Monday, September 28, 2009

இலங்கையில் போர் நடந்த காலம் இந்திய ஊடகத் துறையின் இருண்ட காலம்

தமிழக ஊடகவியலாளர் கவிதா என்பவர் சில மாதங்களுக்கு முன்பு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஊடகங்களின் நிலைமை, மனித
உரிமைகள் போன்றவற்றைக் கண்டறிந்திருந்தார்.
அவர் இப்போது தமிழகத்தின் "காலச்சுவடு" இணையச் சஞ்சிகைக்கு இலங்கையின் நிலை குறித்தும், இலங்கை நிலைப்பாட்டில் இந்திய ஊடகங்களின் பங்களிப்புக் குறித்தும் ஆய்வுக் கட்டுரை ஒன்றை வரைந்திருக்கிறார்.
அது இங்கு மீள்பிரசுரமாகின்றது.
ஒர் ஊடகவியலாளராக, குறிப்பாக ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் பணிபுரியும் ஊடகவியலாளராக, இங்கு நின்று பேசுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று தெரியவில்லை. இருந்தாலும் எனக்கும் சொல்ல சில விடயங்கள் இருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை இந்திய ஊடகங்களின் மொழி குறிப்பாகத் தமிழகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வரும் ஊடகங்களின் மொழி சில வார்த்தைகளுக்குள் சுருங்கிவிட்டது.
புலி எதிர்ப்பு அல்லது புலி ஆதரவு என்று சுருங்கிவிட்ட மொழியைக் கொண்டு, அதனடிப்படையிலும் அந்தப் பின்னணியிலும் பெரும்பாலான ஊடகங்கள் செயற்படுகின்றன
.பெரும்பாலான தமிழ்ப் பத்திரிகைகளுக்குப் புலி ஆதரவுநிலை என்பது ஒரு வியாபார உத்தி. பிரபாகரனின் மரணத்தைச் இலங்கை அரசு அறிவித்த பிறகு வந்த ஒரு தமிழ்ப் பத்திரிகை தனது மரணம் குறித்த செய்தியைப் பிரபாகரன் பார்த்துக்கொண்டிருப்பது போல ஒரு புகைப்படத்தை அட்டையில் வெளியிட்டது. அந்தப் பத்திரிகை விற்பனை செய்யப்பட்டது; மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கினார்கள். சில மாதங்களுக்கு முன்பு இலங்கையைப் பற்றிய கருத்தரங்கு ஒன்றில் என்னுடன் கலந்துகொண்ட தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் பிரபாகரனின் படத்தை அட்டையில்போட்டால் அந்த இதழ் குறைந்தபட்சம் 50 ஆயிரம் பிரதிகள் கூடுதலாக விற்பனையாகின்றது என அந்த அரங்கில் சொன்னார். அப்போது போர் முடிந்திருக்கவில்லை. பிரபாகரன் இறந்திருக்கவில்லை. யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது இன்றைய சூழலில் பிரபாகரனுக்கே அதிகம் பொருந்தும். இதனால் என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம். பிரபாகரன் குறித்த செய்திக்குப் பின்னால் இருக்கும் வணிக சாத்தியங்கள் இத்தகைய செய்திகளை ஊக்குவிக்கும் சக்தியாக மாற்றக்கூடிய அவலம்தான் இதில் பிரச்சினை. வணிக நிலை ஒரு புறம் இருக்க, தமிழ்ப் பத்திரிகைகளின் பொதுவான புலி ஆதரவு நிலையும் சரி, ஆங்கில ஊடகங்களின் பொதுவான புலி எதிர்ப்பு நிலையும் சரி ஈழத்தின் உண்மைகளிடமிருந்து, மக்களிடமிருந்து வெகுவாக விலகியிருந்தன என்பது மேலும் தீவிரமான பிரச்சினை.
