்)- மாதவன் நாயர் காலணி



26. இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு, சிமிண்ட் விலையை உயர்த்துவதற்காக



27. கோரமண்டல் சிமிண்ட் ஏற்படுத்தப்பட்டது



28. கூன் ஹுண்டாய்- அம்பத்தூர்- அண்ணாநகர்-அண்ணாசாலை



29. அந்தமான் தீவின் நிலங்கள்



30.அஸ்ஸாம் மாநிலத்தில் டீ, காபி தோட்டங்கள்



31. அம்பானியின் உரத்தொழிற்சாலையில் பங்கு



32. மேற்குவங்காளத்தில் தோல் தொழிற்சாலை



33. ஸ்டெர்லிங் சிவசங்கரனுடன் கூட்டு தொழில்



34. ஆந்திரா பார்டர் சிமெண்ட் ஏற்படுத்தப்பட்டது



35. பெண்டோபர் நிறுவனத்துடன் கூட்டு



36. கேரளாவில் மாமன், மாப்பிள்ளை நிறுவனத்துடன் காப்பி, மற்றும் ரப்பர் தோட்டங்கள்



37. செல்வம் வீடு



38. முக.ஸ்டாலின் சொத்துக்கள்



39. கருணாநிதி சொத்துக்கள்- திருவாரூர், காட்டூர், திருகுவளை.



40.முக.அழகிரி- மதுரை, திண்டுக்கல், கொடைக்கானல், மேலூர் சொத்துக்கள், மதுரை நகரின் வீடியே பார்லர்கள், கடைகள், ஸ்கேன் சென்டர்கள் உள்ளிட்ட பண்ணை வீடுகள்



41. செல்வம் வீடு-பெங்களுர்



42. உதயா டிவி இணைப்பு- பெங்களூர்



43. பூங்சி டிரஸ்ஸஸ்- பீட்டர்ஸ் சாலை



44.முக.தமிழரசன்- ரெயின்போ பிரிண்டர்ஸ், இந்திரா கார்டன்- சென்னை பீட்டர்ஸ் சாலை.



45. முக.தமிழரசன்- அந்தியூரில் உள்ள சொத்துக்கள்



46. தலைப்பாக்கடடு பிரியாணி சென்டர்- தி.நகர், ஜி.என்.செட்டி சாலை, சென்னை.



47. கோவையில் உள்ள டிபார்ட்மெண்டல் ஸ்டோர்



48. மல்லிகா மாறனின் உறவினர்களின் பெயரில் கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் சென்னையில் சொத்துக்கள்.இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள் சேர்க்கப்படவில்லை.



TOTAL VALUE OF ASSETS ARE ESTIMATED AROUND RS 37,000 CRORES.

திருவாரூரில் இருந்து கட்டிய வேட்டியும், தோளில் போட்ட துண்டுடன் , சென்னை நகருக்கு கள்ள ரயில் ஏறிவந்த கருணாநிதி குடும்பம் இன்று இந்திய பணக்காரர்கள் பட்டியலில்.





