Source:http://www.thinaboomi.com/2010/july/22/index1.php
1,500 கோடி கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய தினஞீமி நாளிதழின் ஆசிரியரும், அதிபருமான எஸ். மணிமாறன் நேற்று முன்தினம் நள்ளிரவில் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
அவருடன் சிறப்பு செய்தியாளர் எம். ரமேஷ்குமார் மற்றும் இந்த ஊழலை அம்பலப்படுத்த உதவிய முத்தையா என்பவரும் பொய்ப் புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தினஞீமி நாளிதழ் ஆசிரியர் மணிமாறன் கைதானதற்கு தமிழகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் ஆர்ப்பாட்டமும் நடத்தினார்கள். பத்திரிக்கை சுதந்திரம் முற்றிலும் பறிபோய் விட்டதாக அரசியல் தலைவர்களும் தங்கள் கண்டனக் குரல்களை எழுப்பி உள்ளனர்.
தமிழகத்தில் நடைபெறும் கிரானைட் ஊழல்களைப் பற்றி தினஞீமி நாளிதழ் கடந்த பல ஆண்டுகளாகவே துணிச்சலோடு செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்த கிரானைட் தொழிலில் பல பண முதலைகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தும் கூட மிகுந்த துணிச்சலோடு அந்த தொழிலில் நடக்கும் ஊழல்களை தினஞீமி நாளிதழ் கடந்த பல ஆண்டுகளாகவே இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி வந்தது. குறிப்பாக, மதுரை மாவட்டம் கீழவளவு, கீழையூர், ரெங்கசாமிபுரம், அடஞ்சாண்பட்டி போன்ற பகுதிகளில் நடைபெறும் சட்டவிரோத சுரங்கத் தொழில் பற்றி தினஞீமி நாளிதழ் செய்தி வெளியிட்டு வந்தது. மேலும் சட்டவிரோதமாக பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் கிரானைட் குவாரிகள் தோண்டப்படுவதால் அதனால் பொதுமக்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்பதையும் தினஞீமி நாளிதழ் அவ்வப்போது அம்பலப்படுத்தியது. வெடிகுண்டு வைத்து கிரானைட் குவாரிகள் உடைக்கப்படுவதால் பல வீடுகளில் கற்கள் விழுந்து அந்த வீடுகள் நாசமாயின. மேலும் இந்த தொழில் மேற்கொள்ளப்படுவதால் சுற்றுப்புற கிராமங்களில் சிலிக்கான் தூசி பரவி பொதுமக்கள் பலவித நோய்க்கு ஆளானதையும் தினஞீமி நாளிதழ் படம் பிடித்து காட்டியது.
மேலும் மதுரை மாவட்டம் ரெங்கசாமிபுரத்தில் பவள மாரியம்மன் கோயிலுக்கு மிக அருகில் கிரானைட் குவாரி தோண்டப்பட்டதால் அந்த கோயில் தொங்கிக் கொண்டிருப்பதையும் தினஞீமி நாளிதழ் படம் பிடித்து காட்டியது. கோயில் இருக்கும் இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில்தான் கிரானைட் குவாரி தோண்டப்பட வேண்டும். ஆனால் 10 அடி தூரத்திலேயே கிரானைட் குவாரி தோண்டப்பட்டதை தினஞீமி நாளிதழ் படம் பிடித்து காட்டியது.
மேலும் கிரானைட் குவாரிகளின் ஞிளம், அகலம், ஆழம் இவற்றை கணக்குப் பார்த்து அனுமதி வழங்க வேண்டும். அப்படி செய்யாததால் பலகோடி முறைகேடுகள் நடக்கின்றன என்பதையும் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு அவை சம்பந்தமில்லாத இடங்களில் எல்லாம் குவித்து வைக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதையும் இதனால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுவதையும் தினஞீமி நாளிதழ் மிக துணிச்சலோடு சுட்டிக் காட்டியது.
இதன் ஒரு கட்டமாக மாவட்ட கலெக்டர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்ட போது, எங்கெல்லாம் குவாரிகள் இல்லையோ அந்த கலெக்டர்கள் மட்டும் பதிலளித்தார்கள். குவாரி உள்ள மாவட்டக் கலெக்டர்கள் பதிலளிக்கவில்லை. இதனால் தினஞீமி நாளிதழ் மாநில தகவல் ஆணையத்தையும் அணுகியது. அங்கிருந்தும் சரியான பதில் கிடைக்காததால், முடங்கிப் போன தகவல் ஆணையம் என்று கூட செய்திகள் வெளியிடப்பட்டன. மேலும் இந்த ஊழல் தொடர்பாக சென்னை உயர்ஞிதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த எம். ரமேஷ்குமார் என்பவர் வழக்கும் தொடர்ந்தார். அந்த வழக்கும் தற்போது நிலுவையில் இருந்து வருகிறது.