பல வருடங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்காக எழும்பிய தன்னெழுச்சியான ஆதரவை இப்படிப்பட்ட எதிரெதிர் நிலைகள் கலைத்துப் போட்டுவிட்டன என எனக்குத் தோன்றுகிறது. இலங்கையில் இருந்த தமிழர்கள் படும் அசலான துயரங்களை சொல்லப்போனால் இலங்கையில் தமிழனாக இருப்பதே துயரம் என்று இன்றும் தொடரும் நிலையை பெரும்பாலான ஊடகங்கள் கணக்கிலெடுக்கவில்லை கவனப்படுத்தவுமில்லை. அவர்களுக்குத் தேவை ஒரு பிரதிநிதி. அவர்களது அரசியல் மற்றும் வியாபார உத்திகளுக்கு ஏற்றாற்போல அந்தப் பிரதிநிதியை கதாநாயகனாகவோ வில்லனாகவோ முன்னிறுத்திக்கொள்கிறார்கள். இதற்கான எதிர்வினையை நான் தமிழகத் தேர்தல் குறித்த செய்தி சேகரிப்புக்காகச் சென்ற பல கிராமங்களில் பார்க்க முடிந்தது. பல இடங்களில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு இருந்தது. ஆனால் அதை வைத்து வாக்குகளைத் தீர்மானிப்பதில் மக்களுக்குச் சிக்கல் இருந்தது. அது வேறு, இது வேறு என்பதே அவர்களது மனோபாவமாக இருந்தது. சிதம்பரத்தை அவர் தொகுதிக்குள் செய்யாமல்விட்ட விடயங்களுக்காகத் தோற்கடிப்போம், மற்றபடி அவரது ஈழ நிலைப்பாடு பற்றி எங்களுக்குப் பெரிய அக்கறை இல்லை என்று சிவகங்கையில் நான் பேட்டி கண்ட மக்கள் சொன்னார்கள். ஈழத் தமிழரின் துயரங்களைச் சரியான மொழியில், சரியான முறையில் மக்களிடம் எடுத்துச் செல்லாதது ஊடகங்கள் செய்த மிகப் பெரிய தவறு. ஒரு பத்திரிகையாளர் என்ற காரணத்தால் பெரும்பாலான பத்திரிகைகளைப் படித்துவிடுவேன். ஆனால் கடந்த நவம்பரில் இலங்கைக்குச் செல்லும்வரை அங்கு வெள்ளை வான் கடத்தல்கள் நடப்பது எனக்குத் தெரியாது. புலிகளாக இருக்கக்கூடும் என்று கருதப்படும் அப்பாவி இளைஞர்கள் இலங்கை அரசாலும் துணை இராணுவத்தினராலும் வெள்ளை வான்கள் மூலமாகக் கடத்தப்படுகிறார்கள். வெள்ளை வான் என்பதற்கு இலங்கை அதிகார வர்க்கத்தின் அகராதியில் பல அர்த்தங்கள் உண்டு. சக்கரங்களின் மீது பயணிக்கும் பயங்கரவாதம், மரணம், காணாமல் போவது என்று பல அர்த்தங்கள். போர் புலிகளுக்கு மட்டும் எதிரானது அல்ல 2005ஆம் ஆண்டிலிருந்து கடந்த நவம்பர் வரை இலங்கை முழுவதும் கிட்டத்தட்ட 3 ஆயிரம் இளைஞர்கள் அப்படிக் காணாமல் போயிருக்கிறார்கள். கொழும்பில் மட்டும் 300 இளைஞர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். இங்கு நமது ஆங்கில ஊடகங்கள் கட்டமைத்துக்கொண்டிருப்பது போல இலங்கையில் நடந்தது புலிகளுக்கு எதிரான போர் மட்டுமல்ல, தமிழர்களுக்கு எதிரான போர். அதிலும் அந்தப் போரில் பாதிக்கப்பட்டது, வடக்கிலிருந்த தமிழர்கள் மட்டுமல்ல, கிழக்கிலும் கொழும்பிலும் இருந்த தமிழர்களுக்கும் எதிராகவும் அந்தப் போர் நடந்தது. இந்த விடயத்தைக் கொழும்புக்கு நேரில் செல்லும்வரை என்னால் உணர முடியவில்லை. தமிழ்நாட்டிலிருந்து வரும் எந்த ஊடகமும் இது பற்றி எழுதவில்லை. கொழும்பிலேயே தன் செய்தியாளரை வைத்திருக்கும் "த இந்து" உட்பட எந்த இந்திய ஆங்கில ஊடகத்திற்கும் அரச பயங்கரவாதத்தின் இத்தகைய முகம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அதை அவர்கள் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்தார்கள். இராணுவம் தந்த செய்திகளை மீள்பிரசுரம் செய்துகொண்டிருப்பவர்களிடம் வேறு எதையும் எதிர்பார்க்கவும் முடியாது. நடந்து முடிந்த போரில் வெற்றி அல்லது தோல்வி குறித்த மயக்கங்களில் அவரவர் அரசியலுக்கு ஏற்பப் பத்திரிகையாளர்களும் சிக்கிக் கொண்டுவிட்டார்கள். இந்தப் போரின் அவலங்களை மனித உரிமைப் பிரச்சினைகளாகப் பார்க்கவும் சொல்லவும் இந்தியப் பத்திரிகைகள் தவறிவிட்டன.