Monday, September 28, 2009

இலங்கையில் போர் நடந்த காலம் இந்திய ஊடகத் துறையின் இருண்ட காலம்

தமிழக ஊடகவியலாளர் கவிதா என்பவர் சில மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஊடகங்களின் நிலைமை, மனித
உரிமைகள் போன்றவற்றைக் கண்டறிந்திருந்தார்.
அவர் இப்போது தமிழகத்தின் "காலச்சுவடு" இணையச் சஞ்சிகைக்கு இலங்கையின் நிலை குறித்தும், இலங்கை நிலைப்பாட்டில் இந்திய ஊடகங்களின் பங்களிப்புக் குறித்தும் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வரைந்திருக்கிறார்.
அது இங்கு மீள்பிரசுரமாகின்றது.
ஒர் ஊடகவியலாளராக, குறிப்பாக ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் பணிபுரியும் ஊடகவியலாளராக, இங்கு நின்று பேசுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை. இருந்தாலும் எனக்கும் சொல்ல சில விடயங்கள் இருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை இந்திய ஊடகங்களின் மொழி குறிப்பாகத் தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வரும் ஊடகங்களின் மொழி சில வார்த்தைகளுக்குள் சுருங்கிவிட்டது.
புலி எதிர்ப்பு அல்லது புலி ஆதரவு என்று சுருங்கிவிட்ட மொழியைக் கொண்டு, அதனடிப்படையிலும் அந்தப் பின்னணியிலும் பெரும்பாலான ஊடகங்கள் செயற்படுகின்றன
.பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைகளுக்குப் புலி ஆதரவுநிலை என்பது ஒரு வியாபார உத்தி. பிரபாகரனின் மரணத்தைச் இலங்கை அரசு அறிவித்த பிறகு வந்த ஒரு தமிழ்ப் பத்திரிகை தனது மரணம் குறித்த செய்தியைப் பிரபாகரன் பார்த்துக்கொண்டிருப்பது போல ஒரு புகைப்படத்தை அட்டையில் வெளியிட்டது. அந்தப் பத்திரிகை விற்பனை செய்யப்பட்டது; மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கினார்கள். சில மாதங்களுக்கு முன்பு இலங்கையைப் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் என்னுடன் கலந்துகொண்ட தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் பிரபாகரனின் படத்தை அட்டையில்போட்டால் அந்த இதழ் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பிரதிகள் கூடுதலாக விற்பனையாகின்றது என அந்த அரங்கில் சொன்னார். அப்போது போர் முடிந்திருக்கவில்லை. பிரபாகரன் இறந்திருக்கவில்லை. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது இன்றைய சூழலில் பிரபாகரனுக்கே அதிகம் பொருந்தும். இதனால் என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம். பிரபாகரன் குறித்த செய்திக்குப் பின்னால் இருக்கும் வணிக சாத்தியங்கள் இத்தகைய செய்திகளை ஊக்குவிக்கும் சக்தியாக மாற்றக்கூடிய அவலம்தான் இதில் பிரச்சினை. வணிக நிலை ஒரு புறம் இருக்க, தமிழ்ப் பத்திரிகைகளின் பொதுவான புலி ஆதரவு நிலையும் சரி, ஆங்கில ஊடகங்களின் பொதுவான புலி எதிர்ப்பு நிலையும் சரி ஈழத்தின் உண்மைகளிடமிருந்து, மக்களிடமிருந்து வெகுவாக விலகியிருந்தன என்பது மேலும் தீவிரமான பிரச்சினை.
