சொந்த நாட்டில் தமிழ் மக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படும் அவலம் விஸ்வரூபம் எடுத்ததில், ஐந்து கண்டங்களில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் தஞ்சம் புகுந்திருக்கும் சூழல்.
கால் நுற்றாண்டுகளுக்கு மேலாக ஆயுதமேந்திப் போராடி வரும் போராளிகள் ஒருபக்கம். சொந்த மக்கள் மீதே தரை, கப்பல் மற்றும் வான்வழி என சிங்களப் பேரினவாத இராணுவம் நடத்தும் தாக்குதலை உலக நாடுகள் வேடிக்கைப் பார்க்கும் அவலம் ஒரு பக்கம்.
1960 இல் சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின் படி ஐந்து லட்சம் மலையகத் தமிழர்களை ஒட்டுமொத்தமாகத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்புவதில் இருந்து ஈழ அவலத்தில் இந்தியாவுக்கான பங்கு தொடங்குகிறது. உழைத்து, உழைத்து தேயிலைத் தோட்டங்களை உருவாக்கித் தந்த அந்த மலையகத் தமிழர்கள் வெறும் கையுடன் தமிழகம் வந்திறங்கி அவர்களில் பலர் அந்த வெறுங்கையை ஏந்தி, பிச்சையெடுக்கத் தள்ளப்பட்டனர் என்பதுதான் கொடுமையின் உச்சக் கட்டம்.
இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன என்கிற ஜே.வி.பி. கட்சியினர் ஆயுதமேந்தி கிளர்ச்சியில் ஈடுபட்டபோது அதை அடக்க இந்தியப் படையும், ஆயுதமும் அனுப்பப்பட்ட சரித்திரம் இலங்கைக்கு என்றைக்கும் இந்தியா பக்கபலமாக இருக்கும் என்பதை உலகிற்கும் ஈழத் தமிழனுக்கும் சொல்லாமல் சொல்லியது. பாகிஸ்தானை துண்டாடி வங்கதேசம் பிரிந்தபோது அதை வேடிக்கை பார்த்த இலங்கைக்கு, தமிழக மீனவர்களின் உரிமையான கச்சதீவை விட்டுக் கொடுத்தது இந்திரா காந்தியின் இந்திய அரசு. காஷ்மீரில் இருந்து ஒரு பிடி மண்ணைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம் என்கிற இந்தியக் குடியரசு தான் பாகிஸ்தானில் இருந்து வங்க தேசத்தைப் துண்டாடிவிட்டு, இந்தியாவின் கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது.
ஈழத் தமிழனின் உரிமைகள் மறுக்கப்பட்டு, உயிர்கள் பறிக்கப்பட்ட அவலநிலையில் வேறு வழியில்லாமல் ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்திரா காந்தி அரசு 1983 இல் அளித்த பயிற்சி அங்கு தமிழீழம் மலர வேண்டும் என்பதற்கல்ல. அது, இலங்கை அரசை அச்சுறுத்த போராளிகளைப் பயன்படுத்திக் கொண்ட இந்தி(ரா)ய அரசின் குள்ளநரித்தனம்.
இந்நிலையில் வந்த ராஜீவ் காந்தி தனது நீண்ட மூக்கை ஈழப் பிரச்னையில் நுழைத்தார். இதிலிருந்தே இலங்கை-இந்தியாவுக்கான கருப்புச் சரித்திரத்துக்குச் சிவப்புச் சாயம் பூசப்பட்டது.
ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தம் போடப்பட்டது. இந்திராவின் குள்ள நரித்தனத்தை மிஞ்சும் ஒரு காரியத்தை ஜெயவர்த்தன செய்து முடித்தார். அதாவது, ஒப்பந்தத்தை அமுலாக்கும் பொறுப்பு இந்திய அரசிடம், அதாவது ராஜீவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி, தமிழ்ப் படையினரின் ஆயுதங்களைத் திரும்பப் பெற இந்தியப் படையினரின் உதவியை இலங்கை நாடியது. ஆக்கிரமிப்பு பேராசையில் இருந்த ராஜீவும் இதற்குப் பலிக்கடா ஆனார்.