குறிப்பாக மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்லிக்கொள்ளும் "த இந்து" போன்ற ஆங்கிலப் பத்திரிகைகள் செய்த இமாலயத் தவறு அதுவாகும்."த இந்து" வைப் பொறுத்தவரை போர் நடந்து கொண்டிருந்தால் அரசு Zero Civilian Casuality (பொதுமக்களில் யாருக்கும் உயிர்ச் சேதம் நிகழாத) கொள்கையைக் கடைபிடிக்கிறது என்று அர்த்தம். பொதுமக்கள் சிறிதும் பாதிப்படையாத ஒரு போர் என்று முதல் பக்கத்தில் செய்தி வெளியிடுகிறது. போர் முடிந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்திருக்கிறார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டாலும் அது பத்திரிகை ஆசிரியர் ராமைப் பொறுத்தவரை Low intensity conflict (தீவிரம் மட்டாக இருக்கும் போர்).சமீபத்தில் வவுனியா முகாம் சென்று மூன்று மணிநேரம் இருந்து திரும்பிவந்துவிட்டு அது ஒரு மேன்மையான அனுபவம் என்று எழுதியிருந்த ராம். அந்தச் சமயத்தில் இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒரு பேட்டி எடுத்திருந்தார். மூன்று பகுதிகளாக அந்தப் பேட்டி வெளியானது.
அந்தப் பேட்டியில் குறிப்பிட்ட சில விடயங்களை மட்டும் இங்கு உதாரணம் காட்ட விரும்புகிறேன். குறிப்பாக, கடந்த ஜனவரி மாதம் இலங்கையில் கொல்லப்பட்ட "த சண்டே லீடர்" பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவைப் பற்றி ராம் எழுப்பிய கேள்விகள். ராம்: இலங்கையில் பத்திரிகையாளர்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் நெருக்கடிகள் பற்றியும் சர்வதேச அளவில் கவலை எழுப்பப்பட்டது. இவர்களில் சிலர் உங்களுடைய நண்பர்கள். குறிப்பாக லசந்த விக்ரமதுங்க. அவர் 2009 ஜனவரியில் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜூன் மாதம் பெண் பத்திரிகையாளரான கிருஷ்ணி இஃபான் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டு, பல மணிநேரம் விசாரிக்கப்பட்டு, பிறகு கண்டியில் விடுவிக்கப்பட்டார். ஜனாதிபதி மஹிந்த: இவையெல்லாம் வேண்டுமென்றே உருவாக்கப்படுகின்றன. நீங்கள் தெருவில் யாருடனாவது சண்டைபோடுகிறீர்கள்; அந்த மனிதர் உங்களை அடித்துவிட்டால், அதற்கு அரசு பொறுப்பேற்க முடியுமா? பத்திரிகையாளர்கள் எங்களுக்கு எதிராக இருந்தால்கூட நாங்கள் அவர்களுக்கு எதிராக எதையும் செய்யவில்லை. உதாரணமாக, ஒரு தமிழ் நாளிதழின் உரிமையாளரும், ஆசிரியரும் புலிகளை ஆதரிப்பதற்கான சாட்சியங்கள் எங்களுக்குக் கிடைத்தன. ஆனால் நாங்கள் அவர்களைப் பத்திரிகையாளர்களாகத்தான் நடத்தினோம். லசந்த என் நண்பர்தான். அவ்வப்போது வந்து என்னைச் சந்திப்பார். நிறைய விடயங்களைப் பற்றிச் சொல்வார். என் கட்சியில் நடக்கும் விடயங்களையெல்லாம் கூடச் சொல்வார். அதிகாலை இரண்டு மணிக்குக்கூட வருவார். பிறகு என் வண்டியில் அவரைக் கொண்டுவிடச் சொல்வேன். ராம்: கடைசியாக அவர் உங்களுக்குத்தான் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டாரா?ஜனாதிபதி மஹிந்த: ஆமாம். ஆனால் நான் அந்த நேரத்தில் பிரார்த்தனையில் இருந்தேன். நான் வெளியில் இருந்திருந்தால் தொலைபேசியை என்னிடம் கொடுத்திருப்பார்கள். பிறகு, என் பாதுகாவலர்களிடம் மிகவும் கோபித்துக்கொண்டேன்.