பல வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்காக எழும்பிய தன்னெழுச்சியான ஆதரவை இப்படிப்பட்ட எதிரெதிர் நிலைகள் கலைத்துப் போட்டுவிட்டன என எனக்குத் தோன்றுகிறது. இலங்கையில் இருந்த தமிழர்கள் படும் அசலான துயரங்களை சொல்லப்போனால் இலங்கையில் தமிழனாக இருப்பதே துயரம் என்று இன்றும் தொடரும் நிலையை பெரும்பாலான ஊடகங்கள் கணக்கிலெடுக்கவில்லை கவனப்படுத்தவுமில்லை. அவர்களுக்குத் தேவை ஒரு பிரதிநிதி. அவர்களது அரசியல் மற்றும் வியாபார உத்திகளுக்கு ஏற்றாற்போல அந்தப் பிரதிநிதியை கதாநாயகனாகவோ வில்லனாகவோ முன்னிறுத்திக்கொள்கிறார்கள். இதற்கான எதிர்வினையை நான் தமிழகத் தேர்தல் குறித்த செய்தி சேகரிப்புக்காகச் சென்ற பல கிராமங்களில் பார்க்க முடிந்தது. பல இடங்களில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு இருந்தது. ஆனால் அதை வைத்து வாக்குகளைத் தீர்மானிப்பதில் மக்களுக்குச் சிக்கல் இருந்தது. அது வேறு, இது வேறு என்பதே அவர்களது மனோபாவமாக இருந்தது. சிதம்பரத்தை அவர் தொகுதிக்குள் செய்யாமல்விட்ட விடயங்களுக்காகத் தோற்கடிப்போம், மற்றபடி அவரது ஈழ நிலைப்பாடு பற்றி எங்களுக்குப் பெரிய அக்கறை இல்லை என்று சிவகங்கையில் நான் பேட்டி கண்ட மக்கள் சொன்னார்கள். ஈழத் தமிழரின் துயரங்களைச் சரியான மொழியில், சரியான முறையில் மக்களிடம் எடுத்துச் செல்லாதது ஊடகங்கள் செய்த மிகப் பெரிய தவறு. ஒரு பத்திரிகையாளர் என்ற காரணத்தால் பெரும்பாலான பத்திரிகைகளைப் படித்துவிடுவேன். ஆனால் கடந்த நவம்பரில் இலங்கைக்குச் செல்லும்வரை அங்கு வெள்ளை வான் கடத்தல்கள் நடப்பது எனக்குத் தெரியாது. புலிகளாக இருக்கக்கூடும் என்று கருதப்படும் அப்பாவி இளைஞர்கள் இலங்கை அரசாலும் துணை இராணுவத்தினராலும் வெள்ளை வான்கள் மூலமாகக் கடத்தப்படுகிறார்கள். வெள்ளை வான் என்பதற்கு இலங்கை அதிகார வர்க்கத்தின் அகராதியில் பல அர்த்தங்கள் உண்டு. சக்கரங்களின் மீது பயணிக்கும் பயங்கரவாதம், மரணம், காணாமல் போவது என்று பல அர்த்தங்கள். போர் புலிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல 2005ஆம் ஆண்டிலிருந்து கடந்த நவம்பர் வரை இலங்கை முழுவதும் கிட்டத்தட்ட 3 ஆயிரம் இளைஞர்கள் அப்படிக் காணாமல் போயிருக்கிறார்கள். கொழும்பில் மட்டும் 300 இளைஞர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். இங்கு நமது ஆங்கில ஊடகங்கள் கட்டமைத்துக்கொண்டிருப்பது போல இலங்கையில் நடந்தது புலிகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல, தமிழர்களுக்கு எதிரான போர். அதிலும் அந்தப் போரில் பாதிக்கப்பட்டது, வடக்கிலிருந்த தமிழர்கள் மட்டுமல்ல, கிழக்கிலும் கொழும்பிலும் இருந்த தமிழர்களுக்கும் எதிராகவும் அந்தப் போர் நடந்தது. இந்த விடயத்தைக் கொழும்புக்கு நேரில் செல்லும்வரை என்னால் உணர முடியவில்லை. தமிழ்நாட்டிலிருந்து வரும் எந்த ஊடகமும் இது பற்றி எழுதவில்லை. கொழும்பிலேயே தன் செய்தியாளரை வைத்திருக்கும் "த இந்து" உட்பட எந்த இந்திய ஆங்கில ஊடகத்திற்கும் அரச பயங்கரவாதத்தின் இத்தகைய முகம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அதை அவர்கள் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்தார்கள். இராணுவம் தந்த செய்திகளை மீள்பிரசுரம் செய்துகொண்டிருப்பவர்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்கவும் முடியாது. நடந்து முடிந்த போரில் வெற்றி அல்லது தோல்வி குறித்த மயக்கங்களில் அவரவர் அரசியலுக்கு ஏற்பப் பத்திரிகையாளர்களும் சிக்கிக் கொண்டுவிட்டார்கள். இந்தப் போரின் அவலங்களை மனித உரிமைப் பிரச்சினைகளாகப் பார்க்கவும் சொல்லவும் இந்தியப் பத்திரிகைகள் தவறிவிட்டன.