‘பிரபாகரனும் ஆயுதங்களை ஒப்படைத்து விடுவார். மூன்று நாட்களில் வேலை முடிந்து விடும்” என்றுகூறி யாழ்ப்பாணம் சென்ற இந்தியப் படை திரும்பி வர மூன்று ஆண்டுகள் ஆனது. பிரபாகரனும் ஆயுதத்தை ஒப்படைக்கவில்லை. சுதந்திர தமிழ் ஈழத்தை உருவாக்கும் முயற்சியையும் கைவிடவில்லை என்பதுதான் இந்திய-இலங்கை அரசுகளின் முகத்தில் அறைந்த உண்மை.
தமிழகத்தில் இருந்து ஒக்டோபர் 3, 1987 இல் திரும்பிக் கொண்டிருந்த புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட 13 பேரை பருத்தித்துறை அருகே கடலில் கைது செய்தது, இலங்கை அரசு. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே அவர்களை உயிரோடு விடக்கூடாது என்று கங்கணம் கட்டியது இலங்கை அரசு. அந்தப் போராளிகள் சயனைட் குப்பிகளைக் கடித்து உயிரை விட்டனர். இந்தச் சம்பவத்துக்குப் பின் தான் ‘எங்களுடைய இராணுவம் பெரியது எங்களால் இருபது ஆண்டுகள் போராட முடியும்” என்கிற திமிரோடு இலங்கையில் திரிந்த இந்தியப் படையினரின் 1,300 வீரர்களை கொன்று குவித்தனர், போராளிகள்.
ராஜீவின் நீண்ட மூக்குடைந்த அந்த ஆத்திரத்தில் ஈழப்பெண்களை சீரழித்தார்கள். அப்பாவித் தமிழர்களைப் பலி கொடுத்தார்கள். வி.பி.சிங் ஆட்சிக்கு வந்ததும் இலங்கையில் ஈழப் பெண்களை துகிலுரித்து பலாத்காரம் செய்த இந்திய அமைதிப் படையைத் (!) திரும்ப அழைத்துக் கொண்டார்.
தமிழர்களின் நலனைப் பாதுகாத்த ராஜீவ்-ஜெயவர்த்தன ஒப்பந்தத்தைப் போராளிகள் ஏற்க மறுத்து விட்டார்கள் என்று தமிழகக் காங்கிரஸார் இன்றும் வாய் கிழிகிறார்கள். ஆனால், அந்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இலங்கையில் இந்திய ஓயில் கோரேஷனுக்குச் சொந்தமான நு}ற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் உருவானது. ஆக, இது யாருடைய நலனைக் கருத்தில் கொண்டு போடப்பட்ட ஒப்பந்தம்? அதில் எப்படி தமிழனுக்குத் தீர்வு கிடைக்கும்? ராஜீவ் து}க்கிப் பிடித்த இலங்கை ஒப்பந்தத்துக்கு நீண்டகால குறிக்கோள் எதுவும் இல்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
ராஜீவ் கொலைக்குப் பின், இந்தியாவில் புலிகள் தடை செய்யப்பட்டனர். ஹிந்து ராம், சோ, சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா, ஞானசேகரன், தங்கபாலு, இளங்கோவன் போன்றோர,; ராஜீவ் கொலையால் ஈழத் தமிழனின் பிரச்சினை திசைமாறிப் போனதாகப் பிரசாரம் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.
நாம் கேட்கிறோம். 60 இல் ஏற்பட்ட சாஸ்திரி-சிறிமாவோ ஒப்பந்தம் எந்தத் தமிழனின் நலனைக் காத்தது?
இந்திரா கச்சதீவை தாரை வார்த்துக் கொடுத்தது ஈழத் தமிழனின் நலனுக்காகவா?
ராஜீவ் காந்தி அமைதிப் படையை அனுப்பி, தமிழ்ப் பெண்களை சீரழித்து போராளிகளின் எண்ணிக்கையையும் ஆவேசத்தையும் அதிகரிக்கச் செய்தது தமிழ் மக்கள் மீதான அக்கறையிலா?