லசந்த விக்ரமதுங்க இறப்பதற்கு முன்பு எழுதிய ஒரு தலையங்கம் அவர் இறந்த பிறகு "த சண்டே லீடரில்" வெளியானது. பரபரப்பைக் கிளப்பிய அந்த தலையங்கத்தை ராமும் படித்திருப்பார். அதன் பிறகும் இப்படிப்பட்ட தட்டையான கேள்விகளை அவரால் எப்படிக் கேட்க முடிந்தது என்று புரியவில்லை. அந்த தலையங்கத்திலிருந்து சில வரிகளை மட்டும் இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன். "தனது சொந்த மக்களைத் தொடர்ந்து குண்டுவீசிக் கொல்லும் ஒரே நாடு இலங்கைதான் என்ற எங்களது அதிர்ச்சியை நாங்கள் ஒருபோதும் மறைத்ததில்லை. நான் இரண்டுமுறை கொடுமையாகத் தாக்கப்பட்டேன் என்பது பரவலாக அறியப்பட்ட செய்தி. ஒருமுறை எனது வீட்டின் மீது எந்திரத் துப்பாக்கி குண்டு மழை பொழிந்தது. அரசின் உத்தரவாதங்கள் இருந்தாலும் இந்தத் தாக்குதல்களை நடத்தியவர்கள் பற்றி எந்த விசாரணையும் நடக்கவில்லை; அவர்கள் பிடிக்கப்படவும் இல்லை. இந்தத் தாக்குதல்களில் அரசின் கை இருக்கும் என்று நம்புவதற்கு எனக்குக் காரணம் இருக்கிறது. இறுதியாக நான் கொல்லப்படும்போது, அரசுதான் அந்தக் கொலையை நிகழ்த்தியிருக்கும். "ஜனாதிபதி மஹிந்த, என்னுடைய மரணத்தைத் தொடர்ந்து நீங்கள் பொருத்தமான தார்மீகச் சொற்களை உதிர்ப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். பொலிஸ்துறை உடனடி விசாரணை செய்ய வேண்டும் என்று வற்புறுத்துவீர்கள். ஆனால் நீங்கள் இதற்கு முன்பு உத்தரவிட்ட விசாரணைகளைப் போல இதிலிருந்தும் எந்த உண்மையும் வெளிவரப்போவதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனது மரணத்துக்குப் பின்னால் யார் இருப்பார்கள் என்று நம் இருவருக்குமே தெரியும். ஆனால் அவரது பெயரைச் சொல்லும் தைரியம் இருக்காது. என் உயிர் மட்டுமல்ல உங்கள் பாதுகாப்பும் அந்த மௌத்தில்தான் இருக்கிறது.''லசந்த விக்ரமதுங்க இலங்கையில் மிகவும் மதிக்கப்பட்ட மிக முக்கியமான பத்திரிகையாசிரியர்களில் ஒருவர். இங்கு என். ராம் போல (இப்படிச் சொல்வதற்கு என்னை லசந்தவின் ஆன்மா மன்னிக்கட்டும்). அவர் கொல்லப்பட்டபோது இங்கிருந்த ஊடகவியலாளர்கள் சிலர் இலங்கை அரசுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பத்திரிகை சுதந்திரத்துக்கான முன்னோடியாகப் பல சமயங்களில் தன்னைப் பிரகடனப்படுத்திக்கொண்ட "த இந்து" விலிருந்து ஒரு பத்திரிகையாளர்கூட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆச்சரியப்படும் விதத்தில் "த இந்து" நடத்திக்கொண்டிருக்கும் "ஏசியன் காலேஜ் ஒவ் ஜெர்னலிஸம்" என்கிற ஊடகவியல் கல்லூரியிலிருந்து 60 மாணவர்கள் வந்திருந்தார்கள். உரத்த குரல்களில் கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்களுடன் வந்த ஒரு பேராசிரியரிடம் எனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன். அவர் சொன்னார்: அவர்கள் இன்னும் ஊடகவியலாளராக மாறவில்லை என்று நான் மிகவும் அவமானமாக உணர்ந்த தருணங்களில் ஒன்று அது.