குறிப்பாக மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்லிக்கொள்ளும் "த இந்து" போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள் செய்த இமாலயத் தவறு அதுவாகும்."த இந்து" வைப் பொறுத்தவரை போர் நடந்து கொண்டிருந்தால் அரசு Zero Civilian Casuality (பொதுமக்களில் யாருக்கும் உயிர்ச் சேதம் நிகழாத) கொள்கையைக் கடைபிடிக்கிறது என்று அர்த்தம். பொதுமக்கள் சிறிதும் பாதிப்படையாத ஒரு போர் என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிடுகிறது. போர் முடிந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டாலும் அது பத்திரிகை ஆசிரியர் ராமைப் பொறுத்தவரை Low intensity conflict (தீவிரம் மட்டாக இருக்கும் போர்).சமீபத்தில் வவுனியா முகாம் சென்று மூன்று மணிநேரம் இருந்து திரும்பிவந்துவிட்டு அது ஒரு மேன்மையான அனுபவம் என்று எழுதியிருந்த ராம். அந்தச் சமயத்தில் இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒரு பேட்டி எடுத்திருந்தார். மூன்று பகுதிகளாக அந்தப் பேட்டி வெளியானது.
அந்தப் பேட்டியில் குறிப்பிட்ட சில விடயங்களை மட்டும் இங்கு உதாரணம் காட்ட விரும்புகிறேன். குறிப்பாக, கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் கொல்லப்பட்ட "த சண்டே லீடர்" பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவைப் பற்றி ராம் எழுப்பிய கேள்விகள். ராம்: இலங்கையில் பத்திரிகையாளர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் நெருக்கடிகள் பற்றியும் சர்வதேச அளவில் கவலை எழுப்பப்பட்டது. இவர்களில் சிலர் உங்களுடைய நண்பர்கள். குறிப்பாக லசந்த விக்ரமதுங்க. அவர் 2009 ஜனவரியில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜூன் மாதம் பெண் பத்திரிகையாளரான கிருஷ்ணி இஃபான் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, பல மணிநேரம் விசாரிக்கப்பட்டு, பிறகு கண்டியில் விடுவிக்கப்பட்டார். ஜனாதிபதி மஹிந்த: இவையெல்லாம் வேண்டுமென்றே உருவாக்கப்படுகின்றன. நீங்கள் தெருவில் யாருடனாவது சண்டைபோடுகிறீர்கள்; அந்த மனிதர் உங்களை அடித்துவிட்டால், அதற்கு அரசு பொறுப்பேற்க முடியுமா? பத்திரிகையாளர்கள் எங்களுக்கு எதிராக இருந்தால்கூட நாங்கள் அவர்களுக்கு எதிராக எதையும் செய்யவில்லை. உதாரணமாக, ஒரு தமிழ் நாளிதழின் உரிமையாளரும், ஆசிரியரும் புலிகளை ஆதரிப்பதற்கான சாட்சியங்கள் எங்களுக்குக் கிடைத்தன. ஆனால் நாங்கள் அவர்களைப் பத்திரிகையாளர்களாகத்தான் நடத்தினோம். லசந்த என் நண்பர்தான். அவ்வப்போது வந்து என்னைச் சந்திப்பார். நிறைய விடயங்களைப் பற்றிச் சொல்வார். என் கட்சியில் நடக்கும் விடயங்களையெல்லாம் கூடச் சொல்வார். அதிகாலை இரண்டு மணிக்குக்கூட வருவார். பிறகு என் வண்டியில் அவரைக் கொண்டுவிடச் சொல்வேன். ராம்: கடைசியாக அவர் உங்களுக்குத்தான் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டாரா?