Friday, October 9, 2009

அரியானா தேர்தலில் கோடீஸ்வர வேட்பாளர்கள் அதிகம்






சண்டிகார் : அரியானா சட்டசபைத் தேர்தலில், கோடீஸ்வரர்கள் அதிக அளவில் போட்டியிடுகின்றனர். அரியானாவில், அடுத்த வாரம் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. 90 இடங்களுக்கான இந்த தேர்தலில், கோடீஸ்வர வேட்பாளர்கள் 251 பேர் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் சார்பில் 72 கோடீஸ்வரர்களும், இந்திய தேசிய லோக் தளம் சார்பில் 56 பேரும், அரியானா ஜன்ஹித் காங்கிரஸ் சார்பில் 44 கோடீஸ்வரர்களும் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் முதல்வர் பஜன்லாலின் அரியானா ஜன்ஹித் காங்கிரஸ் கட்சி சார்பில், கோஸ்லி தொகுதியில் போட்டியிடும் மோகித்யாதவ் தனக்கு 92 கோடியே 70 லட்ச ரூபாய் சொத்து உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக, அம்பாலா தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வினோத்சர்மா, தனக்கு 87 கோடியே 40 லட்ச ரூபாய் சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரபல தொழிலதிபர் நவீன் ஜிண்டாலின் தாயார் சாவித்ரி ஜிண்டால், காங்கிரஸ் கட்சி சார்பில் ஹிஸ்சார் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் 44 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். மாநில முதல்வர் பூபிந்தர் சிங்கை எதிர்த்து, ரோதக் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பதே சிங், தனக்கு 29 கோடி ரூபாய் சொத்து உள்ளதை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அரியானா காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்பாளர்
பிரகாஷ் குறிப்பிடுகையில், "அரியானா மாநிலம் டில்லிக்கு அருகே உள்ளதால், இங்கு நிலங்களின் விலை பல மடங்கு கூடியுள்ளது. ஐந்து ஏக்கர் நிலம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் விலை போகிறது. எனவே, ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருந்தால் அவர் தற்போது கோடீஸ்வரர்' என்றார். ஏழைகள் பலரும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இஸ்ரானா தொகுதியில், சமஸ்த் பாரதிய கட்சியின் சார்பில் போட்டியிடும் ராம் நிவாஸ் என்பவர், தனக்கு சொத்து ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார்.
பிரித்தாலா தொகுதியில், அரியானா ஜன்ஹித் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நிர்மலா பன்சால், தன்னுடைய கையிருப்பு ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே, என தெரிவித்துள்ளார். இதே போல நர்வானா தொகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சத்பால் சரோகா என்பவர் தன்னுடைய கையிருப்பு, இரண்டாயிரத்து 500 ரூபாய்மட்டும் தான், என தெரிவித்துள்ளார்.

Source:http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?News_id=5233

No comments:

Post a Comment