ஏதோ ராஜீவ் காந்தி கொலையால் புலிகளை எதிர்ப்பது போல் காட்டிக் கொள்ளும் காங்கிரஸ் பண்ணையார்களுக்கு ராஜபக்சவுடன் அப்படியென்ன இணக்கம் வேண்டி கிடக்கிறது?
காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் ஹசன் அலிக்கு ஒரு நாட்டின் அதிபரான ராஜபக்ச வாழ்த்துக் கடிதம் எழுத காரணம் என்ன? இதிலெல்லாம் தமிழனின் நலன் என்ன இருக்கிறது?
பாகிஸ்தானும், சீனாவும் இலங்கையோடு கொஞ்சிக் குலாவிடக் கூடாது என்கிற முன்னெச்சரிக்கை உணர்வுடன், ஓடோடிச் சென்று இலங்கைக்கு ஆயுத உதவியைச் செய்தது இந்திய அரசு.
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நளினிக்குத் து}க்குத் தண்டனை இரத்துக்குப் பரிந்துரைத்த ராஜீவ் மனைவி சோனியாவை தியாகத்தின் மறு உருவம்! என்கிறார்கள் கதர் சட்டை கோடீஸ்வரர்கள். அதே நளினியை வேலு}ர் சிறையில் சந்தித்துச் சென்றார், ராஜீவ்-சோனியா தம்பதியின் மகள் பிரியங்கா. ராஜீவ் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த பெங்களூரு ரங்கநாத்தை சந்தித்து சோனியா பேசிய விவகாரம் அண்மையில் தான் வெளியானது.
இதையெல்லாம் கவனித்த போது சாஸ்திரி, இந்திரா, ராஜீவ் காந்தி போன்றோர்கள் ஈழ மண்ணுக்குச் செய்த துரோகத்தை சோனியா தலைமையிலான காங்கிரஸ் மற்றும் இந்தியக் குடியரசு செய்யாது என்கிற ஒரு மாயை உருவானது என்னவோ உண்மைதான். ‘சோனியா குடும்பத்தின் கருணையே கருணை என்று காங்கிரஸ் கi(ர)ற வேஷ்டிகள் ஃபிளக்ஸ் போர்டுகள் அச்சிட்டு மகிழ்ந்ததையும் மறக்க முடியாது. ஆனால், இந்த மாயை ஒரு ஏமாற்று வேலை.
சோனியா தன்னிடம் என்ன பேசினார்? என்று பெங்களுர் ரங்கநாத், நளினி போன்றோரின் பத்திரிகை பேட்டிகளில் இருந்து நாம் அறிவது என்ன?
‘ராஜீவ் காந்தியை ஏன் கொன்றீர்கள்?”
‘ராஜீவ் காந்தியை கொல்ல வந்தவர்கள் என்னென்ன பேசிக் கொண்டார்கள்?”
‘இதில் யாராருக்குத் தொடர்பு இருக்கிறது?”
‘இந்தக் கொலைத் திட்டத்தில் மற்றவர்களின் பங்கு என்ன?”
‘இந்தப் படுகொலை ராஜீவோடு நின்று விடுமா? அவரது வாரிசுகளான எனக்கும், எனது பிள்ளைகளுக்கும் ஏதாவது ஆபத்து ஏற்படுமா?”
இதுபோன்ற கேள்விகளையே சோனியாவும் பிரியங்காவும் கேட்டதாக நளினி மற்றும் ரங்கநாத் ஆகியோர் தெரிவித்திருக்கிறார்கள். இதில், அந்த இறுதிக் கேள்வி தான் முக்கியத்துவம் வாய்ந்தது. ராஜீவைக் கொன்ற நபர்களால் தமக்கும், தமது குடும்பத்துக்கும் ஏதாவது அச்சுறுத்தல் இருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொள்ளவே சோனியா முயல்கிறார். அப்படியென்றால் அவருக்குள் ஒரு நெருடல் இருக்கத்தான் செய்கிறது. அந்த நெருடல் என்ன? ராஜீவ் காந்தியின் அமைதிப்படை இலங்கையில் செய்த அட்டூழியங்களால் பாதிக்கப்பட்ட வேதனைப்பட்ட எத்தனை, எத்தனையோ பேர் மாவீரர்களாக மாறிவிட்ட நிலையில் அவர்களால் நாமும் நமது குடும்பமும் பழி வாங்கப்படுவோமா? என்கிற பயமே சோனியா குடும்பத்தை அச்சுறுத்தி வருகிறது.