மக்களை விடுங்கள், இலங்கையில் ஊடகங்கள் கடுமையாகப் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு வருவது பரவலாக அறியப்பட்ட விடயம். அங்கு போர் முடிந்த பிறகு புலம்பெயர்ந்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை பத்துக்கும்மேல். காரணம், அவர்களது புகைப்படங்கள் அரசு சார்புத் தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டன போர்க் காலத்தில் துரோகச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்கிற குறிப்புகளுடன். இப்படியொரு செய்தி வெளியான பிறகு அந்தப் பட்டியலில் இருந்தவர்களில் ஒருவரான போத்தல ஜயந்த என்கிற சிங்களப் பத்திரிகையாளர்மீது கொலைவெறித் தாக்குதல் நடந்திருக்கிறது. இலங்கையில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவதை இந்திய ஊடகங்கள் கணக்கில் எடுக்கவில்லை இலங்கையில் ஊடக சுதந்திரம் நசுக்கப்படுவது, இந்தியாவில் குறிப்பாக இந்திய ஊடகத் துறையில் எத்தகைய எதிர்வினைகளை ஏற்படுத்திருக்கிறது என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. லசந்த விக்ரமதுங்க மரணத்துக்குப் பிறகு ஒரு போராட்டம், வித்தியாதரன் கைதுக்குப் பிறகு ஒரு போராட்டம் என்று இங்கொன்றும் அங்கொன்றுமாகப் போராட்டங்கள் நடந்தன. ஆனால் இலங்கையில் ஊடக சுதந்திரத்தின் மீது மிகத் தீவிரமாக நடந்துவரும் தாக்குதல்கள் இங்குள்ள ஊடகங்களால், குறிப்பாக ஆங்கில ஊடகங்களால் பெரிய அளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இலங்கை ஊடகங்களுக்குத்தான் உயிர்ப் பயம். சர்வதேச ஊடகங்களும் இந்திய ஊடகங்களும் இலங்கைப் பிரச்சினையில் ஏன் மெனம் காக்க வேண்டும்? இந்த விடயத்தில் "த இந்து" வின் இரட்டை நிலைப்பாடு பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். "த இந்து" குழுமத்திலிருந்து வரும் "ஃபிரண்ட் லைன்" என்ற மாதமிருமுறை இதழ் சற்றே ஆழமான செய்திக்கட்டுரைகளை வெளியிட்டு வரும் ஓர் இதழ். மிகவும் குறைவாகவே இது விற்பனையாகிறது. இராணுவம் தந்த செய்திகளை "த இந்து" வில் அப்படியே எழுதும் அப்பத்திரிகையின் இலங்கைச் செய்தியாளர் முரளிதர ரெட்டி, ஃபிரண்ட் லைனில் எழுதுவதை எந்த ரகத்தில் சேர்ப்பதென்று தெரியவில்லை. எந்த முகாமுக்குச் சென்று வந்தது மேன்மையான அனுபவம் என்று ராம் சொன்னாரோ அந்த முகாம் நாஜிகளுக்கான வதை முகாம் போல இருக்கிறது என்று முஸ்லிம் தகவல் மையத்தை மேற்கோள்காட்டி ஃபிரண்ட் லைனில் சொல்கிறார் முரளிதர ரெட்டி. ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதைப் பற்றியும் அதில் அவர் பேசுகிறார். "த இந்து" வைத் தவிர இங்கு வெளிவரும் ஏனைய ஆங்கிலப் பத்திரிகைகள் "த இந்து" வைப் போலத் தீவிரமாகப் புலிகளை எதிர்ப்பதில்லை, இலங்கை அரசின் குரலைப் பிரதிபலிப்பதில்லை என்பது உண்மைதான். ஆனால் தமிழ் ஈழம், அதன் மக்கள், அவர்களது துயரங்கள் குறித்து ஒருவிதமான மௌனத்தையே இவை கடைப்பிடித்தன. சமீபத்தில் "ரைம்ஸ் ஒஃப் இந்தியா" இல் வெளிவந்த வவுனியா முகாம் பற்றிய கட்டுரைகளை