ஜனாதிபதி மஹிந்த: ஆமாம். ஆனால் நான் அந்த நேரத்தில் பிரார்த்தனையில் இருந்தேன். நான் வெளியில் இருந்திருந்தால் தொலைபேசியை என்னிடம் கொடுத்திருப்பார்கள். பிறகு, என் பாதுகாவலர்களிடம் மிகவும் கோபித்துக்கொண்டேன்.லசந்த விக்ரமதுங்க இறப்பதற்கு முன்பு எழுதிய ஒரு தலையங்கம் அவர் இறந்த பிறகு "த சண்டே லீடரில்" வெளியானது. பரபரப்பைக் கிளப்பிய அந்த தலையங்கத்தை ராமும் படித்திருப்பார். அதன் பிறகும் இப்படிப்பட்ட தட்டையான கேள்விகளை அவரால் எப்படிக் கேட்க முடிந்தது என்று புரியவில்லை. அந்த தலையங்கத்திலிருந்து சில வரிகளை மட்டும் இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். "தனது சொந்த மக்களைத் தொடர்ந்து குண்டுவீசிக் கொல்லும் ஒரே நாடு இலங்கைதான் என்ற எங்களது அதிர்ச்சியை நாங்கள் ஒருபோதும் மறைத்ததில்லை. நான் இரண்டுமுறை கொடுமையாகத் தாக்கப்பட்டேன் என்பது பரவலாக அறியப்பட்ட செய்தி. ஒருமுறை எனது வீட்டின் மீது எந்திரத் துப்பாக்கி குண்டு மழை பொழிந்தது. அரசின் உத்தரவாதங்கள் இருந்தாலும் இந்தத் தாக்குதல்களை நடத்தியவர்கள் பற்றி எந்த விசாரணையும் நடக்கவில்லை; அவர்கள் பிடிக்கப்படவும் இல்லை. இந்தத் தாக்குதல்களில் அரசின் கை இருக்கும் என்று நம்புவதற்கு எனக்குக் காரணம் இருக்கிறது. இறுதியாக நான் கொல்லப்படும்போது, அரசுதான் அந்தக் கொலையை நிகழ்த்தியிருக்கும். "ஜனாதிபதி மஹிந்த, என்னுடைய மரணத்தைத் தொடர்ந்து நீங்கள் பொருத்தமான தார்மீகச் சொற்களை உதிர்ப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். பொலிஸ்துறை உடனடி விசாரணை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவீர்கள். ஆனால் நீங்கள் இதற்கு முன்பு உத்தரவிட்ட விசாரணைகளைப் போல இதிலிருந்தும் எந்த உண்மையும் வெளிவரப்போவதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனது மரணத்துக்குப் பின்னால் யார் இருப்பார்கள் என்று நம் இருவருக்குமே தெரியும். ஆனால் அவரது பெயரைச் சொல்லும் தைரியம் இருக்காது. என் உயிர் மட்டுமல்ல உங்கள் பாதுகாப்பும் அந்த மௌத்தில்தான் இருக்கிறது.''லசந்த விக்ரமதுங்க இலங்கையில் மிகவும் மதிக்கப்பட்ட மிக முக்கியமான பத்திரிகையாசிரியர்களில் ஒருவர். இங்கு என். ராம் போல (இப்படிச் சொல்வதற்கு என்னை லசந்தவின் ஆன்மா மன்னிக்கட்டும்). அவர் கொல்லப்பட்டபோது இங்கிருந்த ஊடகவியலாளர்கள் சிலர் இலங்கை அரசுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பத்திரிகை சுதந்திரத்துக்கான முன்னோடியாகப் பல சமயங்களில் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட "த இந்து" விலிருந்து ஒரு பத்திரிகையாளர்கூட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆச்சரியப்படும் விதத்தில் "த இந்து" நடத்திக்கொண்டிருக்கும் "ஏசியன் காலேஜ் ஒவ் ஜெர்னலிஸம்" என்கிற ஊடகவியல் கல்லூரியிலிருந்து 60 மாணவர்கள் வந்திருந்தார்கள். உரத்த குரல்களில் கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்களுடன் வந்த ஒரு பேராசிரியரிடம் எனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன். அவர் சொன்னார்: அவர்கள் இன்னும் ஊடகவியலாளராக மாறவில்லை என்று நான் மிகவும் அவமானமாக உணர்ந்த தருணங்களில் ஒன்று அது.