‘புலி வாலைப் பிடித்தால் விட்டுவிடக் கூடாது. விட்டால் அது கடித்துவிடும்” என்கிற போக்கில், தன் கணவர் செய்த தவறுக்குப் பிராயச்சித்தம் தேடாமல் அடிபட்ட பாம்பை முற்றிலும் கொன்று விட்டால் வரும் காலத்தில் அது திரும்ப வந்து கடிக்கும் என்று அச்சப்பட வேண்டியதில்லை என்கிற நிலையிலேயே சோனியா அண்ட் குடும்பம் இருக்கிறது. இந்திரா, ராஜீவ் போன்றோர் கூட ஆக்கிரமிப்பு என்கிற பேராசையால் இலங்கைக்கு உதவினார்கள். ஆனால், சோனியாவே அடிப்படை ஆதாரமற்ற உயிர் பயத்தால் வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழ் மக்களைக் கொன்றொழிக்க முயன்று வருகிறார். சோனியாவின் ஆசையை நிறைவேற்றியே ஆகவேண்டிய பொறுப்பிலிருக்கும் மன்மோகன் சிங்கிற்கு வேறு வழி கிடையாது.
படையினரையும், இராணுவ அதிகாரிகளையும், ராடார்களையும், வட்டியில்லா கடன்களையும் வழங்கி, சோனியாவின் கனவில் வந்து பயமுறுத்தும் தமிழ் மக்களை கொன்றொழித்து வருகிறார் மன்மோகன் சிங். அதிலும் எம்.கே.நாராயணன், சிவசங்கரமேனன் போன்ற பாலக்காட்டு பார்ப்பன அதிகாரிகளும் சோனியா மனதில் கொளுந்து விட்டெரியும் பய நெருப்புக்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
சோனியாவைச் சந்தித்த பெங்களுர் ரங்கநாத், ‘ராஜீவ் கொலையாளிகள் சந்திராசாமி, சுப்பிரமணிசுவாமி பற்றியும் பேசிக் கொண்டார்கள்” என்று சொன்னதை சோனியாஜி காதில் போட்டுக் கொள்ளாதது ஏன்? (ராஜீவ் படுகொலை விசாரணையின் போது இதைச் சொன்னதற்காக ரங்கநாத்தின் பல்லை உடைத்திருக்கிறார், ஆன்மீகக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் சாந்த சொரூபியான அப்போதைய சிபிஐ இயக்குநர் டி.ஆர். கார்த்திகேயன்.)
ஒவ்வொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போதும் சுப்பிரமணிய சுவாமி, ‘ராஜீவ் கொலையில் சோனியாவின் பங்கிருக்கிறது” என்று சொல்லி வரும் நிலையில் திருமாவளவனின் உருவப் பொம்மையை எரிக்கும் காங்கிரஸார், சுப்பிரமணிய சுவாமியின் உருவப் பொம்மையை எரிக்காதது ஏன்?
விடயத்துக்கு வருவோம். சோனியாவின் அர்த்தமற்ற, அடிப்படையற்ற அச்சத்தால் பயத்தால் ஈழ மக்கள் இன்றளவும் இன்னல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கணவர் ராஜீவ் செய்த தவறைத் திருத்திக்கொள்ள வழியிருக்கும் போது, அந்தத் தவறைத் திரும்பச் செய்வதன் மூலம் தன்னையும் தன் குடும்பத்தாரையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று சோனியா காந்தி நினைக்கிறார் போலும். இதற்கெல்லாம் காலம் தான் இனி பதில் சொல்லும்!.
Source: http://www.nerudal.com/nerudal.228.html
No comments:
Post a Comment