கடவுளே போய் காரியம் நடக்கேலை, பூசாரி போகின்றார் எல்லாம் நடந்துவிடும் என்று நம்பச் சொல்கின்றார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன், வவுனியாவிற்கு நேரில் சென்று முகாம்களைப் பார்வையிட்டுவிட்டு திரும்பிய பின், உலகத்திலே மிக மோசமான முகாம் என்று தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் குறித்து கருத்து வெளியிட்டிருந்தார்.இத்தனைக்கும் அவர் பார்வையிடுவதற்கு சென்றிருந்த முகாம், படையினரால் ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்டு தரம் உயர்ந்ததாக காண்பிக்கப்பட்டிருந்த ஒரு தடுப்பு முகாம். அதனையே உலகத்தில் மிக மோசமான முகாம் என பான் கீ மூன் வர்ணித்திருந்தார் எனில், அவர் போகாத ஏனைய முகாம்கள் குறித்து சொல்லத் தேவையில்லை.
இன்றும் அந்தச் சிறை முகாம்கள் அதனை விட மிகமோசமாக, மனிதர்கள் வசிக்க முடியாதவையாக இருக்கின்றன என்பதை சர்வதேச ஊடகங்கள் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி வருகின்றன. ஆனாலும் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் அங்கு இன்னமும் சிறை வைக்கப்பட்டிருக்கின்றார்கள். கடந்த மே மாதம் இலங்கைக்குச் சென்றிருந்த பான் கீ மூன், அந்த மக்களை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பார் என்றே அப்போது எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட செயலர் பான் கீ மூன், ‘சிறீலங்கா அரசாங்கம் தன்னால் முடிந்த அதிகளவிலானவற்றை செய்து கொண்டிருக்கிறது' என்று புகழாரம் சூட்டியதுடன், ‘சிறீலங்காவின் முயற்சிகளை தான் பாராட்டுகின்றேன்' என்றும் கூறிவிட்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு கூட பதிலளிக்காமல் திரும்பியிருந்தார். ஐ.நா. சபையின் நடவடிக்கைகளை வெளிக்கொண்டுவரும் இன்னர் சிற்றி பிரஸ் கூட கேலி செய்கின்ற அளவிற்கு இலங்கைக்கான இவரது பயணம் அமைந்திருந்தது.
ஆனால், பான் கீ மூன் தனது பயணத்தின் போது தனது நலன்சார்ந்த உடன்படிக்கைகளை சிறீலங்கா அரசுடன் செய்துகொண்டிருந்தார் என்ற விபரங்கள் அண்மையில் வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தமிழ் மக்களைப் பகடைக் காய்களாக வைத்து ஐ.நா பொதுச்செயலர் ஆடிய ஆட்டங்கள் தமிழ் மக்களிடையே பெரும் வேதனையையும், அவரது நடுநிலை தொடர்பாக நம்பிக்கையீனங்களையும் ஏற்படுத்தியிருந்தன.
அத்துடன், பான் கீ மூனின் மருமகன் (மகளின் கணவன்) சித்தார்த் சட்டர்ஜி ஒரு இந்தியக் குடிமகன் என்பதுடன், இந்திய இராணுவ சிறப்பு படையணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், இலங்கையில் இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்த காலத்தில் அங்கு போரில் ஈடுபட்டிருந்தவர் எனவும் தகவல்கள் உள்ளன. இப்போது ஐ.நா. செயலரின் மகளும், மருமகனும் ஐக்கிய நாடுகள் சபையில் உயர் பதவிகளை வகிக்கின்றனர்.
இவர்களுக்கான பதவிகளைப் பெற்றுக்கொடுப்பதில் ஐ.நா. பொதுச் செயலர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்நிலையில்தான், தற்போது இராணுவச் சிறை முகாம்களில் வாடும் தமிழ் மக்களின் நிலை தொடர்பாக நேரடியாக ஆராய்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்ட அரசியல்துறை அதிகாரியான லைன் பாஸ்கோவே சென்றிருக்கின்றார்.
ஐ.நா. செயலர் பான் கீ மூனினால் நேரடியாக இவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தமிழ் மக்களுக்கு இத்தனை அவலங்களை ஏற்படுத்திவிட்டு, அந்த மக்களை இன்னும் சிறையில் அடைத்து வைத்திருக்கும் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடிவிட்டே செயலர் பான் கீ மூன் தனது சிறப்புப் பிரதிநிதியாக பாஸ்கோவேவை அனுப்பிவைப்பதற்கு தீர்மானித்ததாக ஐ.நா. செய்திகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சிறீலங்காவிடம் ‘இரந்து' தமிழ் மக்களுக்கு தீர்வொன்றைப் பெற்றுவிடலாம் என ஐ.நா இன்னும் நம்பிக்கை கொண்டுள்ளதையே இது காட்டுகின்றது. மக்கள் மீது உலகில் தடை செய்யப்பட்ட குண்டுகளை எல்லாம் கொண்டுவந்து கொட்டி பேரழிவை ஏற்படுத்திய சிறீலங்கா, வன்னியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள கண்ணி வெடிகளால் அந்த மக்களின் கால்கள் பறி போய்விடும் என்று கவலைப்பட்டு மீளக் குடியேற அனுமதிக்காமல் காலத்தை இழுத்தடிப்பதை இந்த சர்வதேச சமூகம் இப்போது புரிந்துகொண்டுள்ளது.
மயிலே மயிலே என்று சிறீலங்காவிடம் கெஞ்சி இறகைப் பெற்றுவிடலாம் என்று நம்பிய உலகிற்கு, தானாக அது இறகைத் தராது, அதனிடம் இருந்து இறகைப் பிடுங்கித்தான் எடுக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள இப்போது சரியான வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.
உலகிற்குப் புரிந்த இந்தத் தத்துவம், ஐ.நாவிற்கு எப்போது புரியும்..?
No comments:
Post a Comment