விதிவிலக்காகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட ஊடகங்களைப் பொறுத்தவரை இலங்கையின் மனித உரிமை என்பது பூசாவில் உள்ள சிறுவர் போராளிகளுக்கான முகாமில் தொடங்கி புத்தளத்திலுள்ள விடுதலைப்புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான முகாமில் முடிவடைந்துவிடும். போருக்குப் பிந்திய காலகட்டத்தில் சிறுவர் போராளிகளைப் பற்றிய செய்திகளையும் கட்டுரைகளையும் கிட்டத்தட்ட எல்லா ஆங்கிலப் பத்திரிகைகளும் வெளியிட்டன. சிறுவர் போராளிகளின் பிரச்சினைகள், இஸ்லாமியர்களின் துயரங்களைப் பற்றி எழுதுவது அவசியம்தான். ஆனால் அப்படிப்பட்ட கட்டுரை களை வெளியிடுவதற்குப் புலிகள் ஒடுக்கப்படும் வரை அவர்கள் காத்திருந்ததன் மர்மம்தான் விளங்கிக்கொள்ளும்படி இல்லை. போர் முடிந்த பின்னர் தமிழகத்தில் உரக்க ஒலிக்கத் தொடங்கியிருக்கும் புலி எதிர்ப்புக் குரலையும் நாம் இந்தச் சூழலில் பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.இலங்கை அரசின் வெற்றிக் கொண்டாட்டங்களில் உளவியல் ரீதியாக ஒடுங்கிப் போயிருக்கிறார்கள் தமிழர்கள். முடிந்தால் புலம்பெயர்வது; முடியாவிட்டால் அடிமை வாழ்க்கைக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வது என்று வாழ்ந்துகொண்டிருக்கும் அவர்களுக்குத் தீவிரப் புலி ஆதரவு, வலுக்கும் புலி எதிர்ப்பு ஆகிய குரல்களின் பின்னணியிலிருக்கும் அரசியல் எந்த விதத்திலும் உதவாது. மாறாக, அவர்களது பிரச்சினைகளை அதிகமாக்கவே செய்யும். வட இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சிகள் பற்றியும் இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ஈழத்தமிழர்கள் பற்றிய பெரிய அக்கறை எதையும் இந்த ஊடகங்கள் இதுவரை வெளிப்படுத்தியதில்லை. ஆனால் பிரபாகரனின் மரணச் செய்தியைக் கொண்டாட்ட மனநிலையோடு அணுகினார்கள். பிரபாகரனின் மரணத்துக்கு முன்னும் பின்னும் தமிழர் வாழும் பகுதிகள் பற்றியும் அங்கு துயருறும் மக்கள் பற்றியும் சுருக்கமாகவேனும் செய்திகளைத் தர இந்த 24 மணி நேர செய்தி அலை வரிசைகளுக்கு முடியவில்லை. என் பார்வையில், இலங்கையில் போர் நடந்த காலம் இந்திய ஊடகத் துறையின் இருண்ட காலம். இனிமேல் அவர்கள் எப்படிச் செயற்படுவார்கள் என்பது குறித்து எந்த நம்பிக்கையும் எனக்கு இல்லை. இரு பக்கத்து உண்மைகள் பற்றியும் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மனிதர்களின் துயரம் பற்றியும் மொழி மற்றும் தேச எல்லைகளைக் கடந்து இனிமேலாவது இந்த ஊடகங்கள் பேசும் என்பதற்கான உத்தரவாதங்களோ அறிகுறிகளோ காணப்படவில்லை. புலி ஆதரவு அல்லது புலி எதிர்ப்பு என்கிற பெயரில் இலங்கை மக்கள் மீது குண்டுகளைப் போல வீசப்பட்ட இந்திய ஊடகங்களின் கள்ளத்தனமான மெனங்கள் தொடரும் என்பதற்கான சாட்சியங்களாக உங்களைப் போலவேநானும் இருப்பேன், தெரிந்தோ தெரியாமலோ எனக்கும் அதில் பங்கு இருக்கிறது என்கின்ற கூடுதல் குற்றவுணர்ச்சியுடன்.

** கவிதா *

Source:http://www.uthayan.com/Welcome/afull.php?id=94&L=T&1254129466

No comments:

Post a Comment