மக்களை விடுங்கள், இலங்கையில் ஊடகங்கள் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு வருவது பரவலாக அறியப்பட்ட விடயம். அங்கு போர் முடிந்த பிறகு புலம்பெயர்ந்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை பத்துக்கும்மேல். காரணம், அவர்களது புகைப்படங்கள் அரசு சார்புத் தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டன போர்க் காலத்தில் துரோகச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்கிற குறிப்புகளுடன். இப்படியொரு செய்தி வெளியான பிறகு அந்தப் பட்டியலில் இருந்தவர்களில் ஒருவரான போத்தல ஜயந்த என்கிற சிங்களப் பத்திரிகையாளர்மீது கொலைவெறித் தாக்குதல் நடந்திருக்கிறது. இலங்கையில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதை இந்திய ஊடகங்கள் கணக்கில் எடுக்கவில்லை இலங்கையில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவது, இந்தியாவில் குறிப்பாக இந்திய ஊடகத் துறையில் எத்தகைய எதிர்வினைகளை ஏற்படுத்திருக்கிறது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. லசந்த விக்ரமதுங்க மரணத்துக்குப் பிறகு ஒரு போராட்டம், வித்தியாதரன் கைதுக்குப் பிறகு ஒரு போராட்டம் என்று இங்கொன்றும் அங்கொன்றுமாகப் போராட்டங்கள் நடந்தன. ஆனால் இலங்கையில் ஊடக சுதந்திரத்தின் மீது மிகத் தீவிரமாக நடந்துவரும் தாக்குதல்கள் இங்குள்ள ஊடகங்களால், குறிப்பாக ஆங்கில ஊடகங்களால் பெரிய அளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இலங்கை ஊடகங்களுக்குத்தான் உயிர்ப் பயம். சர்வதேச ஊடகங்களும் இந்திய ஊடகங்களும் இலங்கைப் பிரச்சினையில் ஏன் மெனம் காக்க வேண்டும்? இந்த விடயத்தில் "த இந்து" வின் இரட்டை நிலைப்பாடு பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். "த இந்து" குழுமத்திலிருந்து வரும் "ஃபிரண்ட் லைன்" என்ற மாதமிருமுறை இதழ் சற்றே ஆழமான செய்திக்கட்டுரைகளை வெளியிட்டு வரும் ஓர் இதழ். மிகவும் குறைவாகவே இது விற்பனையாகிறது. இராணுவம் தந்த செய்திகளை "த இந்து" வில் அப்படியே எழுதும் அப்பத்திரிகையின் இலங்கைச் செய்தியாளர் முரளிதர ரெட்டி, ஃபிரண்ட் லைனில் எழுதுவதை எந்த ரகத்தில் சேர்ப்பதென்று தெரியவில்லை. எந்த முகாமுக்குச் சென்று வந்தது மேன்மையான அனுபவம் என்று ராம் சொன்னாரோ அந்த முகாம் நாஜிகளுக்கான வதை முகாம் போல இருக்கிறது என்று முஸ்லிம் தகவல் மையத்தை மேற்கோள்காட்டி ஃபிரண்ட் லைனில் சொல்கிறார் முரளிதர ரெட்டி. ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதைப் பற்றியும் அதில் அவர் பேசுகிறார். "த இந்து" வைத் தவிர இங்கு வெளிவரும் ஏனைய ஆங்கிலப் பத்திரிகைகள் "த இந்து" வைப் போலத் தீவிரமாகப் புலிகளை எதிர்ப்பதில்லை, இலங்கை அரசின் குரலைப் பிரதிபலிப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் தமிழ் ஈழம், அதன் மக்கள், அவர்களது துயரங்கள் குறித்து ஒருவிதமான மௌனத்தையே இவை கடைப்பிடித்தன. சமீபத்தில் "ரைம்ஸ் ஒஃப் இந்தியா" இல் வெளிவந்த