பின்னர் அடுத்த கட்டமாக தமிழக கவர்னரிடம் கூட ஒரு முறை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இப்படியாக தினஞீமி நாளிதழ் பல்வேறு காலக்கட்டங்களில் தமிழகத்தில் நடைபெறும் கோடிக்கணக்கான மதிப்பிலான கிரானைட் ஊழல் பற்றி செய்திகளை வெளியிட்ட வண்ணம் இருந்தது. ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
சமீபத்தில் கூட சில சாட்டிலைட் படங்களை வெளியிட்டு மதுரை மாவட்டத்தில் நடக்கும் சட்டவிரோத கிரானைட் குவாரி பற்றி செய்திகள் வெளியிடப்பட்டன. ரூ 1,500 கோடி கிரானைட் ஊழல் நடந்திருப்பதாகவும், விதிமுறைகளை மீறி சுரங்கத்தில் இருந்து கற்கள் கடத்தப்படுவதாகவும் தினஞீமி நாளிதழ் பரபரப்பு செய்திகளை படத்துடன் வெளியிட்டது. இந்த செய்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எரிச்சலையூட்டியிருக்கக் கூடும்.இதன் காரணமாகவோ என்னவோ, தினஞீமி ஆசிரியருக்கு மிரட்டல்கள் வந்தவண்ணம் இருந்தன. இருந்தாலும், தினஞீமி நாளிதழ் மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம். தொடர்ந்து ஊழல் பற்றிய செய்திகளை வெளியிடுவோம் என்று துணிச்சலாக சில தினங்களுக்கு முன்பு கூட தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது. அதற்கு மறுநாளும் கிரானைட் சுரங்க ஊழல் பற்றி மிகப் பெரிய படத்துடன் தினஞீமி நாளிதழ் செய்தி வெளியிட்டது.
மேலும் ஒவ்வொரு முறையும் கிரானைட் செய்திகளை வெளியிடும் போதும் தினஞீமி நாளிதழில் ஒரு பாக்ஸ் செய்தி இடம்பெற்றிருக்கும். அதாவது, கிரானைட் குவாரிகளினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகள் சம்பந்தமாக தங்களுக்கு தகவல் எதுவும் தெரிந்திருந்தாலோ மேலும் புகைப்பட ஆதாரங்கள் இருந்தாலோ அவற்றை அனுப்புமாறு மக்களைக் கேட்டுக் கொள்ளும் வகையில் அந்த பாக்ஸ் செய்தி இடம் பெற்றது. அதன் பேரில் பொதுமக்கள் தந்த பல தகவல்களின் அடிப்படையில் பல செய்திகள் அடுக்கடுக்காக ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டன. இந்த நிலையில்தான் தினஞீமி நாளிதழுக்கு அடிக்கடி மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்தன. அதையும் பொருட்படுத்தாமல் துணிச்சலோடு செய்திகளை வெளியிட்டது தினஞீமி நாளிதழ்.
இதற்கிடையில் சிலர் கொடுத்த பொய்ப் புகாரின் அடிப்படையில் தினஞீமி நாளிதழ் ஆசிரியரும், அதிபருமான எஸ். மணிமாறன் மற்றும் அந்த நாளிதழின் சிறப்பு செய்தியாளர் எம். ரமேஷ்குமார் மற்றும் கீழையூரை சேர்ந்த( இந்த ஊழலை அம்பலப்படுத்த உதவிய) முத்தையா ஆகியோரை நேற்று முன்தினம் நள்ளிரவில் மதுரை தல்லாகுளம் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் மீது இ.பி.கோ. 341, 384, 387,392 மற்றும் 511, 394 _ பி ஆகிய ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பொய் வழக்கின் அடிப்படையில் தினஞீமி ஆசிரியர் மணிமாறன் உட்பட மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ஊழலை அம்பலப்படுத்தியதற்காக நள்ளிரவில் ஒரு சமூக விரோதியை கைது செய்வது போல ஒரு பத்திரிக்கை ஆசிரியரை கைது செய்துள்ள செயல் பத்திரிக்கை சுதந்திரத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் தொடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய தாக்குதலாகும். பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் இந்த கைது நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளனர். திருப்ஞீர், ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பத்திரிக்கையாளர் சங்கங்கள் இந்த கைது நடவடிக்கைக்கு தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளன. பத்திரிக்கையாளர்கள் சார்பில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
பத்திரிக்கைகளின் குரல் வளையை நெறிக்கும் வகையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்களும் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். முறைகேடுகளை பற்றி செய்திகளை வெளியிட்டால் அதை சட்டப்ஞீர்வமாகத்தான் அவர்கள் சந்திக்க வேண்டும். அதை விட்டு விட்டு ஒரு பத்திரிக்கை ஆசிரியரை கைது செய்வது ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிப்பது போலாகும். இடிப்பாரே இல்லா ஏமரா மன்னன் கெடுப்பான் இலானும் கெடும்.
என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். எனவே தவறுகளை சுட்டிக் காட்டினால் அது தவறா? என்று பொதுமக்களும் கேட்கிறார்கள். மன்னன் தவறு செய்தால் அதை யாரும் தட்டிக் கேட்கலாம். இல்லாவிட்டால், கெடுப்பவர் இல்லாவிட்டாலும் அவன் தானாக கெட்டு விடுவான் என்கிறார் திருவள்ளுவர்.
அந்த அடிப்படையில்தான் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டன. அதற்கு தமிழக காவல் துறை கொடுத்திருக்கும் பரிசுதான் கைது நடவடிக்கை. ஜனநாயகத்தை நெறிக்கும் இதுபோன்ற செயல்களை தினஞீமி நாளிதழ் வன்மையாக கண்டிக்கிறது.