போருக்குப் பின்னர் இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை குறித்து உண்மையைக் கண்டறிவதற்காக தி.மு.க. அணியைச் சேர்ந்த தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் இன்று சனிக்கிழமை கொழும்பு செல்கின்றனர்.
இருந்தபோதிலும், இவர்கள் வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கு அரசின் முக்கிய அமைச்சர்களுடனேயே அழைத்துச் செல்லப்படவிருப்பதாகவும் சுதந்திரமான முறையில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்திருக்கின்றது.
வடபகுதியில் இந்தக் குழுவினர் மேற்கொள்ளவிருக்கும் பயணங்கள் அனைத்தும் அரசினால் 'வழிகாட்டப்படும்' பயணங்களாகவே இருக்கும்.
வவுனியா முகாம்களுக்கு இவர்கள் செல்லும்போது புனர்வாழ்வுக்குப் பொறுப்பாகவுள்ள அமைச்சர் ரிசாட் பதியுதீன் இவர்களுடன் செல்வார். மெனிக் பாமில் வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு காட்டுவதற்கு எனத் தயாரிக்கப்பட்டுள்ள முகாமுக்கு மட்டுமே இவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அத்துடன், பாதுகாப்பு உட்பட பல்வேறு காரணங்களைக் காட்டி ஏனைய முகாம்களை பார்வையிடுவதற்கு இவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிகின்றது.
வழமையாக முகாம்களை பார்வையிட வரும் வெளிநாட்டுப் பிரிதிநிதிகளை கையாள்வதைப் போலத்தான் இவர்களையும் கையாள்வதற்கு அரசு திட்டமிட்டிருக்கின்றது.
இதேவேளையில் நாளை இவர்களை யாழ்ப்பாணத்துக்கு அழைத்துச் செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பயணத்தின் ஒரு கட்டமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சந்திப்பு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் ஈ.பி.டி.பி. துணைப் படைக்குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொள்ளவிருப்பதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவான முறையில் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு எதிரான கருத்துக்கள் அங்கு தெரிவிக்கப்படுவதைத் தடுக்கமுடியும் என அரசு கருதுகின்றது.
சிறிலங்காவில் ஐந்து நாட்கள் தங்கியிருக்கும் அவர்கள், தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட உள்ளனர்.
இந்த காலத்தில் மூன்று விடயங்கள் தொடர்பாக அவர்கள் கவனம் செலுத்துவார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒன்று - முகாம்களின் நிலைமை மற்றும் அங்குள்ள மனிதார்ந்த பிரச்சினை. இரண்டு - மீள்குடியேற்ற நடவடிக்கைகள், மூன்று - கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்.
இதனைவிட சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்டோரையும் சந்தித்து பேச உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுடனான சந்திப்பு ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிலைமை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட வருமாறு முதல்வர் கருணாநிதிக்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்திருந்தார்.
அவரது அழைப்பை ஏற்று, முதல்வர் கருணாநிதி சார்பில் தி.மு.க. அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேரை கொழும்புக்கு அனுப்பிவைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி தீர்மானித்திருந்தார்.
தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான இந்தக் குழுவில், ஏ.கே.எஸ்.விஜயன், கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஹெலன் டேவிட்சன் ஆகிய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும், கே.எஸ்.அழகிரி, என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், ஜே.எம்.ஆரூண் ஆகிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவனும் இடம்பெற்றுள்ளனர்.
இன்று கொழும்பு செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர், முதல்வர் கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துப் பேசினர்.
இது தொடர்பாக இந்த குழுவின் தலைவரான தங்கபாலு கருத்து வெளியிடுகையில், முதல்வர் சார்பில் தி.மு.க. அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேரை அனுப்ப முடிவு செய்திருக்கிறோம். அங்குள்ள உண்மை நிலவரங்களை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிப்பார்கள். அதன் அடிப்படையில், முதல்வரும், நாங்களும் எங்களது கருத்துக்களை மத்திய அரசிடம் அளிப்போம் எனத் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்து இந்திய மற்றும் சிறிலங்கா அரசுகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன. இது குறித்த முறையான அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்றார் தங்கபாலு.