வவுனியா முகாம் பற்றிய கட்டுரைகளை விதிவிலக்காகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட ஊடகங்களைப் பொறுத்தவரை இலங்கையின் மனித உரிமை என்பது பூசாவில் உள்ள சிறுவர் போராளிகளுக்கான முகாமில் தொடங்கி புத்தளத்திலுள்ள விடுதலைப்புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான முகாமில் முடிவடைந்துவிடும். போருக்குப் பிந்திய காலகட்டத்தில் சிறுவர் போராளிகளைப் பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும் கிட்டத்தட்ட எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளும் வெளியிட்டன. சிறுவர் போராளிகளின் பிரச்சினைகள், இஸ்லாமியர்களின் துயரங்களைப் பற்றி எழுதுவது அவசியம்தான். ஆனால் அப்படிப்பட்ட கட்டுரை களை வெளியிடுவதற்குப் புலிகள் ஒடுக்கப்படும் வரை அவர்கள் காத்திருந்ததன் மர்மம்தான் விளங்கிக்கொள்ளும்படி இல்லை. போர் முடிந்த பின்னர் தமிழகத்தில் உரக்க ஒலிக்கத் தொடங்கியிருக்கும் புலி எதிர்ப்புக் குரலையும் நாம் இந்தச் சூழலில் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.இலங்கை அரசின் வெற்றிக் கொண்டாட்டங்களில் உளவியல் ரீதியாக ஒடுங்கிப் போயிருக்கிறார்கள் தமிழர்கள். முடிந்தால் புலம்பெயர்வது; முடியாவிட்டால் அடிமை வாழ்க்கைக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வது என்று வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்களுக்குத் தீவிரப் புலி ஆதரவு, வலுக்கும் புலி எதிர்ப்பு ஆகிய குரல்களின் பின்னணியிலிருக்கும் அரசியல் எந்த விதத்திலும் உதவாது. மாறாக, அவர்களது பிரச்சினைகளை அதிகமாக்கவே செய்யும். வட இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சிகள் பற்றியும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஈழத்தமிழர்கள் பற்றிய பெரிய அக்கறை எதையும் இந்த ஊடகங்கள் இதுவரை வெளிப்படுத்தியதில்லை. ஆனால் பிரபாகரனின் மரணச் செய்தியைக் கொண்டாட்ட மனநிலையோடு அணுகினார்கள். பிரபாகரனின் மரணத்துக்கு முன்னும் பின்னும் தமிழர் வாழும் பகுதிகள் பற்றியும் அங்கு துயருறும் மக்கள் பற்றியும் சுருக்கமாகவேனும் செய்திகளைத் தர இந்த 24 மணி நேர செய்தி அலை வரிசைகளுக்கு முடியவில்லை. என் பார்வையில், இலங்கையில் போர் நடந்த காலம் இந்திய ஊடகத் துறையின் இருண்ட காலம். இனிமேல் அவர்கள் எப்படிச் செயற்படுவார்கள் என்பது குறித்து எந்த நம்பிக்கையும் எனக்கு இல்லை. இரு பக்கத்து உண்மைகள் பற்றியும் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மனிதர்களின் துயரம் பற்றியும் மொழி மற்றும் தேச எல்லைகளைக் கடந்து இனிமேலாவது இந்த ஊடகங்கள் பேசும் என்பதற்கான உத்தரவாதங்களோ அறிகுறிகளோ காணப்படவில்லை. புலி ஆதரவு அல்லது புலி எதிர்ப்பு என்கிற பெயரில் இலங்கை மக்கள் மீது குண்டுகளைப் போல வீசப்பட்ட இந்திய ஊடகங்களின் கள்ளத்தனமான மெனங்கள் தொடரும் என்பதற்கான சாட்சியங்களாக உங்களைப் போலவேநானும் இருப்பேன், தெரிந்தோ தெரியாமலோ எனக்கும் அதில் பங்கு இருக்கிறது என்கின்ற கூடுதல் குற்றவுணர்ச்சியுடன்.

** கவிதா *

Source:http://www.uthayan.com/Welcome/afull.php?id=94&L=T&1254129466