Saturday, September 26, 2009

இந்துவை வாங்காதீர்கள்


அன்பிற்குரிய தமிழகத் தமிழர்களுக்கு,ஈழம் பற்றிய செய்திகளை நம்மூரில் தெரியவிடாமல் செய்து கொண்டிருப்பதில் ஆங்கில மிடையங்களின் பங்கு பெரியது (தமிழ் மிடையங்களில் ஒருசில கொஞ்சமாக வேணும் செய்திகளை வெளியிடுகின்றன.) அதிலும் முகன்மையான பங்கு வகிப்பது இலங்காரத்னாவின் “The Hindu" நாளிதழ் தான். இவர்களின் திமிரான ஆட்டங்கள், ஈழம் பற்றிய குசும்புகள், அங்கு இவர்கள் செய்த குழப்படிகள், ஈழத்தைத் தமிழகத் தமிழரிடமிருந்து உணர்வால் பிரித்தது, தமிழினக் கொலைக்கு உறுதுணையாக இருப்பது எனப் பலவாறாச் சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு நாட்டின், இனத்தின், தேசத்தின் எதிர்காலத்தில் விளையாட என்.ராமுக்கு எந்த உரிமையும் கிடையாது. இவர்களின் கூட்டிக் கொடுக்கும் செயலுக்குப் பரிசாகப் பெற்ற இலங்காரத்னா பட்டத்தின் ஆழம் இப்பொழுதாவது நம் மக்களுக்குப் புரியட்டும். இவர்களின் அழிச்சாட்டியம் இவர்கள் நாளிதழை நாம் வாங்குகின்ற வரையில் தான் நீளும். இவர்களின் பொய்யும் புளுகும் இவர்களின் வயிற்றில் அடித்தால் தான் நிற்கும். அவர்களை நிற்பாட்டுவது நம் கையில் இருக்கிறது. அதை நாம் ஒவ்வொருவரும் கூட்டாகச் சேர்ந்தால் செய்யமுடியும். இது காந்தி செய்த வழி தான் ”ஒத்துழையாமை இயக்கம்”. இவர்களின் பொருள்களை (இங்கு நாளிதழ்) வாங்காமல் இருந்தால் தானே வழிக்கு வருவார்கள். இது நம்மால் முற்றிலும் செய்யக் கூடிய ஒரு செயல் தான். இனி வரும் நாட்களில் யாரும் இந்துவை வாங்காதீர்கள். கால காலப் பழக்கத்தை நிறுத்துவது நம்மில் பலருக்கும் சரவல் தான். ஆனாலும் செய்யுங்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலப் பழக்கத்தை கடினமாய் முயன்று நிறுத்தி ஒரு மாதமாக நான் வாங்காது இருக்கிறேன். இந்த நாளிதழ் ஈழம் பற்றிய செய்திகளில் நொதுமல் (neutral) நிலை எடுக்கும் வரை இதை வாங்குவதில்லை என்பதே என் முடிவு. (அப்படிச் செய்தி தெரியவேண்டுமென்றால் வலைத்தளங்களுக்குப் போய் தெரிந்து கொள்ளுங்கள்.) நம் காசு வாங்கி இவர்கள் பிழைக்க வேண்டாம். என்னை அறிந்த பலருக்கும் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். இந்த வேண்டுகோளை உங்களுக்குத் தெரிந்த எல்லோரிடமும் சொல்லுங்கள். சிறுதுளி பெருவெள்ளம். இன்னும் ஒரு மாதத்தில் வெள்ளம் பெருகியிருந்தால் மனம் கொஞ்சமாவது ஆறுதற்படும்.



No comments:

Post a Comment