இதேவேளையில், தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ளவிருக்கும் இந்தப் பயணத்தின் மூலமாக சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் பலப்படும் எனத் தெரிவித்திருக்கும் சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க, இடம்பெயர்ந்த மக்களின் நிலை தொடர்பாக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொய்ப் பிரச்சாரங்களை இதன் மூலம் முடிவுக்கு கொண்டுவரக் கூடியதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
அதேவேளையில், சிறிலங்காவில் இருந்தும் அனைத்துக் கட்சிகளின் குழு ஒன்று விரைவில் தமிழ்நாட்டுக்கு செல்லவிருப்பதாகவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.
சிறிலங்கா அரசை பொறுத்தவரையில் இன்று செல்லும் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவை சமாதானப்படுத்தி திருப்பி அனுப்பிவைத்துவிட முடியும் எனக் கருதுவதுடன், தமது பிரச்சாரத்துக்கும் அவர்களைப் பயன்படுத்தலாம் எனத் திட்டமிட்டு செயற்படுகின்றது என்பதை அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.
இன்று கொழும்பு செல்லும் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள், 'இந்து' ஆசிரியர் என்.ராம் போல சிறிலங்காவின் பிரச்சாரங்களுக்கு துணை போகப் போகின்றார்களா அல்லது உண்மைகளை வெளிக்கொணர்வதற்கு முயற்சிப்பார்களா என்பதுதான் இன்று ஈழத் தமிழர்கள் அனைவரிடமும் எழும் கேள்வி.
பல வெளிநாட்டுத் தூதுக்குழுக்கள் வடபகுதிக்கு சென்று இடம்பெயர்ந்த மக்களின் முகாம் நிலைமைகளை ஏற்கனவே பார்வையிட்டுள்ளன.
குறிப்பாக ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் ஐ.நா. உயர் அதிகாரிகள், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இவற்றைப் பார்வையிட்டு சென்றுள்ளார்கள்.
முகாம்களின் மோசமான நிலைமை தொடர்பாக தமது இந்தப் பயணங்களின் பின்னர் கவலையுடன் குறிப்பிடும் அவர்கள், முகாம்களில் உள்ள மக்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்பதைத்தான் வலியுறுத்திச் சென்றிருந்தார்கள்.
இவை அனைத்தும் வெறும் அறிக்கைகளாக மட்டுமே உள்ள நிலையில், தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்து போயுள்ளனர்.
ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று செல்கின்றது என்பது பெரும் விரக்திகளுக்கு மத்தியிலும் அவர்களுக்கு ஒருவித நம்பிக்கையை அளிப்பதாக அமைந்திருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.
தொப்புள் கொடி உறவைக்கொண்டுள்ள தமிழ்நாட்டின் தலைவர்கள் தம்மைப் பாதுகப்பார்கள் என்ற காலாதி காலமான அவர்களின் நம்பிக்கைக்கான இறுதிப் பரிசோதனையாக இந்தப் பயணம் அமைந்துள்ளது.
ஐ.நா. போலவோ மேற்குலக நாடுகளைப் போலவோ வெறுமனே அறிக்கைகளை வெளியிடுவதுடன் தமது பணியை அவர்கள் நிறுத்திக்கொள்ள மாட்டார்கள் என ஈழத் தமிழர்கள் நம்புகின்றார்கள். தமிழ்நாட்டில் இவர்களின் வருகை அசைவை ஏற்படுத்தும் என்றே அவர்கள் நம்புகின்றார்கள்.
தமிழ்நாட்டு தலைவர்களின் பயணம் - அவர்கள் சிறிலங்காவின் வழிநடத்தலில்தான் நடந்துகொள்ளப் போகின்றார்களா என்பதும், நாடு திரும்பிய பின்னர் அவர்கள் எடுக்கப்போகும் நடவடிக்கைகளும்தான் முகாம் மக்களின் விடிவுக்கான வழியைத் திறப்பதாக அமையும். அவர்களும் அறிக்கைகளுடன் தமது பணியை முடித்துக்கொண்டால் முகாம் மக்களுக்கு விடிவு இல்லை என்பதுதான் அர்த்தமாக இருக்கும்.
No comments:
Post a Comment